வெள்ளி, 20 மார்ச், 2020

வாழவைக்கும் தெய்வங்களே வாழி! வாழி!



(இலாவணி)
.
எத்தனையோ இன்பங்களும் எத்தனையோ செல்வங்களும்
    என்னிடத்தில் எந்நாளிலும் உண்டு உண்டு!
அத்தனையும் இருந்தென்ன? அத்துமீறி நோய்பிடிக்க
    அடிமாடாய் ஆகியதே துண்டு! துண்டு!

அன்புமன மனைவியும் இன்பநிறை மகளுடன்
    ஆசைபொங்க வாழ்ந்திருந்தேன் கூடிக் கூடி!
இன்னலிதைக் கண்டதுமே என்னுலகில் வாழ்வினிமை
    இல்லையென வந்துவிட்டேன் ஓடி யோடி!

ஊருக்குள்ளே உயர்வாகப் பேருக்குள்ள மதிப்பாக
    உள்மனத்தில் மகிழ்ந்தேனே கண்டு கண்டு!
யாருமில்லா அனாதையாய் சேருமிடம் அறியாமல்
    ஆய்வுசெய்ய விட்டாரெனைக் கொண்டு கொண்டு!

வாழ்நிலையின் இருள்கண்டு பாழ்தனிமை பயங்கண்டு
    வாட்டமுடன் கதறினேன் அழுது அழுது!
ஊழ்நிலையை எண்ணியெண்ணி ஆழ்மனத்தில் பற்றிவிட்டேன்
    உருவற்ற அவன்தாளைத் தொழுது தோழுது!

சொந்தங்களும் சுற்றங்களும் விந்தையென ஒதுங்கிடச்
     சுடராக வந்தாந்த நாழி! நாழி!
வந்திருந்த தொற்றுநோயை முந்தியதை நீக்கியெனை
     வாழவைத்த தெய்வங்களே வாழி! வாழி!

வாட்டிவிட்ட நோய்விரட்டி நாட்டுக்குள்ளே கண்ணெதிரில்
    வாழ்ந்திருக்கும் கடவுள்தான் நீங்கள்! நீங்கள்!
தீட்டுகின்ற கவியாலே கூட்டுமருத் துவர்களைத்
    தினந்தோறும் போற்றிடுவோம் நாங்கள்! நாங்கள்!
.
பாவலர் அருணா செல்வம்
20.03.2020

1 கருத்து: