வெள்ளி, 3 மே, 2019

பெயரும் பொருள் தற்குறிப் பேற்ற அணி!



    ஓர் இடத்தைவிட்டு ஓர் இடத்திற்கு பெயரும் தன்மையுள்ள பொருளை அதன் தன்மையிலேயே கூறாமல் புலவன் தான் கருதிய வேறு ஒன்றினை அதன் மேல் ஏற்றிப் பாடுவது “பெயரும் பொருள் தற்குறிப் பேற்றம்“ எனப்படும்.

உ.ம்
கருமேகக் கூந்தல் களைந்திடக், காற்றாய்
வருவேகஞ் சுற்றி வளைய, - பெருந்தோகை
கான்மயில்போல் வஞ்சிநடம் கண்டதால் காரென்று
வான்மயங்கிக் கொட்டியது வார்த்து!

பொருள் - கருமேகம் போன்ற கூந்தல் களைந்ததாலும், காற்றைப் போல வேகமுடன் சுற்றி வளைவதாலும், பெரிய தோகையை விரித்து மயில் ஆடுவதைப் போல் பெண்ணானவள் ஆடியதாலும் அதைக்கண்ட வானம் கார்காலம் வந்தது என்று எண்ணி மழையைக் கொட்டியது.

    மேகம் மழையைப் பொழிவது இயற்கை. ஆனால் அதை, மாது நடனமாடியதால் மழையைப் பொழிந்தது என்று தான் கருதிய வேறொன்றைப் பாடலில் ஏற்றிச் சொல்வதால் இது “தற்குறிப் பேற்ற அணி “ ஆகியது. இதில் பெண்ணும், மழையும் இடம்விட்டு இடம் பெயரும் தன்மை கொண்டுள்ளதால் இது  “பெயர்பொருள் தற்குறிப் பேற்றம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
04.05.2019


1 கருத்து: