வியாழன், 11 பிப்ரவரி, 2016

மாற்றான் தொட்டத்து மரிக்கொழுந்து ! – 3

   



    முரளிதரனையும், திலகவதியையும் ஒன்றாக நிற்க வைத்து அவர்கள் காலில் விழுந்து எழுந்த போது ‘இப்படி ஒரு பொருத்தமான ஜோடியா !‘ என்று தோன்றியது.
    ஆறடிக்குக் குறையாத உயரமும், அதற்கேற்ற மாதிரி உடலமைப்பும், தூக்கி வாரின முடியும், எதையும் உன்னிப்பாய்ப் பார்க்கும் கண்களும், எதற்கும் அஞ்ச மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லும் முகமும் அமைந்த முரளிதரனைப் பார்த்த பொழுது, பண்ணையார் என்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்ததற்கு மாறான உருவ அமைப்பு இருந்தது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
    இவன் இப்படி இருக்க திலகவதி… ?
    இப்படி ஓர் அழகா… ! இந்த முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே ! எங்கே ? சற்று நேரத்திற்கு பிறகு ஞாபகத்தில் வந்தது, தன் வீட்டில் தேதி கிழிக்கும் காலண்டரில் உள்ள லட்சுமியின் முகம். ஆமாம்… அதில் இருக்கிற தெய்வீக முக அமைப்பு அப்படியே…
    அவளுடைய முகத்தில் பிரகாசிக்கும் ஒளி ? அவள் இரு பக்க மூக்கிலும் அணிந்திருக்கும் மூன்று மூன்று வைரக்கல் பதித்த மூக்குத்தியினால் வந்த ஒளியா… ?
    இல்லைஎன்றால் தானாகவே முகம் இப்படி ஜொலிக்கிறதா… ? என்னவென்றே சொல்ல முடியாத நினைக்க முடியாத ஓர் உன்னத அமைப்பு அவளிடம் இருந்தது.
    இந்த அழகு, அவளைப் பார்த்ததும் திரும்பிப் பார்க்கத் தோன்றும் காந்தர்வ அழகு கிடையாது. அவளைப் பார்த்ததும் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் உன்னதமான தெய்வீக அழகு !
    இந்த அழகைக் கண்டு மறிக்கொழுந்து மயங்கிவிட்டாலும் அவளுடைய அன்பைக் கண்டு, அவளுக்குப் பணிவிடை செய்வதே பெருமை என நினைக்க ஆரம்பித்தாள்.
   அன்புக்கு அடிபணிவது ஆனந்தமாயிற்றே!
   அப்படி ஓர் அழகும் குணமும் வாய்த்த ஒரு பெண்ணை இனி எப்போது பார்ப்போம்…. ?
    மரிக்கொழுந்தின் கண்களில் இருந்து கண்ணீர் கோடாக இறங்கியது.
    ‘‘க்ரீச்…க்ரீச்…‘‘
    கிணற்றில் இருந்து தண்ணீர் இழுக்கும் சத்தம்.
    பொழுது நன்றாக விடிந்து விட்டிருந்தது. பெரிய வீட்டின் கொள்ளைப்புரத்துக் கிணற்றில் இருந்து தண்ணீர் இழுக்கும் சத்தம்தான் அது. எழுந்து வெளியே வந்து பார்த்தாள்.
    பெரிய வீட்டின் அதாவது மூரளீதரன் வீட்டிற்கும் அவளுடைய குடிசைக்கும் இடையே ஒன்பது தென்னை மரம், ஆறு வாழை மரம், ஒரு சில பூஞ்செடிகள் தான் இருக்கும்.
    மரிக்கொழுந்து கல்யாணமாகி வந்த சில நாட்களில் சின்னய்யா தன்னுடைய வீட்டின் தோட்டத்திலேயே ஒரு குடிசை போட்டு அதில்  வேலுவையும் மரிக்கொழுந்துவையும் குடித்தனம் வைத்தான்.
    குடிசையிலிருந்து பெரிய வீட்டின் தோட்டத்தைப் பார்த்தால் மரங்களுக்கும் வாழைகளுக்கும் நடுவில் அவ்வளவாக எதுவும் தெரியாது.
    இருந்தாலும் அங்கிருந்து வரும் சத்தமும் அடுப்பின் புகையையும் வைத்து எல்லோரும் எழுந்து விட்டார்கள் என்பதை யூகித்துக்கொண்டாள்.
    மரிக்கொழுந்து எழுந்து போய் பல்விளக்கி முகம் கழுவி தலைவாரி பின்னி தன் குடிசையில் இருந்த சின்ன கண்ணாடியை எடுத்து பார்த்துப் பொட்டு வைக்கும் போது சின்னம்மா திலகவதியின் ஞாபகம் வந்தது.

    ல்யாணமாகி வந்த மறுநாள் விடியகாலை…
    ‘‘ஏய் மரிக்கொழுந்து இன்னுமா தூங்குற… எழுந்திரு, சின்னம்மா இந்நேரம் எழுந்திருப்பாங்க. சீக்கிரம் எழுந்து போய் அவுங்க இன்னா வேல செய்ய சொல்றாங்களோ அத செய்யி ?‘‘
    வேலு அவளை உலுக்கி எழுப்பினான்.
    மரிக்கொழுந்து அவசர அவசரமாக எழுந்து சடையைத் தூக்கி கொண்டையாகப் போட்டுக்கொண்டு சேலையைச் சரிசெய்து கொண்டு ஓடினாள்.
    அதற்குள் திலகவதி எழுந்துவிட்டிருந்தாள். அவள் முன்னால் போய் நின்று ‘‘நா என்ன செய்யணும் சின்னம்மா… ?‘‘ என்று கேட்டாள்.
    அவள் இவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு…
    ‘‘மரிக்கொழுந்து நீ போயி பல்லை வெளக்கி மொகத்த கழுவி பொட்டு இட்டுக்குனு, தலைவாரி பின்னிக்கினு, பொடவைய ஒழுங்கா கட்டிக்கினு வா. அப்புறம் சொல்லுறேன் நீ இன்னா வேல செய்யனுங்கிறத.‘‘
    மரிக்கொழுந்துவிற்கு ஆச்சர்யமாக இருந்தாலும் அவள் சொன்னதைத் தட்டாமல், உடனே கொள்ளைப்புரம் நோக்கிப் போனாள்.
    போகும் போது தான் வேலைசெய்த வீட்டின் ஞாபகம் வந்தது.
    என்றாவது ஒருநாள் நேரமிருந்தால் தலைவாரி சடை பின்னி முகத்தில் பெளடர் பூசி பொட்டு வைத்துக்கொண்டால் போதும், அன்று முதலாளியின் மகளுக்குப் பொறுக்காது.
    ‘‘ஏண்டி காலையிலேயே ஒனக்கு என்ன மேக்கப் வேண்டி கெடக்குது. ஒரு காபிய ஒழுங்கா போடத் தெரியல, மேக்கப் போட்டுக்கினா… அதுவும் காலையில….‘‘
    பத்து மணியளவில் தூங்கி எழுந்து வந்தவள் இந்த வார்த்தையை சொல்லுவாள். அன்றைக்கு என்று பார்த்து இஸ்திரி மடிப்பு கலையாத துணிகளைக் கொண்டுவந்து போடுவாள்.
    ‘‘இதெல்லாம் ஒழுங்கா தொவைக்கல. நல்லா தொவச்சி அயன் பண்ணி வை‘‘
    இப்படி ஏதாவது ஒரு வேலையை வேண்டுமென்றே அதிகப் படுத்தி விடுவாள்.
    இதையெல்லாம் நினைத்துக்கொண்டே திலகவதி சொன்னது போல் செய்து முடித்து அவள் எதிரில் வந்து நின்றாள்.
    ‘‘இதோ பாரு மரிக்கொழுந்து… இன்னைக்கு மட்டுமில்லை. என்னைக்குமே நீ இதுமாதிரி தான் வரணும். புரியுதா… ?‘‘ என்றாள்.
    ‘‘சரிங்க சின்னம்மா‘‘
    ‘‘என்ன சொன்னே ?‘‘
    ‘‘சரிங்க சின்னம்மான்னுதாங்க…‘‘
    ‘‘ம்…. இதையும் மாத்தணும் நீ. ஒனக்கு நா சின்னம்மாவா… ?‘‘
    புரியாமல் விழித்தாள். மாமா அப்படித்தானே சொன்னது…. வேற என்னன்னு கூப்பிடணும் ? மனதுக்குள்ளேயே எண்ணிப் பார்த்தாள். கேட்க வாய் வரவில்லை. பேசாமல் அவளைப் பார்த்தாள்.
    ‘‘என்ன மரிக்கொழுந்து பயந்துட்டியா… ?‘‘
    இல்லை என்பதற்கு அடையாளமாகத் தலையாட்டினாள்.
    ‘‘பின்னே… ?‘‘
    ‘‘சின்னம்மான்னு இல்லையின்னா… வேற என்னன்னு கூப்பிடறது ?‘‘
    ‘‘ம்… அப்படி கேளு. எல்லாரும் என்னை சின்னம்மான்னு தான் கூப்பிடுறாங்க. ஆனா நீ அப்படி கூப்பிடாத. நீ இனிமே என்னை அக்கான்னு தான் கூப்பிடணும். என்ன சரியா… ?‘‘
    தலையாட்டினாள்.
    ‘‘வாயைத் தொறந்து சொல்லு‘‘
    ‘‘சரிக்கா !‘‘
    ‘‘ம்… போயி வாசல தெளிச்சி கோலம் போடு…‘‘  இப்படி அன்பாக வேலை வங்கினாள். அதுவும் முழுநேர வேலை கிடையாது.
    காலையில் வாசல் தெளித்துக் கோலம் போடணும். இரவு போட்ட பாத்திரங்களைக் கழுவி வைக்கணும், எப்போதாவது கடைக்குப் போய் காய்கறி வாங்கணும், வீட்டைப் பெருக்கணும். மாவை மசினில் அரைக்கணும், இவை எல்லாவற்றையும் விட நான்கு வயது சத்தியாவைக் கவனிக்கணும்.
    இதுதான் வேலை. இதெல்லாம் வேலை என்பது போல் தெரியாமல் ஒரு பொழுது போக்கு போல் இருந்தது மரிக்கொழுந்துவிற்கு.
    எவ்வளவு சந்தோசமாக கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடிவிட்டது !
    இத்தனை நாட்களிலும் மரிக்கொழுந்து திலகவதி சொன்னதை மறக்கவில்லை. அன்றாடும் முகம் கழுவி பொட்டு வைத்த பின்னரே பெரிய வீட்டிற்குள் நுழைவாள்.
    மரிக்கொழுந்துவிற்கு மனது வெம்பியது. சத்தம் போட்டு அழுதால் குழந்தைகள் எங்கே விழித்துக் கொள்ளுமோ என்ற பயத்தில் கவலையை அப்படியே விழுங்கினாள். அடுத்தவர் நலனுக்காக அழுகையை அடக்குவதில் இருக்கும் வலி…. பெரிய பாத்திரத்தில் பொங்கி வர முடியாத பாலைப் போன்று உள்ளேயே கொதிப்பது. அதைவிட அழுது விடலாம்.
    கையில் இருந்த சாந்து குமிழில் ஒரு குச்சால் ஒரு புள்ளியளவு பொட்டு வைத்துக்கொண்டு குடிசையின் கதவை மெதுவாக சாத்திவிட்டு, பெரிய வீட்டின் கொள்ளைப் புரத்தை நோக்கி நடந்தாள்.
    ஏதோ வேலையாக இருந்த காமாட்சி அவளைக் கவனித்துவிட்டாள்.
    ‘‘என்ன மரிக்கொழுந்து… ? நீ எதுக்கு இங்க வந்த ?‘‘
    ‘‘ஏதாவது வேல இருந்தா செய்யலாம்ன்னு வந்தேன் ஆத்தா…‘‘
    ‘‘வேலையா ? அதெல்லாம் ஒன்னும் வேணாம். இங்க சொந்தக்காரங்க எல்லாம் இருக்கிறாங்க இல்ல ? அவங்க செஞ்சிக்குவாங்க. நீ போயி கொழந்தைகள கவனிச்சிக்கோ. அது போதும். போ‘‘
    அதிகாரம் நிறைந்த குரலில் சொன்னாள் காமாட்சி. அவளுடைய சொல்லுக்கு மறுப்பேது… ?
    ‘‘சரி ஆத்தா….‘‘ என்று சொல்லிவிட்டு திரும்பவும் வந்த வழியிலேயே நடந்தாள்.
    குடிசையின் அருகில் நெருங்கிய போது தான் குழந்தையின் அழுகை ஒலி காதில் விழுந்தது.
    அவசர அவசரமாக உள்ளே நுழைந்தாள்.
    அவளுடைய குழந்தைதான் அழுதுகொண்டிருந்தது. படுக்கையை ஈரமாக்கி வைத்திருந்தான்.
    குழந்தையைத் தூக்கி படுக்கையைச் சரிபடுத்தி விட்டு அதனை பசியாற்றி விட்டு கிடத்தினாள்.
    பசி போனதும் தூங்காமல் நன்றாக விழித்துக்கொண்டு கைகளையும் கால்களையும் உதைத்துக் கொண்டிருந்தான்.
    கண்கள் இரண்டும் மொச்சைக் கொட்டைகள் போல் இருந்தது.
    அந்தக் கண்களை நன்றாக உற்றுப் பார்த்தாள். அவளுக்குச் சாதாரண குழந்தையின் கண்களாகத்தான் தெரிந்தது. திலகவதி சொன்னது போல எந்த ஒளியும் அதில் தெரியவில்லை.


(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக