புதன், 10 நவம்பர், 2021

கைக்குழந்தை! (வளையற் சிந்து)

 



.
குழந்தைமொழி உதிர்த்துவிடும்
கொஞ்சலெல்லாம் பண்ணே! - திருக்
குறளிலுள்ள கண்ணே! - வளங்
கொழித்திருக்கும் மண்ணே!  - அந்தக்
குமரனெழில் பொலிவுகண்டு
குளிர்ந்திடுவாய் பெண்ணே!
.
வழவழப்பாய்ப் பளிங்களவில்
வழுக்கிவிடும் கன்னம்! - உயர்
மதனமெனும் முன்னம்! - தாச்
மகாலென்னும் சின்னம்! - அதை
மறக்கவைத்து முதலிடத்தில்
மனத்தினுள்ளே மின்னும்!
.
சிவந்தவுடன் அழுதமுகம்
சிதறியவிண் மீனே! - இருள்
திரண்டிருக்கும் கானே! - மனச்
சிரிப்படங்கும் தானே! - குரல்
தெளிதமிழின் ஒளிந்திருக்கும்
சிறப்பழகின் தேனே!
.
தவம்புரிவோர் விழியழகாய்த்
தணிந்திருக்கும் தூக்கம்! - எதைத்
தகர்த்துவிடும் தாக்கம்! - நாளை
தரணியாளும் நோக்கம்! - அந்தத்
தரிசனத்தைப் பெறுவதற்கே
தாவிவரும் ஏக்கம்!
.
விழிமலர்கள் விரிந்தவுடன்
விரும்பியுனைத் தூக்கும்! - உறும்
வினைபசியை நீக்கும்! - உடல்
விளைந்திடவே பார்க்கும்! - தாய்
விரும்பியுனை அணைப்பதனால்
விதியதுவாய்த் தோற்கும்!
.
வழிந்திருக்கும் தேங்குடமாய்
வாயமுதம் ஊறும்! - சிறு
மலரெனவே நாறும்! - பெரும்
மழலைமொழி கூறும்! - அது
மறைபொருளாய்க் கேட்பவரின்
மனத்தினிலே ஏறும்!
.
பாவலர் அருணா செல்வம்
10.11.2021

1 கருத்து: