தமிழெனும் அமுதே வாழி! |
உலகினில் உயர்ந்தே ஓங்கி
உயிரென நெஞ்சுள் ஊறி
நலந்தர அறிவில் நின்று
நயந்தர பிறப்பாய் நாவில்!
பலபல மொழிகள் வந்தும்
பழந்தமிழ் உன்னில் வேறு
நிலமிதில் காணேன்! தாயே
நிறைவுடன் அமரென் பாட்டில்!
இயலிசை ஆட லென்றே
இயம்பிடும் அழகில் நின்றாய்!
வயலிடை உழவர் பண்ணில்
வளமுடன் எளிமை தந்தாய்!
அயல்மொழி நாட்டார்க் கூட
ஆசையாய்க் கற்க வைத்தாய்!
நயந்தரும் உன்னைக் கற்றால்
நாவெலாம் இனிக்கும் என்றும்!
இலக்கணக் கட்டுக் கோப்பில்
இருக்குமுன் உயர்வைக்
கண்டும்
இலக்கிய உருவந் தன்னில்
இருக்குமுன் அழகைக்
கண்டும்
கலந்தநல் மொழிகள் இன்றிக்
கற்புடைப் பெண்ணாய்க் கண்டும்
உலகெலாம் உன்னை வணங்கும்
ஓர்குறை இல்லை என்றே!
அறமுடன் பொருளும் இன்பம்
அடக்கிய நெறியாய் நூல்கள்!
திறம்பட வகுத்த பண்பின்
தெளிவினைக் காட்டும் சீர்கள்!
புறத்துடன் அகமும் வாழப்
பொதுமையை ஊட்டும் பாக்கள்!
சிறப்பெலாம் கண்டோர் உன்னைச்
சிரசினில் புதைப்பார் என்றும்!
அருமையாம் வெண்பா வஞ்சி
அகவலும் கலிப்பா வென்று
பெருமையாய் சொல்லும் யாப்பைப்
பெற்றவள் உன்னை யன்றிப்
பருத்தநல் உலகில் ஒன்றைப்
பார்த்தவர் இல்லை
என்றே
இருசுடர் போலே உண்மை
இயம்பினார் முன்னோர்
நன்றே!
தொல்தமிழ் அறிஞர் எல்லாம்
சுவைமிகு பாக்கள்
செய்தார்!
கல்தொழில் தேர்ந்தோர் எல்லாம்
கல்தனில் செதுக்கி
வைத்தார்!
பல்லவன் சேர சோழப்
பண்டியர் வளமாய்க்
காத்தார்!
செல்வமாய் வளர்ந்த உன்றன்
சிறப்பெலாம் நாளும்
வாழும்!
பூவினுள் தேனைப் போலப்
புதையலின் வளத்தைப்
போலச்
சீவிடும் இளநீர் போலச்
செழித்தநல் வயலைப்
போலக்
காவிய உவமை கொண்டு
கவிதைநான் எழுத வந்தால்
ஓவியப் பெண்ணே உன்னை
உயர்த்திடச் சொல்லே
இல்லை!
வெல்லமாய் இனிக்கும் வார்த்தை
வேண்டியோர் பேசும் போது
சொல்லெலாம் தமிழாய் வந்தால்
சுவைத்திட உணவும் வேண்டாம்!
நல்லவர் நட்பைப் போல
நல்லிசை இனிமை போல
வல்லவுன் பாக்கள் கண்டால்
வாழ்வினில் எதுவும்
வேண்டாம்!
எனக்கென உறவு வேண்டி
ஏங்கியே தேடி நின்றேன்!
தனக்கென வாழ்வோர் நெஞ்சில்
தாவிடும் குரங்கைக்
கண்டேன்!
சினத்துடன் தனித்து நிற்க
சீர்மிகு மொழியாய்
வந்தாய்!
மனத்தினில் உன்னை வைக்க
மாண்புடன் உயரக் கண்டேன்!
அன்னையாய் அன்பைச் சொல்லும்
அருந்தமிழ் மொழியே
வாழி!
இன்பமாய் படிக்க நல்கும்
இனியவள் என்றும் வாழி!
பொன்னிலும் உயர்வாய் மின்னும்
பொருள்தரும் அழகே
வாழி!
முன்னிலும் மூத்த தெய்வம்
மொழியெனும் அமுதே
வாழி!
.
பாவலர் அருணா செல்வம்
07.08.2020
ஆகா...! சிறப்பு...
பதிலளிநீக்கு