துவக்கத்தில் மங்கள நாயகி ஒரு கலைஞனுக்கு உதவும் எண்ணத்தில் தான் இருந்தாள். ஆனால் நாளாக நாளாக அந்த கலைஞனின் கலைக்கு அடிமையாகி விட்டாள் என்றே சொல்லுமளவு மனத்தால் மாறியிருந்தாள். அது அவளுக்கே புரிந்தது. கலைக்கு அடிமையாவது கலைக்கு கொடுக்கும் மறியாதை தான் என்று தன் மனத்தைத் தேற்றினாள்.
தன் உருவச் சிலையை ஒவ்வொரு நாளும் பார்த்துப் பார்த்து மேலும் மெருகேரினாள். அவன் வடித்த அவளின் உடல் அவளைவிட அழகாக இருந்தது.
அவளுக்கு அந்தச் சிற்பியின் மேல் அதிக மரியாதை ஏற்பட்டு விட்டது. பின்பு அதுவே அன்பாக மாறி அவள் அவனுடன் உரிமையுடன் பேசிப் பழகும் இடத்தில் நிறுத்தியிருந்தது. அது அவளுக்குத் தவறாகவும் படவில்லை. ‘உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்’ என்னும் வள்ளுவர் வாக்கின் விளக்கம் அறிந்தவள்.
முகம் தவிர அனைத்தையும் முடித்துவிட்டான். தன் உடலழகை கண்டு களித்தவாறு சிற்பியைப் பார்த்தாள்.
“சிருட்டி.. நாளை அரசர் வருகிறார். நீங்கள் இன்றே முகத்தையும் முடித்துவிட்டால் அரசர் பார்க்கும் பொழுது முழுமை பெற்ற சிலையாக இருக்கும் அல்லவா..?’ முகமும் முடிந்த தன் சிலையைப் பார்க்கும் ஆவல் அவளுக்கு அதிகமாகி இருந்தது.
“வேண்டாம் பெண்ணே! முகத்தை அவசரமாக முடிக்கக் கூடாது. அதுமட்டுமல்ல கண்திறப்பதற்கு நேரம் காலம் எல்லாம் பார்த்துத்தான் செய்யவேண்டும்.’ என்றான்.
“சிருட்டி போருக்குச் சென்ற என் கணவரும் வந்துவிட்டார். நாளையிலிருந்து நான் வர மாட்டேன். பிறகெப்படி என்சிலையை முடிப்பீர்கள்?’
நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவள் கண்களில் கலக்கம் இல்லை. ஆனால் கலங்கிப் போய் இருந்த தன் மனத்தைத் திறந்து காட்டும் தைரியம் இல்லை. ஆசைகளை விழுங்கிவிட்டு அவள் கண்களைப் பார்த்துச் சொன்னான்.
“பெண்ணே உன் உருவம் என் மனத்தில் பதிந்து விட்டது. இனி நீ இல்லாமலேயே என் மனத்தில் இருக்கும் உன் உருகொண்டு பல பல வடிவங்களில் என்னால் சிலைவடிக்க முடியும். ஆனாலும் ஒரு கவலை என் நெஞ்சை அழுத்துகிறது பெண்ணே!”
“என்ன அது..?’
“இத்தனை நாள் பழகியிருக்கிறோம்; ஆனால் நீ உன் பெயரையோ எங்கே வசிக்கிறாய் என்பதையோ கடைசி வரையில் என்னிடம் சொல்லவேயில்லையே…”
“வேண்டாம் சிருட்டி. நாம் கலைக்காக பழகிய நாட்கள் இந்த சிலையுடன் முடிந்து விடட்டும். நீங்கள் விருப்பப் பட்டது போல் இந்த சிலையால் உங்கள் திறமை என்றென்றும் பேசப்படும். நானும் இந்த சிலையால் உலகம் உள்ளவரை வாழ்வேன். நன்றி சிருட்டி. நான் வருகிறேன்.” அவள் சொல்லிவிட்டு சென்ற போது அவன் பார்வையை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தாழ்ந்ததை அவள் அறிந்து வருந்தினாள்.
“சிருட்டி அற்புதம் அற்புதம். நான் எதிர் பார்த்ததை விட அழகாக அமைந்துள்ளது இந்தச் சிலை. உன் திறமைக்கு என்ன பரிசு தருவதென்றே தெரியவில்லை. மங்கள நாயகி நீ சொல். இந்த சிற்பிக்கு என்ன பரிசு தந்தால் தகும்?’ வெள்ளைத் துணியால் முகத்தை மூடியிருந்த சிலையின் உடல்பாகத்தை மட்டும் கண்ட மன்னன் மனைவியைப் பார்த்துக் கேட்டார்.
“அரசே பொறுங்கள். சிலை முழுவதும் முடியட்டும். பிறகு அவர் கேட்கும் பரிசை அளிக்கலாம்.” என்றாள் அருகிலிருந்த மங்கள நாயகி.
“அதுவும் சரிதான். சிருட்டி நாளை மறுநாள் நல்ல நாள். கோவில் பூசைகள் அன்றிலிருந்து துவங்கப்படும். அன்று காலையில் சிலைகண்திறப்பு வேலைகளை முடித்து விடுங்கள். உத்தர கோச மங்கையைக் காண நாம் ஆவலாக இருக்கிறோம். வருகிறோம்.” உத்தரவுடன் கிளம்பினார்.
சிருட்டி அதிர்ச்சி மாறாமல் நின்றிருந்தான்.
கண்திறந்த பிறகு கருவூலத்தில் அமர்த்தப்பட்ட தன் உருவச் சிலையை ஆவலுடன் நோக்கினாள் மங்கள நாயகி. அவளுக்கு முதலில் அதிர்ச்சி. பின்பு கோபம்.
அழகே உருவான அவள் சிலையின் முகம் வாராகி முகமாக அமைத்திருந்தது தான் அவள் கோபத்திற்குக் காரணம். ஏன் இப்படி..? என்னவாயிற்று..? புரியவில்லை. மனம் புழுங்கினாள்.
இது ஒரு சமயம் அரச கட்டளையாக இருக்குமோ… அந்த சிலையில் தன் உருவைக் கண்டு கொண்டதால் அரசர் இம்முகத்தை வாராகி முகமாக அமைக்கச் சொல்லி கட்டளை இட்டுயிருப்பாரோ.. அரசனைப் பார்த்தாள்.
நந்திவர்மன் மங்கை அம்மன் சிலைக்குத் தன் கைகளால் பாலூற்றி நீராட்டிக் கொண்டிருந்தான். வந்திருந்த அனைவரும் கைகூப்பி வணங்கி கொண்டிருந்தனர்.
வாராகித் தலையுடன் கூடிய அழகி பெண் உடம்பை உருவாகக் கொண்ட சிலை மற்றவர்களுக்குத் தெய்வமாகப் பட்டது. கலையம்சம் என்பது தெய்வீகம் பொருந்தியது தான்!
அருகில் நின்றிருந்த அமைச்சரிடம் கேட்டாள். “அமைச்சரே அழகான உருவச் சிலையின் முகம் மட்டும் ஏன் வாராகி முகமாக அமைத்தார்கள்? நான் இப்படி அமைக்க சொல்லவில்லையே…’
“ ஆமாம் மகாராணி. நீங்களும் சொல்லவில்லை. மன்னனும் சொல்லவில்லை. இது தெய்வக் கட்டளை மகாராணி. சிற்பியின் கனவில் தோன்றி சிலையின் முகத்தை வாராகி முகமாக அமைக்கச் சொன்னதாம் ஒரு தேவதை. அதன்படி அமைத்து விட்டார் நம் சிற்பி.
தவிர நம்மகாராணி மங்கையின் தந்தை சாளுக்கிய மன்னர் ஜெயசிம்மன். அவர்களின் சின்னம் வாராகம். அதனால் அம்மனின் முகம் வாராகமாக அமைந்ததில் எங்கள் அனைவருக்கும் திருப்திதான் மகாராணி.’’ சொல்லிவிட்டு பயபக்தியுடன் அம்மனைக் கும்பிட்டார்.
அவளால் இதை நம்ப முடியவில்லை.
சிருட்டியைத் தேடினாள். அவன் அங்கு இல்லை! எந்த முடிவுக்கும் வர முடியாமல் பூசை முடியும் வரை காத்திருந்துவிட்டு கொதித்த மனத்துடன் அரண்மனைக்குச் சென்றாள்.
“மகாராணி.. நீங்கள் சொன்ன சிற்பி நேற்றிரவே தன் மனைவி பிள்ளைகளுடன் ஊரைவிட்டே சென்று விட்டாராம்.’’ பணிவுடன் சொன்ன பணிப்பெண்ணை நம்பாதவளாகப் பார்த்தாள் மங்கள நாயகி.
“அப்படி ஊரைவிட்டுப் போக என்ன காரணம் என்று விசாரித்தாயா..?’’
“விசாரித்தேன் மகாராணி. ஆனால் யாரும் சரியான பதிலைச் சொல்லவில்லை. அந்த வீட்டில் ஒரு கிழவி இருந்தாள். அந்த சிற்பிக்கு உறவென்று நினைக்கிறேன். அவள் தான் முதல் நாள் இரவெல்லாம் அந்த சிற்பி தூக்கத்தில் “மகாராணியா.. ஐயோ என் கட்டைவிரலை வெட்டி விட்டார்களே.. என் கட்டை விரல் போயிடுச்சி.. நான் எப்படி இனிமேல் சிலை செதுக்குவேன்.. என் வாழ்வே போய்விட்டதே’… என்று தூக்கத்தில் அரட்டிக் கொண்டே இருந்ததாகச் சொன்னாள். வேறு எதுவும் தகவல் கிடைக்க வில்லை மகாராணி’’ என்றாள்.
மங்கள நாயகி கவலையுடன் அமர்ந்தாள். “உன் உருவச்சிலை உலகழியும் வரையில் இருக்கும்’; என்று ஆசையைத் தூண்டியவன் அமைத்த உருவச் சிலை கண்முன் தோன்றியது. கண்களை மூடினாலும் கண்ணுள் தெரிந்தது.
கைபோனாலும் பரவாயில்லை தான் கண்ட பெண்ணைத் தான் சிலைவடிப்பேன் என்று சொன்னவன் எங்கே? மகாராணி என்று அறிந்ததும் கட்டை விரல் போய்விடும் என்ற அச்சத்தில் ஊரைவிட்டு ஓடிப் போனவன் எங்கே?
மங்கள நாயகி யோசனையில் ஆழ்ந்தாள். புரிந்தது அவளுக்கு. கலை என்பது கலைஞனின் கைவண்ணம் தான். கடவுள் அவதாரம் இல்லை! ஆகமொத்தத்தில் கலையைக் கொலை செய்தவன் இந்தச் சிலையை வடித்த சிற்பி என்பது மட்டும் அவள் மனத்தில் ஆழப் பதிவாகி விட்டது.
“அன்னையே…’ கோச்செங்கணன் குரல் கேட்டு கண்களைத் திறந்தாள் மங்கள நாயகி.
செங்கணனுடன் நின்றிருந்தவர் யாரென்று தெரியவில்லை.. எங்கோ பார்த்த முகம்….!! கேள்வியுடன் மகனைப் பார்த்தாள்.
“அன்னையே இந்த உத்தரக் கோச மங்கையூரில் தாயார் சன்னிதிக்கு அருகில் உங்கள் நினைவாக ஒரு சன்னதி எழுப்பலாம் என்றிருக்கிறேன். இந்தச் சிற்பி தான் உங்களைச் சிலைவடிக்கப் போகிறார். உத்தரவு கொடுங்கள்’ தலைகுனிந்து கேட்டான் வாராகி மங்கை அம்மனின் மகன் கோச்செங்கணன்;.
காய்ந்து போன வேருக்கு நீர் எதற்கு..? “உன் விருப்பப்படி செய்யப்பா’ வெறுமையாக ஒரு புன்முறுவலுடன் சொன்னாள் இளைய மகாராணி மங்கள நாயகி.
(வாராகம் - பன்றி)
நன்றி
முத்தரையச் சோழர்கள் - சி. சுந்தரராஜன் சேர்வை
ஒப்பீட்டு நூல்கள் - எட்வர்தார்ஸ்டன்
நல்ல கதை
பதிலளிநீக்குபகிர்ந்தமைக்கு நன்றி
தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க செய்தாலி.
நீக்கு(நண்பரே... நான் கதையெல்லாம் படிக்க மாட்டேன் என்று
வலைச்சரத்தில் சொல்லிவிட்டு.... நட்புக்காக இங்கே பொய் சொன்னீர்களா...??? பரவாயில்லை. நண்பர் தானே என்று நானும் மன்னித்து விடுகிறேன்.)
நல்ல கதை......//‘உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்’//
பதிலளிநீக்குஇப்படி ஒரு குரல் இருக்கா......இன்னைக்குத்தான் எனக்குத்தெரியுமாக்கும்
நன்றிங்க சிட்டுக்குருவி.
நீக்குஎன்ன திருக்குறளை இப்படி கேட்டுவிட்டீர்கள்?
அதிகாரம் 40
தலைப்பு - கல்வி
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். - 394
விளக்கம் - உள்ளம் மகிழும்படியாகப் பழகி மீண்டும் என்றைக்கு காண்போமோ என நினைக்குமாறு பிரிதல் கற்றறிந்த புலவரின் தொழிலாகும்.
எவ்வளவு அருமையான குறள்!!
அட... நீங்க சொன்ன மாதிரியே இந்த முடிவை நான் எதிர்பார்க்கலை ஃப்ரெண்ட். நல்லா இருக்கு. திருக்குறள் உவமையோட. இயல்பான வர்ணனைகளோட. அழகுத் தமிழ்ல அமைஞ்ச இந்தக் கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. முடிவுல காய்ந்து போன வேருக்கு நீர் எதற்கு - Class! அருமையான வரிகள். முடியறப்பல்லாம் இந்த மாதிரி சரித்திரக் கதைகள் கொடுங்கன்னு ஒரு வேண்டுகோள் விடுக்கறா இந்த நிரூ!
பதிலளிநீக்குமிக்க நன்றி ஃபிரெண்ட்.
நீக்குஉங்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டேன் நிரஞ்சனா. கண்டிப்பா எழுதுவேன்.
படங்களும் கதையும் அழகாயும் விறிவிறுப்பாயும் இருக்கிறது அருணா.திருக்குறள் எல்லாவற்றையும் மிஞ்சிக் கதைக்கு அழகு சேர்த்துவிட்டது.வாழ்த்துகள் !
பதிலளிநீக்கு