ஞான முள்ள மனிதரெல்லாம்
ஞாலந்
தன்னில் பிறந்தாலும்
ஈனப் பிறவி நம்பிறப்பில்
இனிமை
கொஞ்சம் சேர்வதற்கு
தானம் செய்தால் பலநன்மை
தானாய்
வந்து சேருமென்று
வானம் சென்ற முன்னோர்கள்
வாழ்வின் வகையாய்ச் சொன்னார்கள்!
உண்டு நன்றாய் உடல்வளர்த்தோம்!
உதவி
செய்தார் உரியோர்கள்!
கண்டு கேட்டும் உயிர்வளர்த்தோம்!
கருத்தாய்ச்
சொன்னார் உயர்ந்தோர்கள்!
பண்பு கொண்ட மனமிருந்தும்
பாவம்
விதியாய் நுழைந்துவிட்டால்
தொண்டு செய்த உன்னுடனே
துணையாய் வந்து தலைக்காக்கும்!
பணமும் பொருளும் நிறைந்திருக்க
பாலும்
பழமும் மிகுந்திருக்க
உணவோ உண்ண அழைத்திருக்க
உன்னைப் பசித்தோன் பார்த்திருக்க
குணமாய்க் கொஞ்சம் கொடுத்திட்டால்
குறைந்தி டாமல் பெருகிவிடும்!
கணக்காய் எண்ண முடியாமல்
கடிதில் கூடும் மனநிறைவு!
பதவி பெயரும் புகழெல்லாம்
பகட்டாய் நம்மைக் காட்டிவிடும்!
நிதமும் தேவை எனச்சேர்த்தால்
நெஞ்சோ
பயமாய் அதைக்காக்கும்!
முதலும் முடிவும் அறியாத
மோகம்
கொண்ட வாழ்வினிலே
உதவி செய்ய பழகிவிட்டால்
உன்னை அதுவே காத்துநிற்கும்!
இல்லை என்று கேட்காமல்
ஏங்கி
பார்க்கும் சிலவிழிகள்!
தொல்லை என்றே எண்ணாமல்
துளியாய்க்
கொஞ்சம் கொடுத்துப்பார்!
சொல்லில் சொல்ல முடியாமல்
சொல்லும்
பார்வை உன்னுருவைக்
கல்லில் இல்லாத் தெய்வமெனக்
கண்முன்
கண்ட மனம்நெகிழ்வார்!
தெய்வம் எங்கே எங்கென்று
தேடித்
தேடி அலைகின்றார்!
உய்யும் வாழ்வில் உன்னெதிரில்
ஒளியைப் பொங்கி வரமாட்டார்!
மெய்யும் மனமும் வாடிவிட்ட
மெலியோக்
கொஞ்சம் கொடுத்துப்பார்!
வைய்யம் நிறைந்த தெய்வமெல்லாம்
வந்தே அமர்வார் உன்னுருவில்!
எடுக்க
எடுக்கக் குறைந்துவிடும்
ஏற்ற மில்லாப் பெருஞ்செல்வம்!
அடுக்க
அடுக்க ஏக்கந்தரும்
ஆசை
அடங்காத் துயர்வெள்ளம்!
கொடுக்கக்
கொடுக்க வளர்கின்ற
குணமே உயிரின் மனநிறைவு!
தடுக்கத்
தடுக்க எவர்வந்தும்
தகர்க்க முடியா நிறைவன்றோ!
.
பாவலர் அருணா செல்வம்
13.07.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக