வியாழன், 5 ஜூன், 2014

சத்திரத்துச் சாப்பாடு!



    நாகப்பட்டினத்தில் காத்தான் சத்திரம் என்று ஒன்று இருந்தது. அந்தப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த காளமேகப்புலவர் உணவுக்காகச் சென்றார். பகலெல்லாம் காத்திருக்கச் செய்து, இரவில் நெடுநேரத்திற்குப் பின்னரே சாப்பாடு என்று ஏதோ ஒன்றையும் அங்கே அவருக்குப் போட்டார்கள். கவிஞரின் பொறுமை அதற்குமேலும் நிலைபெறவில்லை. உடனே இப்படிப் பாடுகின்றார்.

கத்துக்கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதி லரிசிவரும் – குத்தி
உலையிலிட வூரடங்கு மோரகப்பை யன்னம்
இலையிலிட வெள்ளி எழும்.

பொருள்.

ஒலிக்குங் கடலின் ஆரவாரத்தினாலே சூழப்பெற்றிருக்கின்ற, இந்த நாகப்பட்டினத்துக் காத்தான் என்பவனுடைய சத்திரத்திலே, பொழுது மலைவாயிற் சென்று மறைகின்ற பொழுதினிலேதான் அரிசி வரும். அரிசியைத் தீட்டி உலையிலே இவர்கள் இடுவதற்குள்ளாக ஊரெல்லாம் உறங்கி ஒலியடங்கிப் போகும். இவர்கள் இரவலர்க்கு ஓர் அகப்பை அன்னத்தை இலையில் இடவும் வேண்டுமானால், அதற்குள் விடிவெள்ளியே வானத்தில் எழுந்துவிடும்.
(இதுவும் ஒரு சத்திரமோ? என்பது குறிப்பு.)

    இதனைக் கேட்ட சத்திரத்தினர் காத்தானிடம் சென்று இந்தப் பாடலைச் சொன்னார்கள். அவன் செய்தியைப் புரிந்து கொண்டான். திருத்தங்களை உடனே செய்தான். காளமேகத்திடம் வந்து, தன்னைப் பொறுத்தருளும்படி வேண்டினான். அப்போது, கவிஞர் அவனுடைய மனமாற்றத்தைப் பாராட்டியவராகப் பொருளினை மாற்றி உரைத்து அவனை மனமகிழுமாறு செய்தார்.
  
படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

12 கருத்துகள்:

  1. வணக்கம்
    பாடலும் அதற்கான விளக்கமும் அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    த.ம1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. கவி காளமேகம் பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! தனிப்பாடல் வரிசையில் எனக்கும் இந்த பாடல் பிடிக்கும்.

    பாடல் கருத்துரை என்று எழுதுவதை விட, உங்கள் கற்பனை நடையில் இந்த பாடலை கதையாகவும், கதைக்குப் பின் பாடல் மற்றும் கருத்தும் தந்தால் சிறப்பாக இருக்கும்.

    த.ம.2

    பதிலளிநீக்கு
  4. எனக்குப் பிடித்த காளமேகத்தின் பாடலை உங்களுக்கும் பிடித்ததென்று நீங்கள் வெளியிட்டது எனக்குப் பிடித்திருக்கிறது.

    அதற்கு நீங்கள் தந்த விளக்கம் ’மிகவும்’ பிடித்திருக்கிறது.

    உங்களைப் பாராட்டிக் கருத்துத் தெரிவிப்பது, ‘மிக மிக’ப் பிடித்திருக்கிறது.

    வாழ்த்துகள் அருணா.

    பதிலளிநீக்கு
  5. காளமேகப்புலவரின் சிலேடை அருமை! அந்த இன்னொரு பொருளையும் கூறி இருக்கலாமே! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. காளமேகப்புலவரின் சிலேடை அருமை! இரண்டாவது பொருளையும் பகிர்ந்து இருக்கலாமே! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. சில வாரங்களுக்கு முன்னர் நீங்கள் எழுதியிருந்த காளமேகபுலவர் பற்றிய பதிவுக்கு அளித்த பின்னூட்டத்தில் இந்த பாடலை கேட்டிருந்தேன். இந்த பதிவை கண்டு மகிழ்ந்தேன்.

    " பின்னரே சாப்பாடு என்று ஏதோ ஒன்றையும் அங்கே அவருக்குப் போட்டார்கள்... "

    கவிச்சுவையோடு இயல்பான நகைச்சுவையும் உங்களுக்கு இருக்கிறது அருணா செல்வம் அவர்களே !

    இந்த பாடலின் மாற்று பொருளினையும் எழுதினால்தான் இந்த சாமானிய ஞானசூனியத்துக்கு புரியும் ! எழுதுவீர்களா ?

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  8. சிலேடை கவி காளமேகத்தின் இந்த பாடலின் மற்றுமொரு அர்த்தம் உண்டல்லவா? சகோதரி!! மிகவும் அருமையான பாடல்! விளக்கமும் அருமை! காளமேகக் கவியின் பாடல்களை ரசிக்கும் நாங்கள் தங்களும் அதை ரசித்து பகிர்ந்ததற்கு மிக்க நன்றி! மகிழ்சி!

    தொடருங்கள் சகோதரி!

    பதிலளிநீக்கு
  9. பாடலின் மாற்றுப் பொருளையும் வெளியிட்டிருக்கலாமே.....

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  10. ஒலிக்குங் கடலின் ஆரவாரத்தினாலே சூழப்பெற்றிருக்கின்ற, இந்த நாகப்பட்டினத்துக் காத்தான் என்பவனுடைய சத்திரத்திலே, பொழுது மலைவாயிற் சென்று மறைகின்ற பொழுதினிலே அரிசி வரும். அந்த அரிசியை இரவெல்லாம் தீட்டி, ஊரெல்லாம் உறங்கி ஒலியடங்கிய நேரத்திலேயே உலையிலே இடுவார்கள். காலையில் விடிவெள்ளி வானத்தில் எழும்பொழுதே இரவலர்களின் அகம் இருக்கும் பையிக்கு அன்னம் இடுவார்கள். என்று பொருளினை மாற்றி உரைத்து அவன் மனம் மகிழுமாறு செய்தார்.
    அதாவது அந்தச் சத்திரத்தில் இரவெல்லாம் உழைத்து விடிகாலையிலேயே உணவு இடுகிறார்கள்.
    இது தான் அந்தப் பாடலின் இரண்டாவது பொருள்.
    Courtesy: http://thenkoodu.in/manage_blogs.php?blogid=78477&url=arouna-selvame.blogspot.com/2014/06/2.html

    பதிலளிநீக்கு