பூட்டில்லா வீட்டில் நுழைவதுபோல் – வந்து
புண்ணிய பூமியில் வாழ்ந்தவரை - வாலை
ஆட்டியே நம்மை அடிமைசெய்து – வேற்று
நாட்டவர் எம்மை ஆளுவதோ?
காட்டுக்கே அரசன் சிங்கமன்றோ – அதைக்
காப்பதே அதனின் திறனன்றோ - சின்னக்
கூட்டுப் புழுவாக இருந்தாலும் – தம்மின்
கூண்டினில் வாழ்வதே நன்றாகும்!
வாட்டிய கொடுமை வஞ்சனைங்கள் – கண்டு
வாடி வதங்கிய பாரதியே – தீமை
ஓட்டிட வேண்டும் என்றெண்ணியே – நாளும்
ஓதிய தெல்லாம் உயர்வாகும்!
நாட்டுக்கு நன்மையைச் செய்திடவே – நல்ல
பாட்டினில் கருவைச் சேர்த்துவைத்தான் ! – கவி
தீட்டிய தெல்லாமே உயர்வாகும் – வீரம்
ஊட்டிய சுவை உணர்வாகும்!
மூட்டிய வீரச் சொற்களாலே – நெஞ்சை
மூடி நடுக்கிய பயமெல்லாம் – தீயில்
காட்டிய பஞ்சாய் மறைந்ததுவே – உடன்
கடமை சூட்டை ஏற்றியதே!
ஏட்டினில் உள்ள இலக்கணத்தை – யாரும்
ஏற்றிடும் வண்ணம் எளிமையாக்கிப் – புதுப்
பாட்டென்ற எண்ணம் ஏற்றிவைத்த – உயர்
பாரதியை நாம் போற்றிடுவோம்!
.
(கும்மி)
பாவலர் அருணா செல்வம்
11.12.2019
சிறப்பான பகிர்வு...
பதிலளிநீக்குபின்னூட்டமாக நான் முன்பு எழுதி இருந்த ஒரு பதிவின் சுட்டி தருகிறேன் பரதியின் கருத்துகளால் கோர்க்கப்பட்டது /https://gmbat1649.blogspot.com/2014/09/blog-post_10.html
பதிலளிநீக்கு