சனி, 31 அக்டோபர், 2015

வாணிதாசன் விழா பாடல்!




கலைவாணி பெற்றெடுத்த வாணி தாசர்!
      கவிஞரேறு பேறுபெற்ற தமிழின் நேசர்!
சிலைபோன்று செதுக்கிவைத்த பாக்கள் சொல்லும்
      சீர்மிகுந்த இசைப்பாக்கள் தஞ்சம் என்று!
மலைத்தேனும் தோற்றோடும் வண்ணம் இந்த
      மாமனிதர் நூல்படித்தால் தோன்றும் எண்ணம்!
அலையல்ல வந்துபோக! நிலையாய் நிற்கும்
      அரசுடமை கொண்டதுவும் உயர்வே என்றும்!

தொடுவானம் இசைப்பாட்டாய்த் தந்தார்! நல்ல
      தோழியினைத் தேவதையாய்க் கண்டார்! மாதர்
படுவதையே “விதவைக்கோர்ச் செய்தி“ சொன்னார்!
      பாட்டும்பி றக்குமெனப் பாடி வைத்தார்!
நடுஇரவில் கடிதங்கள் வரைந்து கொண்டே
      நல்லிரவு வரவில்லை என்றார்! நன்மை
கொடுக்கின்ற வாழையடி வாழை போல
      கொடிமுல்லை காப்பியமும் சுவைக்க தந்தார்!

வீட்டுக்குச் சேர்த்துவிட்டு வெறுங்கை காட்டி
      வெள்ளைவேட்டி வேசமுடன் நடப்போர்க் குள்ளே
நாட்டுக்கு நன்மைகளைச் சொல்லிச் செல்லும்
      நன்மனது கொண்டவர்கள் சிலரே! உள்ளக்
கூட்டுக்குள் சமுதாய நலத்தைக் கோண்டோர்
      குறிப்பெடுத்தே ஒருசிலரை நோக்கிப் பார்க்க
பாட்டுக்குள் நற்கருத்தைச் சொல்லிச் சென்ற
      பாவலராம் வாணிதாசர் புகழும் வாழ்க!


கவிஞர் அருணா செல்வம்
13.02.2015

5 கருத்துகள்: