வியாழன், 12 மார்ச், 2020

திருச்செந்தூர் ஆண்டவா… வா!



(நொண்டிச் சிந்து)
.
திருச்செந்தூர் ஆண்டவ னே! உன்றன்
திருவிழித் திறந்தென்னை அருளிட வா!
அருட்கரம் கொடுத்தெனை யே உயரும்
ஆற்றலைக் கூட்டியே ஏற்றிட வா!

வெற்றிவேல் திருமுரு கா! தமிழ்
வேதத்தை என்னுள்ளும் ஓதவே வா!
கற்கின்ற நன்மைக ளே என்னைக்
காக்கின்ற கவசமாய் ஆக்கிட வா!

சுப்பிர மணியழ கே! உன்னைச்
சுந்தரத் தமிழ்க்கொண்டு முந்திட வா?
இப்புவி வாழ்வினி லே இன்ப
இன்னிசைச் சொற்கொண்டு பண்ணிட வா?

சூரனை வென்றவ னே! தீயோர்
சூழ்ச்சியின் செயல்களை வீழ்த்திட வா!
பாரமாய் இருப்பதை யும் உடனே
பகையினை அழிக்கின்ற நகையுடன் வா!

கடற்கரை வாழ்பவ னே! வீசும்
காற்றெனக் கவிகொண்டு போற்றிட வா!
உடனுறை கந்தனுன் னைப் - பொங்கி
ஊற்றிடும் கவிகளில் ஏற்றிட வா!

ஓமெனும் வடிவழ கே! உலக
ஒற்றுமை நற்பண்பைக் கற்பிக்க வா!
நாமெனும் மொழியழ கை மக்கள்
நலமுடன் பாடிடக் கலையென வா!
.
பாவலர் அருணா செல்வம்
12.03.2020

1 கருத்து: