வேற்றுமை அணி!
.
பாடலில், இரண்டு பொருளை
எடுத்துக்கொண்டு அதற்கு வெளிப்படையாக ஒப்புமைகளைக் கூறிவிட்டுப், பின்பு ஒரு பொருளுக்கு ஒரு காரணத்தை மட்டும் எடுத்துக் கூறி இது ஒன்று
மட்டுமே வேற்றுமை என்றும், இருந்தாலும் இரண்டுமே சமம் என்று
கூறுவது “ஒரு பொருள் வேற்றுமைச்சமம்“
எனப்படும்.
.
உ. ம்
அஞ்சிட வைத்தும் அடுத்தோர்
நகர்ந்திடத்
தஞ்சமிடும் தீமையும் தானிருக்கும்! – நெஞ்சமற்ற
கல்லனின் உள்மனமும்
காரிருளும் ஒன்றாயின்
நல்விடியல் தான்வேறு நன்கு!
.
பொருள் – மனத்தைப்
பயங்கொள்ள வைக்கும், அவனுள்
தஞ்சமிட்டிருக்கும் தீமைகளுக்குப் பயந்து மற்றவர் அவனைவிட்டு
விலகி நடக்க எண்ணம் தரும் வண்ணம் நெஞ்சமுள்ள தீயவனின்
உள்மனமும் இருள் சூழ்ந்த இடமும் ஒன்று. இருந்தாலும் மறுநாள்
விடியல் மட்டுமே இவ்விரண்டை வேறுபடுத்துகிறது.
…… பாடலில் கூறப்பட்ட இரண்டு பொருட்கள் ஒன்று
தீயவனின் நெஞ்சம். மற்றொன்று கருமைச்
சூழ்ந்த இருண்ட இடம். இரண்டுமே மனத்தைப் பயங்கொள்ள வைக்கும்.
இரண்டுமே தீமைகள் தஞ்சமடைய இடம் கொடுக்கும். ஆனால்
மறுநாள் விடிந்தால் இருள் அகன்றுவிடும் என்று இருளுக்கு மட்டும் ஒரு வேற்றுமைக்
கூறி இருப்பதால் இது “ஒரு பொருள் வேற்றுமைச்சமம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
13.05.2019
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக