திங்கள், 30 ஜூன், 2014

புதுமைப்பெண்!!



அவை வணக்கம்!

தங்கத் தமிழைப் படைத்திட்ட
    தமிழின் தலைவா முதல் வணக்கம்!
எங்கும் நிறைந்து கமழ்கின்ற
    எழிலே தமிழே என்வணக்கம்!
சங்கம் வைத்துத் தமிழ்வளர்க்கும்
   சான்றோர் தமக்கும் தலைவிக்கும்
அங்கம் சிலிர்க்கத் தமிழ்கேட்கும்
   அவைக்கும் என்தன் நல்வணக்கம்!!

புதுமைப்பெண்!

தலைமுறைகள் பற்பலவும் கடந்தா யிற்று!
    தன்னிசையாய் முடிவெடுக்கும் உரிமை இல்லை!
சிலமுறைகள் கொஞ்சமேனும் மாறி வந்தும்
    சிலர்மட்டும் பெறமுடிந்த அளவே உண்டு!
பலமுறைகள் முயன்றுபார்த்தும் தோல்வி கண்டே
    பழங்கால பாழ்கிணற்றில் நீந்து கின்றோம்!
அலைமுறையில் வந்துபோகும் உரிமை யைநாம்
    அடக்கிவைத்தல் என்பதுதான் புதுமை அன்றோ!

போராட்டம் என்பதுதான் வாழ்க்கை என்றால்
    புதுமுறையில் போராடி வெற்றி காண்போம்!
சீரோடும் சிறப்போடும் வாழ்வ தற்கு
    சிரிப்பொன்றை ஆயுதமாய் முகத்தில் கொள்வோம்!
நீரோடும் இடத்தில்வேர் ஓடும்! அன்பு
    நீங்காத இடத்தினிலே பகைமை ஓடும்!
கூரான வாள்கொண்டால் பயனோ இல்லை!
    குளிர்தமிழில் இவ்வாறாய்ச் சொல்தல் நன்றே!

இதுதானே பண்பாடு என்று நம்பி
    இருந்திருந்தே பெண்களெல்லாம் அடிமை யானார்!
அதுவல்ல பெண்ணினத்தில் உரிமை காக்க
    ஆண்களிதைக் கையாண்டே அடக்கி விட்டார்!
முதுகவிகள் மூதாதை சொன்ன தெல்லாம்
    முதல்தெய்வம் என்றுபெண்ணை நினைத்த தாலே!
மதுகவியில் சொன்னதெல்லாம் உண்மை! உண்மை!
    மாறிவிட்ட நிலையிலதில் இல்லை நன்மை!

கற்களிலே உள்ளிருக்கும் சிலையைப் பார்க்கக்
    காலமெல்லாம் காத்திருக்கும் மூடன் போல
முற்களின்மேல் வாழ்க்கையென்றே கவலைப் பட்டு
    முயற்சியின்றிப் பயந்துநின்றே வீணாய்ப் போனோம்!
சொற்களிலே அன்புபூச மயங்கும் வார்த்தை!
    சூடேற்றி அச்சொல்லை உரக்கச் சொல்லு!
தற்காலப் பெண்ணென்போர் தாழ்வாய் இல்லை
    தரணிபோற்ற பிறந்ததைநீ தெளிவாய்ச் சொல்லு!

பெண்ணென்றால் பூப்போன்ற உள்ளம் என்று
    பொதுப்படையாய்ப் பெரியோர்கள் சொல்லி வைத்தார்!
மண்ணென்ற பூமிதனில் பிறந்த பூவோ
    மல்லிகையாய்ப் பிறந்தவிட்டால் ஒருநாள் வாழ்வே!
உண்ணென்று உவந்தளிக்கும் கனிகள் எல்லாம்
    ஒருபூவில் பூத்துவந்த உயர்வைக் கண்டால்
கண்காணும் அழகையவர் சொல்ல வில்லை!
    கனிக்குள்ளே விதைக்கண்ட கருவைச் சொன்னார்!

சூழ்ச்சிகளில் நமைவீழ்த்தும் சதியை எல்லாம்
    சுயமாகச் சிந்தித்தே அதனை வெல்வோம்!
வீழ்ச்சிஎன வீழ்ந்தாலும் அருவி நீராய்
    வீறுகொண்டே எழுந்தொடி நன்மை செய்வோம்!
தாழ்த்திநம்மை பேசுகின்ற கயவர் கண்டால்
    தடைகள்ளாய் அதைநினைத்துத் தாண்டிச் செல்வோம்!
ஆழ்த்துகின்ற மனக்கவலை யாருக் கில்லை
    அதைக்கூட அடிமையாக்கி புதுமைக் காண்போம்!

 உதித்தெழுந்த சூரியனும் உதிப்பான் மீண்டும்!
    உனக்குள்ளே இருப்பவனோ உறங்கு கின்றான்!
மதிதிறந்து அவனைநீ விழிக்கச் செய்தால்
    மனப்பேயின் பயமெல்லாம் ஓடிப் போகும்!
சதிசெய்த சாத்திரத்தை நகர்த்தி வைப்போம்!
    சாதிக்கப் பிறந்துவளாய் நிமிர்ந்து நிற்போம்!
பொதியல்ல நாம்வாழும் வாழ்க்கை! பெண்ணே
    புதிதாகச் சிந்தித்தால் புதுமை பூக்கும்!


(26.06.2014 அன்று பிரான்ஸ் கம்பன் கழகம் நடத்திய “மகளிர் விழா“ வில் வாசித்தக் கவிதை)

அருணா செல்வம்

25.06.2014

30 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அடடா.... கவிதைக்கு ஓட்டும் போட்டு இருக்கிறீர்கள்.

      (இனி உங்களுக்காக நிறைய கவிதைகள் எழுதி கொள்(ல்)கிறேன்.))))

      நன்றி. நன்றி.

      நீக்கு
  2. அட.... நீங்கள் கூட கவிதை படிப்பீர்களா.....?!!!!

    அதிலும் அருமை என்று பாராட்டி எழுதி இருக்கிறீர்கள்....!!!!

    கவிதையையே படிக்காத விரும்பாத ஒருவரை என் கவிதை ஈர்த்து இருக்கிறது என்றால்.... அது என் தமிழுக்குக் கிடைத்த பெருமை அல்லவா....

    மிக்க நன்றி “உண்மைகள்“

    பதிலளிநீக்கு
  3. நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
    திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
    செம்மை மாதர திறம்புவ தில்லையாம்
    அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
    அவல மெய்திக் கலைன்றி வாழ்வதை
    உமிழ்ந்த தள்ளுதல் பெண்ணணு மாகுமாம்

    என்று பாடுவார் பாரதி, அந்தப் பாரதி கண்ட புதுமைப் பெண்ணைத்
    தங்கள் பாட்டிலும் கண்டேன் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாரதி கண்ட புதுமைப் பெண்ணை என் பாட்டிலும் கண்டீர்களா...?
      மிக்க மகிழ்ச்சி ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. //கவிதையையே படிக்காத விரும்பாத ஒருவரை என் கவிதை ஈர்த்து இருக்கிறது என்றால்//

    சிறுவயதில் நான் கவிதையை தேடிச் சென்று படித்தது போல இப்போது படிப்பதில்லைதான். ஆனால் நான் தொடரும் பதிவர்கள் கவிதை எழுதினால் அதை படிக்காமல் பாராட்டாமல் சென்றதில்லை....

    சில சமயங்களில் சில கவிதைகள் புரியாது அதனால் அந்த கவிதைகளை நன்றாக இல்லை என்று அர்த்தம் இல்லை அதை 'புரிந்து கொள்ளும் அறிவுதான்' எனக்கு இல்லை என்பதுதான் உண்மை.

    பதிலளிநீக்கு
  5. மகளிர் விழாவிற்கேற்ற கவிதை....

    பாராட்டுகள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு
  7. சந்தம் விளையாடுகிறது. புதுமைப் பெண்ணாய் பொங்கி எழுந்து விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ....)))

      எவ்வளவு காலத்திற்குத் தான் சோறு மட்டும் பொங்குவது....
      எழுத்திலும் கொஞ்சம் பொங்கலாமே என்று தான்....

      நீக்கு
  8. //தலைமுறைகள் பற்பலவும் கடந்தா யிற்று!
    தன்னிசையாய் முடிவெடுக்கும் உரிமை இல்லை!
    சிலமுறைகள் கொஞ்சமேனும் மாறி வந்தும்
    சிலர்மட்டும் பெறமுடிந்த அளவே உண்டு!
    பலமுறைகள் முயன்றுபார்த்தும் தோல்வி கண்டே
    பழங்கால பாழ்கிணற்றில் நீந்து கின்றோம்!
    அலைமுறையில் வந்துபோகும் உரிமை யைநாம்
    அடக்கிவைத்தல் என்பதுதான் புதுமை அன்றோ!//

    தற்கால ஆண்களுக்கும் பொருத்தமா இருக்கும் போல இருக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தற்காலத்தில் சில ஆண்களுக்கும் இது பொருத்தமாகத் தான் இருக்கும் போல இருக்கிறது....

      நான் “அந்த“ வகையில் யோசிக்க வில்லை.

      நீக்கு
  9. பதில்கள்
    1. எனக்கும் மிகவும் பிடிக்கும்.

      எழுதத் துவங்கினால் சரளமாக வந்துவிடும்.

      ஆனால் இப்படிப்பட்ட மரபுக் கவிதைகளை ஒரு சிலரைத் தவிர மற்ற யாரும் விரும்புவதில்லை என்றே நினைக்கிறேன். இனி கவியரங்கத்திற்கு மட்டும் கவிதை எழுதலாம் என்று இருக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  10. சகோதரி,
    மிகத் தாமதமாகவே உங்கள் பதிவுக்கு ( பயந்து ) கொண்டே வருகிறேன்.
    நீங்கள், பாரதிதாசன் அய்யா, சகோதரி, இனியா, இளமதி,
    சீராளன், சிவக்குமரன், என்று என்னை மரபுக்கவிதைகளில் மிரட்டுகின்ற பெரும்படையே இணைய உலகில் இருக்கிறது.
    வெண்பாவை, விருத்தத்தை இப்படி அநாயாசமாக எழுதுபவர்கள் தமிழ்நாட்டில் மிகக் குறைவாகத்தான இருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.
    சிந்தனை, சீற்றம், சவுக்கடிகள் என்று வளர்ந்து நிற்கும்உங்கள் கவிதை,
    “ பொதியல்ல நாம்வாழும் வாழ்க்கை! பெண்ணே
    புதிதாகச் சிந்தித்தால் புதுமை பூக்கும்!“
    எனுமிடத்தில் உச்சம் தொட்டு விடுகிறது. ஒவ்வொரு வரியையும் எடுத்து நிறைய சொல்லத் தோன்றுகிறது. எழுதினால் அது தனிப்பதிவாய் விடும்.
    இப்போதுதான் பின்னூட்டங்களில் வளவள வென எழுதக்கூடாது என முடிவு செய்திருந்தேன். உங்கள் கவிதையைப் பார்த்த பின் அந்தத் தீர்மானத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டாயிற்று.
    கவிதை இனிது.
    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா.

      தங்களின் வருகையும் பின்னுர்ட்டமும் என்னை மகிழ்வில் ஆழ்த்துகிறது.
      என் கவிதையைப் பார்த்த பின் உங்களின் தீர்மானத்தையே புறக்கடித்ததாக எழுதி வார்த்தையிலேயே உங்களின் தமிழ்ப் பற்றை அறியமுடிகிறது.

      நன்றியுடன் வணங்குகிறேன் “ஊமைக்கனவுகள்“ ஐயா.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  12. அருமை சகோதரி! பெருமை சேர்த்துவிட்டீர்கள் பெண்களுக்கு! தமிழுக்கும்! கடல் கடந்து தமிழை இவ்வளவு அழகாக வளர்க்கின்றீர்கள்! கவியரங்கில் வாசித்ததற்கு வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு
  13. எண்சீர் விருத்தக் கவிதை அருமை அதற்காகவே என் எட்டாவது வாக்கு !
    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் ஓட்டிற்கும்
      மிக்க நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  14. "பெண்ணே
    புதிதாகச் சிந்தித்தால்
    புதுமை பூக்கும்!" என
    சிறப்புக் கவிதையில்
    சிறந்த எண்ணங்கள் இருக்கக் கண்டேன்!

    பதிலளிநீக்கு
  15. "பெண்ணே
    புதிதாகச் சிந்தித்தால்
    புதுமை பூக்கும்!" என
    சிறப்புக் கவிதையில்
    சிறந்த எண்ணங்கள் இருக்கக் கண்டேன்!

    பதிலளிநீக்கு
  16. "பெண்ணே
    புதிதாகச் சிந்தித்தால்
    புதுமை பூக்கும்!" என
    சிறப்புக் கவிதையில்
    சிறந்த எண்ணங்கள் இருக்கக் கண்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு
  17. இப்போது படித்து ரசிக்கிறேன்... 26.06.2014 அன்று பிரான்ஸ் கம்பன் கழகம் நடத்திய “மகளிர் விழா“ வில் வாசித்ததையும் அங்கிருந்து கேட்டு ரசித்தேன் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு