வெள்ளி, 4 டிசம்பர், 2015

சாக்கடை நீராய்ப் போனதடி!

கொட்டோ  கொட்டுனு
கொட்டுதடி  வானம்! - மனம்
தொட்டோ  விட்டுடுன்னு
முட்டுதடி  பாவம்!

சின்னச்  சின்னத்  துளியெல்லாம்
சேர்ந்து  தேங்கி  போனதடி!
சின்ன  எறும்பாய்ச் சேர்த்ததெல்லாம்
சேர்ந்தே பாழாய்ப் போனதடி!

கடனோ உடனே வாங்கிநாங்கள்
கஷ்டப்  பட்டு  வைத்தததைத்
தடமே  எதுவும்  காட்டாமல்
இஷ்டம் போல  போனதடி!

பயிர்கள்  செழிக்க  மழைவேண்ட
பன்னீர்ப்  போலத்  தெளிக்காமல்
உயிர்கள்  அலற  வைத்துவிட்டு
உதவா வண்ணம்  போகுதடி!

அளவாய்க்  கிடைத்தால்  அமிர்தம்தான்!
அளவோ  மிஞ்ச  விஷமாகி
வளமாய்  இருந்த  மக்களையும்
வாழ்வைச்  சிதைத்து  விட்டதடி!

தாகம்  எடுத்தால்  உதவுவதே
தண்ணீர்  கொண்ட  பயனாகும்!
சாகும்  தருவில்  உதவாத
சாக்கடை  நீராய்ப்  போனதடி!!


கவிஞர்  அருணா  செல்வம்
05.11.2015 

8 கருத்துகள்:

  1. அருணா! உங்க ஊரிலே [பாண்டி] மழை எப்படி? கடலூர் அளவு மோசமா?

    பதிலளிநீக்கு
  2. விரைவில் சீராக ஆண்டவனை வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
  3. நல்ல வரிகள் சகோ! ஆனால், நாம் செய்த தவறுகளுக்குத்தானே இயற்கை சீறிவிட்டு எச்சரித்துள்ளது.இனியேனும் மக்கள்/தலைவர்கள் திருந்த வேண்டும்

    பதிலளிநீக்கு
  4. தொண்டர்களை
    கடவுளின் பிள்ளைகளாக
    வணங்குகின்றேன்

    வானிலிருந்து - கடவுள்
    தன் திருவிளையாடலைக் காட்ட
    தரையிலிருந்து - மக்கள்
    துயருறும் நிலை தொடராமலிருக்க
    கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

    போதும் போதும் கடவுளே! - உன்
    திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

    கடவுளே! கண் திறந்து பாராயோ!
    http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.html

    பதிலளிநீக்கு
  5. //தாகம் எடுத்தால் உதவுவதே
    தண்ணீர் கொண்ட பயனாகும்!
    சாகும் தருவில் உதவாத
    சாக்கடை நீராய்ப் போனதடி!!//
    என் மனதைத் தொட்ட வரிகள்

    பதிலளிநீக்கு
  6. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

    - சாமானியன்

    எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

    பதிலளிநீக்கு