வியாழன், 9 ஆகஸ்ட், 2012

தமிழ் அழகு!! (கவிதை)



 பதிற்றந்தாதி

எண்ணப் பறவை எழுந்துதன் வாய்திறந்து
சொன்ன சுவையினைச் சொல்லிடவா? – மின்னிடும்
வண்ண வடிவழகை வார்த்தையில் வார்த்திடும்
கன்னல் மொழியில் கலந்து!

கலந்து கிளர்ந்த களவை எழிலாய்
மலர்ந்து நிறைந்த மனத்தில் – நலமாய்
புலர்ந்து விடிந்த பொழுதின் அழகாய்
வளர்ந்த தமிழை வரைந்து!

வரைய அளைந்திடும் கோலம்! வளர
விரைய அழிந்திடும் காலம்! – விரைந்து
நிறைந்த தமிழழகு நீங்காமல் நிற்க
குறைந்து மறையுமா? கூறு!

கூறும் நலத்தால் குடிகள் மனத்திலே
ஏறும் வளமாய் எழில்தமிழாய்! – வீறுகொண்டு
சேரும் மனத்தில் செழித்திடும் செந்தமிழால்
பேரும் பெருமையும் பார்!

பாருங்கள் என்றதும் பாவலர் பாடிடுவார்!
பார்..எங்கள் பாக்களைப் பார்ப்பதனால் – சீராக்கும்!
ஏர்..எங்கள் எண்ணங்கள்! என்றும் தமிழழகைச்
சேருங்கள் செம்மை கொடுத்து!

கொடுத்து வளர்த்த கொடைகளைநாம் பாவில்
எடுத்து வடித்திடுவோம்! இன்பம் – அடுக்கித்
தொடுத்த கவித்தொடரில் துன்பமும் நன்றாய்
விடுக்கும் இனிய விருந்து!

விருந்தின் அறுசுவையை நாபெறும்! வேண்டும்
மருந்தின் தருசுவையை ஊனே – அருந்தும்!
கருத்தின் பெறுசுவையைக் கற்றோர்!சீர் உற்றோர்
பொருந்தப் பெறுவார் புகழ்ந்து!

புகழும் பணப்பெருக்கால் பூரிக்கும் நெஞ்சை
இகழும் இழிவென்றே! என்றும் – சுகமாய்த்
திகழும் தெளிதமிழ் இன்பத்தில் மூழ்க
மகிழும் மனங்கள் மலர்ந்து!

மலர்ந்து மணம்வீசும் மல்லிகை முல்லை
புலர்ந்த பொழுதிலே வாடும்! – பலமாய்
வளர்ந்து தவழ்ந்திடும் வண்டமிழ்ப் பெண்ணோ
நிலமென நிற்பாள் நெடிது!

நெடிதென்று வாழ்வை நினைத்து வருத்தும்
குடிகளில் கோமான் செயலைப் – பொடிக்கத்
துடிக்கும் இதயத்தில் தோன்றும் தமிழோ
இடிக்கும் இடியென எண்ணு!


 அருணா செல்வம்.

28 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. “தமிழ்“ நீங்கள் சொன்னது போல எப்படி சொன்னாலும் அழகு தாங்க. ஆனால் அதை உங்களைப் போல ரசித்துப் படிப்பவர்களுக்கு தான் அதன் அழகு புலப்படும்.
      நன்றிங்க கோவி சார்.

      நீக்கு
  2. தமிழ் அழகுக்கு அழகு சேர்க்கும் அழகான வரிகள்...
    பர்ராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிங்க தனபாலன் ஐயா.

      பதிற்றந்தாதியை எல்லோரும் ரசிப்பார்கள் என்று நான் உண்மையில் நினைக்கவே இல்லை ஐயா.

      நீக்கு
  3. அப்பப்பா...........கவிதையா இது
    பிரமாதம்.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிட்டுக்குருவி...

      உங்களுக்கும் பிடித்ததா...!!
      எங்கள் பாராட்டெல்லாம் தமிழுக்குக் கிடைத்த பெருமைங்க.
      நன்றிங்க.

      நீக்கு
  4. தங்கள் தமிழ் புலமை பிரமிப்பூட்டுகிறது
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிங்க ரமணி ஐயா.

      என் தமிழ் புலமையை விட உங்களின் படைப்புகளைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் உங்களின் வார்த்தைகளையும் அதை அடுக்கிய விதத்தையும் அதனுள் இருக்கும் ஆழ்ந்த கருத்தையும் கண்டு நான் மதிமயங்கி போய் உள்ளேன் ஐயா.

      மீண்டும் நன்றிங்க ரமணி ஐயா.

      நீக்கு
  5. ஆஹா..
    சொல்லிட என்னில் சொற்கள் இல்லை நண்பரே..
    கவிதையின் அழகில் அதன் சொல்லாற்றலிலும்
    மதிமயங்கிப் போனேன்...
    திரும்பத் திரும்ப படித்தேன்..
    மனம் குதூகலித்தேன்..
    தமிழின் அழகை எண்ணி எண்ணி வியந்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிங்க நண்பரே...

      நான் கவிதை இலக்கணம் படிக்கும் பொழுது என் ஆசிரியரிடம் “ஏன் இப்படியெல்லாம் வார்த்தைகளை வளைத்து, நெடித்து, குறுக்கி, நீட்டி எல்லாம் மரபிற்காக எழுதனும்? பேசாமல் அந்தக் கருத்தையே கஷ்டபடாமல் புதுக்கவிதையில் எழுதலாமே“ என்பேன்.

      அதற்கு அவர் “இதில் இருக்கும் இன்பத்தைப் படித்து எழுதி வாசித்துப் பார் புரியும்“ என்பார்.
      நானும் அவரிடம் மூன்று வருடங்கள் யாப்பிலக்கணம் படித்து இரண்டு மரபுக்கவிதை நுால் வெளியிட்டேன். பாராட்டியவர்கள் அனைவரும் உங்களைப்போல் புலவர்கள், தமிழ்ச்சான்றோர்கள் தான்.
      அனைவரும் விரும்பும்படி திரும்பவும் புதுக்கவிதைகளே எழுதலாம் என்று சென்றால் எழுதுகிற பாணியில் ஏதோ மரபு ஒட்டிக்கொண்டே வருவது போல் தான் உள்ளது.
      சரி வருவது வரட்டும் நான் எழுதிய மரபுக்கவிதைகளையே போடலாம்... படிப்பவர்கள் படிக்கட்டும்.. என்றுதான் வலையில் போட்டுக் கொண்டு வருகிறேன்.
      ஆனால் இதையெல்லாம் நீங்கள் அனைவரும் படித்துப் பாராட்டும் பொழுது உண்மையில் பெருமிதம் கொள்கிறேன். நான் பெரும் பாராட்டுக்கள் அனைத்தும் என் ஆசிரியரையேச் சேரும்.

      மீண்டும் நன்றிங்க நண்பரே!

      நீக்கு
  6. ///
    நெடிதென்று வாழ்வை நினைத்து வருத்தும்
    குடிகளில் கோமான் செயலைப் – பொடிக்கத்
    துடிக்கும் இதயத்தில் தோன்றும் தமிழோ
    இடிக்கும் இடியென எண்ணு!
    ///

    அருமையான வரிகள் சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் ஆழ்ந்து படித்துக் கருத்திட்ட உங்களின் தமிழ்ப்பற்றிற்கும் மிக்க நன்றிங்க சகோதரரே!

      நீக்கு
  7. ஓ!...பிரமாதம்!.புலவர் போன்ற தமிழ்.
    இலக்கணம் கற்றீர்களா?
    சிறப்பு சிறப்பு. மேலே என்ன
    கூற நன்று...நன்று...
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க கோவைக்கவி.
      நான் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களிடம் மூன்று வருடம் யாப்பிலக்கணம் கற்றேன்.
      அவர் கற்றுத் தந்ததுடன் விட்டுவிடாமல் ஒவ்வோர் மாதமும் ஒரு தலைப்பு கொடுத்து இந்த இலக்கணத்தில் எழுது என்றும் அன்புடன் கட்டளையிடுவார். சில நேரங்களில் அவர் சொன்ன தலைப்பு அந்த இலக்கணத்தில் ஒட்டி வராது. (ஆனால் அவர் எழுதிவிடுவார்...!!) பிறகு அதிகம் யோசித்து எழுதி எழுதி இப்பொழுது பழகிக் கொண்டேன்.
      அதனால் எனக்குக் கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் அவருக்கே சமர்ப்பணம் என்று கூறி பெருமைபடுகிறேன்.

      மீண்டும் நன்றிங்க கோவைக்கவி அவர்களே.

      நீக்கு
  8. பதில்கள்
    1. அடேங்கப்பா...” - சீனி.

      நண்பரே உங்களின் 500 கவிதைகளை விட இது ஒன்றும் பிரமாதமில்லை நண்பரே.
      நன்றிங்க.

      நீக்கு
  9. வியந்து நிற்கிறேன் சகோ வளர்க நின் தமிழ் பற்று.

    பதிலளிநீக்கு
  10. அருவிபோல் வீழ்ந்திடும் அந்தாதிப் பாக்கள்
    பெருக்கிடும் நல்லருணா செல்வம் - சிறிதோர்
    குருவியான் யாத்தக் குறும்பாக் குறையைக்
    குருவே உரைப்பீர் உவந்து.

    கவியாக்கம் எழுப்பியத் தாக்கம். உங்கள் பதிற்றந்தாதியைப் பாராட்ட வார்த்தையின்றி விளைந்தது இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உவந்தளித்த வெண்பாவால் உள்ளம் குளிர்ந்தேன்.
      தவழ்ந்தளிக்கும் தென்றலின் தன்மை! – கவரும்
      குறையற்று தந்த குறும்பாவால் நெஞ்சம்
      நிறையுற்று போனேன் நிமிர்ந்து!


      சிறிதோர் குருவியா? செந்தமிழ் செல்வம்
      அறிதோர் பிறவி!நன்(கு) ஆழ்ந்தேன்! – குறித்தக்
      கருத்தெல்லாம் என்னைக் கவர உணர்ந்தேன்
      குருவல்ல! நான்குருத்தே என்று!

      நீக்கு
    2. உங்கள் ஊக்கமிகு வார்த்தைகள் கண்டு உள்ளம் நெகிழ்ந்தேன். மரபுப்பாக்கள் மீது மையல் இருந்தாலும் முறையாய் அறியாக் காரணத்தால், எழுதியது சரிதானா என்று சற்றே தயக்கம் இருந்தது. இப்போது தெளிந்தேன். நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  11. உங்கள் தமிழின் முத்துக்கோர்வைக்கு....அசந்துபோகிறேன்.இன்னும் தமிழை அறிய நிறைய இருக்கு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் இனிய தோழி ஹேமா...

      ஆமாம்.. தமிழை அறிய இன்னும் நிறைய இருக்கிறது தான்.
      நாம் கற்றது கையளவு தானே.
      நன்றி தோழி.

      நீக்கு
  12. அன்பின் அருணா - அந்தாதி அருமை - சொற்கள் இதயத்தின் ஆழத்தில் இருந்து வந்து வீழ்கின்றன. தமிழின் சிறப்பினைக் கூறும் நற்கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க
      நன்றி ஐயா.

      நீக்கு
  13. தமிழைப் படிக்க தந்தீர்கள் நன்றாய்!
    நன்றாய் நீவிர் வாழ நாடுவேன் இறையை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஜனா ஐயா.

      நீக்கு
  14. கவிதையை ரசித்தேன்.வலைச்சரம் கும்மாச்சி மூலமாக தங்களின் பதிவுகளைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    பதிலளிநீக்கு