சனி, 7 டிசம்பர், 2019

தூது போ வண்ணமலரே !



.
அல்லி குளத்தில்
நீராடுகிறாள் என்
நெஞ்சிற்கினியாள்!
ஆம்பலும் அவள் முகத்தைக்
காண நாணும்!
கயல்களும் அவள் கண்ணழகில்
மயக்கம் கொள்ளும்!

நீரைவிட்டு வெளிவரும்
நிலா போன்ற அவளின்
உருவைக் காண அன்னங்கள்
ஒற்றைக்காலில் தவமிருக்கும்!

அவளின் மேனியைத்
தொட்டிடும்
குளத்து நீருக்கும் குளிரெடுக்கும்!

அவள் முகத்தைக் கண்ட
வண்டுகள் பூந்தாதின்
மதுவருந்த வட்டமிடும்!

இயற்கை அவளைத்
தொட்டே தழுவினாலும்
சிணுங்காத சின்னவள்
என்பார்வை பட்டதும்
நாணங்கொள்வாள்!

வண்ணமலரே….
நானும் உங்களைப் போலவே
அவளிடம் மயங்கி இருப்பதைத்
தூதாக போய் சொல்லிவிடு!
உன்னிடத்தில் நான்
கொடுத்த முத்தத்தை
உனைத் தூக்கி அவள் முகரும் போது
நீ கொடுத்து,
என் நினைவைக் காட்டிவிடு!
.
பாவலர் அருணா செல்வம்
07.12.2019

1 கருத்து: