இனிய இதமான ஓரிரவில்
இயற்கை தந்த உணவாலே
நீர்த்துளியாய் விதைத்த ஓர்விதையே
நிலத்தில் காலூன்ற வயிற்றில் முளைத்தாயே!
மனமோ மதிமயங்கி மசக்கை உண்டாக
மாதமோ இரண்டானப் பின்னே, முன்நினைவு!
கண்ணீர் குலத்தினிலே கண்கள் கயலாக
காலமெல்லாம் தண்ணீரில் தாமரை இலையாக...
முதல்வித்தை சிரிதேவி எனவாழ்த்த
இரண்டாவது மூதேவி என தூற்ற
மூன்றாவதும் பெண்ணாக வந்துவிட்டால்...
நாளாகாமல் முதலிலேயே முடிவானாய்!
பத்து மாதம் சுமக்காமல்
பத்தியங்கள் இருக்காமல்
வலி அதிகம் எடுக்காமல்
கரைந்து விட்ட கண்மணியே...
உன் கண்கள் நட்சத்திரங்களோ
இதழ் செவ்வாயோ
முகம் திங்களோ
உடல் செந்தாமரையோ
ஏதென்று அறிந்துவிட மனம் துடிக்க
என்றுமே இல்லையென போனயே...
பெண்ணாக பிறந்து விட்டால்
பின் விளைவு எவ்வளவோ...!!
ஒன்றில்லை இரண்டில்லை
ஒவ்வொன்றும் ஓர் விதியே!
மண்ணின்று வாழும் வரையில்
மனமே நீ தயங்காதே!
இன்பம் தான் இவ்வுலகம்
இருப்பதெல்லாம் கிடைக்கும் வரை!
துன்பம் ஒன்றும் அடையாமல் நீ
இல்லாததும் இன்பம் தானே!
அருணா செல்வம்.
13.12.2006
///பத்து மாதம் சுமக்காமல்
பதிலளிநீக்குபத்தியங்கள் இருக்காமல்
வலி அதிகம் எடுக்காமல்
கரைந்து விட்ட கண்மணியே...///
உடல் சுமக்காவிட்டாலும்,
என்றென்றும் மனம் சுமந்து கொண்டுதானே இருக்கும்
வேதனை ததும்பும் வரிகள் சகோதரியாரே
தம +1
பெண்ணினத்தின் துன்பத்தை இதை விட எப்படி சொல்வது அருமை
பதிலளிநீக்குஅவர்கள் மட்டுமே உணரும் வலி... மனம் தானே தேற்றியும் கொள்ளும்... ம்...
பதிலளிநீக்கு//நிலத்தில் காலூன்ற வயிற்றில் முளைத்தாயே...//
பதிலளிநீக்குஅருமை, அருமை.
மேற்கில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும் என்று நம்பிக்கையைச் சொல்ல சூரியனைப் பற்றி ஒரு பாடல் உண்டு. அதுவும் நினைவுக்கு வருகிறது.
//நாளாகாமல் முதலிலேயே முடிவாவாய்//
என்ன கொடுமை...
கருச்சிதைவுக்கு ஆளான குழந்தையை நினைவுகூர்ந்து, மனம் குமைந்து கவிதை படைத்திருப்பது முற்றிலும் புதிய முயற்சி.
பதிலளிநீக்கு//’இன்பம் தான் இவ்வுலகம்
இருப்பதெல்லாம் கிடைக்கும் வரை!
துன்பம் ஒன்றும் அடையாமல் நீ
இல்லாததும் இன்பம் தானே!’// - ‘முத்து முத்தான’ கவிதையின் முத்தாய்ப்பான வரிகள்.
பாராட்டுகள் அருணா.
நம் நாட்டில்தான் இந்த பெண்ணினக் கொடுமை அதிகம் ,கேட்டால் தாய்மையை வணங்கும் நாடு என்பார்கள் :)
பதிலளிநீக்குத ம 7
இன்பம் தான் இவ்வுலகம்
பதிலளிநீக்குஇருப்பதெல்லாம் கிடைக்கும் வரை!
துன்பம் ஒன்றும் அடையாமல் நீ
இல்லாததும் இன்பம் தானே! //
ஆழமான வலியின் இன்பம்...கவிதை அருமை.
மனம் கனக்கச் செய்துவிட்டது அருணா. கருக்கலைப்பின் வேதனையைச் சொல்ல இதைவிடச் சிறந்த வார்த்தைகள் அமைந்துவிட முடியாது.
பதிலளிநீக்குஎன்றும் உறுத்தும் இதயவலி!..
பதிலளிநீக்குவலிகளை அருமையாக வனைந்தீர்!
உணர்ந்தோம்!...
வரிகள் அ;ருமை ஆனால் வரிகளில் வலிகள் தந்தன வேதனை! பெண்ணாய் பிறத்தல் அத்தனை இழிவாகிவிட்டதா சகோதரி!? அந்தப் பெண்ணினால் தானே இந்த உலகமே இயங்குகின்றது என்பதை இந்த சமூகம் என்று உணருமோ?!!!
பதிலளிநீக்கு