நட்புறவுகளுக்கு
வணக்கம்.
போன ஒரு
பதிவில் நெய் சொட்டச் சொட்ட இருக்கும் “தொதோல்“ என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்
என்று எழுதி இருந்தேன்.
அதைப்
படித்த ஸ்ரீராம் ஐயா, பாலசுப்ரமணியன் ஐயா, நாகராஜ் ஐயா, மூவரும் “தொதோல் என்றால்
என்ன? அதை ஒரு பதிவாகப் போடுங்கள்“ என்று எழுதி இருந்தார்கள்.
அவர்கள்
கேட்டதற்காகவே இந்தப் பதிவு.
முதலில்
இந்த “தொதோல்“ எனக்கு எப்படி அறிமுகமாகியது என்பதைச் சொல்லி விடுகிறேன்.
“தொதோல்“
என்ற இந்த இனிப்பு பலகாரம் முதலில் ஆங்கிலோ இந்தியர்கள் தான் நமக்கு அறிமுகப்
படுத்தினார்கள். பாண்டிச்சேரியில் கிருஸ்துவர்கள்தான் இதை அதிகமாகச் செய்வார்கள்.
கிருஸ்தவர்கள்,
கிருஸ்மஸ்க்காகச் செய்த மலையைப் பிரிப்பதற்கு முதல் நாள் சிறுவர்களை அழைத்து
அவர்களுக்குப் பலகாரங்கள் கொடுப்பது வழக்கம். அப்படி ஒரு முறை பக்கத்து வீட்டு மலையைப்
பிரிக்கும் போது என்னையும் அழைத்துப் பலகாரங்கள் கொடுத்தார்கள். எனக்கு அப்போது
எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். அவர்கள் ஒரு தட்டில் சிறு துண்டு கிருஸ்மஸ்
கேக், கொஞ்சம் முறுக்கு, இந்த “தொதோல்“ கொஞ்சம் வைத்துத் தந்தார்கள். நான்
முறுக்கையும், கேக்கையும் சாப்பிட்டு விட்டேன். இந்த தொதோல் மிகவும் கறுப்பாக,
பார்ப்பதற்கும் அவ்வளவு ஈர்ப்பும் இல்லாத்தாக இருந்ததால் அதைச் சாப்பிடாமல் வைத்து
விட்டேன்.
இதைப்
பார்த்த அந்த வீட்டு அம்மா, “சாப்பிட்டுப் பாரு அருணா. பிடிக்கவில்லை என்றால்
வைத்துவிடு“ என்றார்கள்.
நான்
அவர்கள் சொல்கிறார்களே என்று வேண்டா வெறுப்பாக்கத் தான் சாப்பிட்டேன். சாப்பிட்ட
பிறகு இன்னும் கொஞ்சம் கொடுக்கமாட்டார்களா....? என்று மனம் ஏங்கி போனது. அவ்வளவு
சுவையாக இருந்தது.
மறுநாள்
நான் என் அம்மாவிடம் வந்து “பக்கத்து வீட்டு அம்மா கறுப்பாக ஒன்று செய்து
கொடுத்தார்கள். ரொம்ப நன்றாக இருந்தது. அதை நீங்களும் செய்து தாருங்கள்“ என்று
கேட்டேன். என் அம்மாவும் அவர்களிடம் விசாரித்துச் செய்து கொடுத்தார்கள். ஆனால்
அந்தப் பழைய சுவை இதில் இல்லை. இருந்தாலும் எனக்காகச் செய்த அம்மாவின் மனம் நோகக்
கூடாது என்று சாப்பிட்டு விட்டேன்.
அதன் பிறகு
திருமணமாகி இங்கு வந்த பிறகு என் தங்கையின் வீட்டிற்குச் சென்றிருந்த போது அவளின்
மாமியார் இந்தத் தொதோலைச் சுவையாகச் செய்திருந்தார்கள். அவர்களிடம் செய்முறை
விளக்கம் கேட்டுக் கற்றுக் கொண்டேன்.
இதில்
முக்கிய விசயம் என்னவென்றால் தொதோல் அரிசி தான். நம்மூரில் கிடைக்கும் அரிசி சற்று
மொத்தமாக இருக்கிறது. இங்கே சீனா கடைகளில் மிகவும் மெல்லிய கருப்பு அரிசி
கிடைக்கிறது. இந்த அரிசியில் செய்யும் போது சுவை மேலும் கூடுதலாக இருக்கிறது.
இதோ செய்முறை விளக்கம். நீங்களும் செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
கருப்பு அரிசி – இரண்டு டம்ளர்.
சர்க்கரை – நான்கு டம்ளர்
தேங்காய் பால் – ஒரு டம்ளர்.
உடைத்த முந்திரி – அரை டம்ளர்.
நெய் – இரண்டு டம்ளர்.
ஏலக்காய் – எட்டு
உப்பு கொஞ்சம்
செய்முறை
அரிசியைச்
சுத்தம் செய்து கழுவி எட்டு மணி நேரம் ஊற விட வேண்டும்.
ஊறிய
அரசியை மிக்ஸியில் போட்டு மை போல அரைக்க வேண்டும்.
அரைத்த
அரிசியுடன் உடைத்த முந்திரியைச் (இதனுடன் பாதாம் பயிரையும் சேர்க்கலாம். என்னிடம்
கைவசம் இல்லை) சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்ற வேண்டும். மைய அரைக்கக்
கூடாது.
அதனுடன்
ஏலக்காயையும் சேர்த்து ஒரு சுற்று.
இந்த
மாவுக்கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி
சார்க்கரை,
தேங்காய் பால்,
உப்பு,
சேர்த்து நன்கு கலக்கி வைக்க வேண்டும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நான்கு
டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.
கொதிக்க ஆரம்பித்ததும் இந்த மாவு கலவையை ஊற்றி
அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
மாவு வெந்து வரும் பக்குவத்தில்
நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிண்ட வேண்டும்.
இது தான் மிகவும்
கஷ்டம். கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அடி பிடித்துவிடும்.
துவக்கத்தில் நெய் முழுவதையும் மாவு இழுத்துக் கொள்ளும்.
கடைசியாக நெய் மாவிலிருந்து பிரிந்து வரும். இந்தத்
தருவாயில் இறக்கி ஆற விட்டு உண்ணலாம்.
தொதோல்
இந்த
தொதோலை ஒரு மாதம் கூட வைத்திருந்து சாப்பிடலாம். ஆனால் அதன் சுவை நம்மை வா வா
என்று அழைத்துக் கொண்டே இருப்பதால் ஒரு மாதமெல்லாம் வைத்திருக்க முடியாது.
இதன்
செய்முறை வெண்ணைப்பிட்டு போலவும், மைசூர் பாகு போலவும், அல்வா போலவும் இருந்தாலும்
இதன் சுவை இம்மூன்றையும் விஞ்சி விடும்.
செய்து சாப்பிட்டுப் பாருங்கள் நண்பர்களே.
முக்கியமாக ஒரு விசயம். இதைச் செய்யச் சொல்லிக்
கேட்டதால் இன்று அதிக நாள் கழித்து இதைச் செய்துச் சாப்பிடும் வாய்ப்பினை அளித்த அந்த
மூன்று பேருக்கும் நன்றி.
அன்புடன்
அருணா செல்வம்.
21.09.2014
தோழி
பதிலளிநீக்குஅருமையான டிஸ் ஒன்னு சொல்லிருகிங்க!! நன்றி. ஆனால் இது எனக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்துது. என் அம்மாவிற்கு காரைக்குடி பக்கத்தில் தான் நேடிவ். செட்டிநாட்டில் இதை கவுணி அரிசி என்பார்கள். கொஞ்சம் விலை அதிகமுள்ள, வேக நேரம் எடுத்துக்கொள்ளும் பண்டம். ஆனால் செட்டியார்களை பொறுத்தவரை மிகவும் விசேஷமான இனிப்பாக இத்தனை நினைப்பார்கள். குழந்தை பேறு தாமதமாகும் பெண்களுக்கு இது அதிகமாக சிபாரிசு செய்யப்படும். தொத்தல் கூட மற்றுமொரு செட்டிநாட்டு பலகாரம் தான். ஆனால் இது சிலோன் அல்வா என்றும் அழைக்கப்பட்டும். பச்சரிசி, தேங்காய்பால் மற்றும் சர்க்கரை பாகு கொண்டு தயாராகும் இது தமிழகத்தில் கீழக்கரையில் மிக பிரபலம். திருநெல்வேலி அல்வா போல. கவுணி அரிசிப்பொங்கல் என்பதை நீங்கள் தப்பாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நானும் browse பண்ணி செக் செய்தேன். the hindu தமிழ் நாளிதழில் மற்றும் தினகரனில்கீழக்கரை தொதல் பற்றி ஒரு பக்கமே செய்முறையோடு போட்டிருக்கிறார்கள். நான் சமையல் விசயத்தில் பெரிய ஆள் எல்லாம் இல்லை. ஆனால் எனக்கு நன்கு அறிமுகமான கொஞ்சம் செய்யவும் தெரிந்த இனிப்புகள் என்பதால் கூறினேன். ஒருமுறை கவுணி அரிசி என்றும் கூகிள் ல தட்டிபாருங்களேன். தவறாக இருந்தால் மன்னியுங்கள் தோழி!
வணக்கம் தோழி.
நீக்குஅருமையான தேடல். மிக்க நன்றி.
தோழி நீங்கள் சொல்வது அனைத்தையும் ஏற்கிறேன். ஏன் என்றால்.... நான் அரிசியில் கவுணி என்ற ஒரு ரகம் இருக்கிறது என்பதை உங்களின் பதிலின் மூலம் தான் அறிந்தேன்.
இதற்கு முன் சிகப்பரிசி, கருப்பரிசி என்று நிறத்தை வைத்துத் தான் இந்த அரிசிகளை அறிந்திருந்தேன்.
மெல்லிய சிகப்பரிசியில் பிட்டு, உண்டை, கொழுக்கட்டை செய்திருக்கிறேன். நம் ஊரில் கிடைக்கும் சற்று தடிமனான கருப்பரிசியில் நீங்கள் சொன்னது போல் அரிசியை ஊறவைத்துக் குக்கரில் வேகவைத்து சர்க்கரை தேங்காய் சேர்த்து பொங்கல் போல் செய்தும் சாப்பிட்டு இருக்கிறேன்.
தவிர, நான் பாண்டிச்சேரியில் இருந்தவரையில் வேறு ஊர்களுக்குச் சென்று தங்கியது கிடையாது. அதனால் அவர்களின் வழக்கம் தெரியாது.
நீங்கள் சொல்வது போலவும் தோழி இளமதி சொல்வது பொலவும் இதைச் சிலோன் அல்வா என்று தான் சொல்வார்கள் போல.
நான், எனக்குத் தெரிந்தவர்கள் சொன்னதை அப்படியே எழுதினேன்.
அதைப்படித்த நீங்கள், இவர்கள் எப்படியாவது சொல்லட்டும் என்று அனாவசியமாகப் போய் விடாமல் உங்களின் கருத்தை, உங்களின் மனத்தில் பட்டதை விளக்கி எழுதியது பாராட்டுக்குறியது.
ஆனால் எங்கள் ஊரில் (பாண்டிச்சேரியில்) ஏன் இதை தொதோல் என்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஒரு சமயம் தொத்தல் தான் தொதோல் ஆனதோ.....
எதுவாக இருந்தாலும் இது ஒரு சுவை மிகுந்த பலகாரம்.
தங்களின் வருகைக்கும் விளக்கமான கருத்தோட்டத்திற்கும்
மிக்க நன்றி தோழி.
Hi,
நீக்குApologies for writing in English. I am a Srilankan and fan of Dodol (in Srilanka it is called Dodol). We make this sweet with Rice flour, Jaggery and coconut milk. I can still recall the painstaking process, sometime it took us whole night to stir the mixture till it gets the right texture.
1. Final product will not have the consistency of Halva, it is much stronger and can cut into pieces.
2. We never use sugar.
3. It is famous with all Tamil, Sinhala, Christian and Muslim.
4. I have found the same sweet in Malaysia and Thailand as well, surprisingly name was the same.
https://www.youtube.com/watch?v=BeWwCX5Djg8
Keep up the good work sister.
Senthil
வணக்கம் சகோ.
நீக்குதங்களின் வருகைக்கும் விளக்கத்திற்கும்
மிக்க நன்றி.
.ஆஹா... படங்களுடன் விளக்கி விட்டீர்கள். இங்கு இந்தியாவில் கருப்பு அரிசி கிடைக்குமா தெரியவில்லை.பாஸ் கிடா சொல்லி ஒருமுறை செய்து பார்க்க வேண்டும். நன்றி.
பதிலளிநீக்குசெய்து சாப்பிட்டுப் பாருங்கள் ஐயா.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.
ஆகா படங்களைப் பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மேலிடுகிறது
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
அப்படி என்றால் படங்களைச் சரியாகத் தான் பிடித்திருக்கிறேன் என்பது புரிகிறது.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.
செய்முறை விளக்கம் அருமை..
பதிலளிநீக்குஅப்படியா....?
நீக்குமிக்க நன்றி “உண்மைகள்“
பண்ணியதை அப்படியே பார்சல் அனுப்பலாமே
பதிலளிநீக்குஉண்மைகள்..... நான் இதைவிட உப்புமா நன்றாக செய்வேன். அதை அனுப்பட்டுமா....?
நீக்குசிறந்த செய்முறை வழிகாட்டல்
பதிலளிநீக்குதொடருங்கள்
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.
அட.. அட.. வாசனை மூக்கைத் துளைக்கின்றதே!...:)
பதிலளிநீக்குஇது இலங்கையில் மிக விசேடமான ஒரு இனிப்புப் பண்டம்!
கூடுதலாக சிங்கள மக்கள் செய்வதை முன்பு பார்த்திருக்கின்றேன்.
அவர்கள் நல்ல வெல்லம் அல்லது கித்துள் பனங்கட்டி எனப்படும் வெல்ல வகை அதனைத்தான் சேர்த்துச் செய்வார்கள்.
கேசரியைத் துண்டு போடுவது போல தட்டில் பரவி சதுரத் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொடுப்பார்கள்!
அருமையான பகிர்வு தோழி! வாழ்த்துக்கள்!
தோழி..... இதை கேசரி போல் துண்டெல்லாம் போட முடியாது. ஜவ்வு மாதிரி ஒட்டிக்கொண்டு தான் இருக்கும்.
நீக்குஒரு சமயம் எனக்குத் தான் சரியாக கேசரி போல் பதம் வரவில்லையோ.....
ஒரு சமயம் வெல்லம் போட்டால் அப்படி வருமோ....
ஆனால் உண்மையில் அந்த அரிசி வேகும் போது ஒரு சுகமான வாசனை வரும் தான் தோழி.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி.
சிறப்பான உணவாகத்தான் தெரிகிறது. கருப்பு அரிசி இங்கே கிடைக்குமா என்று விசாரிக்க வேண்டும்!
பதிலளிநீக்குஅந்த கருப்பு அரிசியின் பெயர் கவுணியாம். கேட்டுப்பார்த்து வாங்கிச் செய்து பாருங்கள் ஜி.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.
வணக்கம் சகோதரி!
பதிலளிநீக்குஎன் வலைத்தளம் வந்து கருத்திட்டு என்னை மேலும் எழுத ஊக்கபடுத்திய உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்..! சகோதரர் திரு. கில்லர்ஜி எனக்கு கொடுத்த “பல்திறப் புலமை விருதை” உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த பெருமையடைகிறேன்..! பெற்றுக் கொள்வதற்கு நன்றிகள்..
வணக்கத்துடன்,
கமலா ஹரிஹரன்..
வணக்கம் தோழி.
நீக்குதாங்கள் கில்லர்ஜி கையால் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள். அதை எனக்கும் அளித்தமைக்கு மிக்க நன்றி தோழி.
ஒரு "டி ஸ்பூன்" சாப்பிட்டால் எத்தனை காலரி? ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிட்டால் எத்தனை காலரி ஏறும்னு சொல்லாம விட்டுட்டீங்க? :)
பதிலளிநீக்குகலோரி எல்லாம் கணக்குப் பார்த்தால் எதையும் சாப்பிட முடியாது வருண் சார்.
நீக்குபேசாமல் இப்படி செய்யலாம். சுகரோ கொலஸ்டிராலோ இருப்பவர்கள் ஒரு ஏ ஸ்புன் சாப்பிட்டால் சாப்பிடும் மாத்திரையில் மேலும் ஒரு மாத்திரை அதிகமாக, ஒரு டேபிள் ஸ்புன் சாப்பிட்டால் இரண்டு மாத்திரை அதிகமாக கூடவே சாப்பிட்டு விட வேண்டியது தான்.
வருண் சார்..... வாழ்க்கையில் விரும்பியதைச் சாப்பிடக்கூட முடியாது என்றால் அப்புறம் எதற்காக மருந்து மாத்திரை, டாக்டர், ஆஸ்பிட்டல் எல்லாம்.....
அருமையாக சமையல் குறிப்பு ஒன்றை எழுதியுள்ளீர்கள். சாப்பிடவும் சுவையாகவே இருக்கும் என்பதை அதை செய்வதற்குரிய பொருட்களை வைத்தே புரிந்து கொள்ளலாம் தான். ஆனால் இதை வயதானவர்கள் குறிப்பாக BP, diabètes உள்ளவர்கள் சாப்பி்ட்டால் எத்தனை மணி நேரத்திற்குள் டாக்டரை பார்க்க வேண்டும் என்று தெரியவில்லை. அவ்வளவு கொழுப்பு பொருட்கள் இதில் இருக்கிறதே தோழி :( ஆனாலும் படங்களுடன் கூடிய உங்கள் விளக்கமே, நீங்கள் நிஜத்தில் செய்து கொடுத்தது போல இனிக்கிறது. நன்றி தோழி !
பதிலளிநீக்குவயதானவர்கள் நோயாளி என்றெல்லாம் பார்ப்பதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் சாப்பிட்டால் சதை விழுந்து விடுகிறதே என்ற கவலையால் தான் பிடித்திருந்தாலும் நிறைய பலகாரங்களைச் செய்து சாப்பிடுவது கிடையாது.
நீக்குஎன்றோ ஒரு நாள்.... சாப்பிடலாம். அதுவும் மிகவும் குறைவாக.
வாழ்க்கையில் ஒரு சிலர் எவ்வளவோ பெரிய பெரிய லட்சியங்களை எல்லாம் சாதித்து விடுகிறார்கள். ஆனால் நம் நாவிற்கு விரப்பமானதைக் கூட ஒரு சிலரால் சாப்பிட முடிவதில்லை எனும் போது.... வாழ்வில் நோய் எவ்வளவு கசப்புள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது நண்பரே.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி.
மீண்டும் நன்றி ஐயா.
பதிலளிநீக்குஅருணா,
பதிலளிநீக்குஇது க்ளூட்டோனியஸ் வகை கருப்பு அரிசிதானே? இங்கே இந்த வகை அரிசிமாவும் சீனக்கடையில் கிடைக்கிறது. அதில் தாய்லாந்து பனை வெல்லம் சேர்த்து கரைத்துக்கொண்டு ரைஸ் குக்கரில் ஊற்றி அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறிவிட்டு செய்து பார்த்தேன். நன்றாகவே வந்தது:-)
அடக்கடவுளே..... நீங்களெல்லாம் இவ்வளவு ஈசியாக செய்வதை நான் மிகவும் சிரத்தை எடுத்துச் செய்கிறேனா.....? (இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். நான் மிகவும் “கத்துக்குட்டி“ என்பதை)
நீக்குஆனால் இங்கே இந்த அரிசி மாவாக கிடைப்பதில்லை அம்மா. அடுத்து குக்கரில் ஊற்றி வேக வைப்பதை நான் கேள்விப்பட்டதே இல்லை.
நல்ல தகவல். நான் முயற்சிக்கிறேன் அம்மா.
தங்களின் வருகைக்கும் ஈசியான செய்முறை விளக்கத்திற்கும் மிக்க நன்றி அம்மா.
அருமையான ஒரு பண்டம்..
பதிலளிநீக்குசெய்முறை விளக்கம் இனிது இனிது... தங்கை அருணா செல்வம்...
அப்படியே ஒரு பார்சல் எனக்கு அபுதாபிக்கு...
அதற்கென்ன.... அனுப்பி விடுகிறேன் மகி அண்ணா.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி.
படமும் பதிவுமே இனிக்கிறது! எனக்கு அது போதும்!
பதிலளிநீக்குபடங்களிலேயே வயிறு நிறைந்து விட்டதா....?
நீக்குஇதே மாதிரி எல்லோருக்கும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கம்.....
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி புலவர் ஐயா.
இலங்கையில் சிங்கள, முஸ்லீம் மக்கள் இதை மிக சுவையாகச் செய்வார்கள்.ஊரில் விளையும் சிவப்பு அரிசியிலேயே செய்வார்கள்.
பதிலளிநீக்குசிங்கள ,மட்டக்களப்பு முஸ்லீம் மக்கள் இதற்கு "கித்துள்" வெல்லம் சேர்ப்பார்கள்.
இலங்கையில் பரவலாக சவ்வரிசியும் சேர்க்கும் பழக்கம் உண்டு.
யாழ்ப்பாணத் தமிழர் மத்தியில் வெகு குறைவு. தேவையெனில் முஸ்லீம் நண்பர்களிடமே
செய்விப்போம்.
உங்கள் செய்முறையை பார்த்து ஒருதடவை முற்ச்சி செய்யலாம் போல் இருக்கிறது.
அப்போ இது சிங்களர் செய்யும் பலகாரம். எனக்கு ஆங்கிலோ இந்தியன் (கிரயோல்) தான் செய்வார்கள் என்று தங்கையின் மாமியார் சொன்னதால் அப்படிப் புரிந்து கொண்டிருந்தேன்.
நீக்குதங்களின் வருகைக்கும் விளக்கத்திற்கும்
மிக்க நன்றி யோகன் பாரீஸ் அவர்களே!
சாதாரண வெள்ளை அல்லது சிகப்பு அரிசியில் செய்து பார்க்கவேண்டும். பச்சரிசியா புழுங்கள் அரிசியா. அல்வா செய்முறை போல் இருக்கிறதோ.?
பதிலளிநீக்குநான் சிகப்பு அரிசில் செய்தேன் ஐயா.
நீக்குhttps://www.youtube.com/watch?v=BeWwCX5Djg8
இந்த முகவரியில் இதை வேறு மாதிரி செய்திருக்கிறார்கள்.
எப்படி செய்தாலும் இது சுவையான பண்டம்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஐயா.
அருமையாக இருக்கிறது. ஸாதிகா அவர்கள் ஒருமுறை கீழக்கரை தோததல் குறப்பு எழுதி இருந்தார்கள் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குசெய்முறை நன்றாக கொடுத்து இருக்கிறீர்கள் செய்து பார்க்கிறேன்.
நன்றி.
நானும் பார்த்தேன் அம்மா.
நீக்குமிகவும் இலகுவா தெரிகிறது. அது போலவும் செய்து பார்க்கிறேன்.
என்ன.... செய்தால் நான் தான் சாப்பிட்டு முடிக்க வேண்டும்.((
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி அம்மா.
https://www.facebook.com/pages/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/1419630638256494?fref=nf
பதிலளிநீக்குஅருணா இது ஸாதிகா அக்கா அவர்களின் குறிப்பு லிங்க் அனுப்பறேன் . தொதல் கருப்பு புட்டரிசி எனும் கவுனி அரிசியில் செய்வது .மிக டேஸ்டியான ஒரு ஸ்வீட் எங்க பாட்டி வீட்டிலும் செய்வாங்க உங்களை பார்த்து எப்படியாச்சும் செய்யனும்னு ஒரு ஆசை வந்திடுச்சி :)
பதிலளிநீக்குஸாதிகா அக்காவின் குறிப்பைப் பார்த்தேன். அது சற்று வித்தியாசமாக இருக்கிறது. அப்படியும் ஒரு முறை செய்து பார்த்து விடுகிறேன்.
நீக்குசிரத்தை எடுத்து முகவரி தந்தமைக்கும் மிக்க நன்றி தோழி.
check your fb msg from cherubcrafts :)
பதிலளிநீக்குசரி பார்க்கிறேன். நன்றி தோழி.
நீக்கு//இதை கேசரி போல் துண்டெல்லாம் போட முடியாது. ஜவ்வு மாதிரி ஒட்டிக்கொண்டு தான் இருக்கும்.///
பதிலளிநீக்குசகோதரி,
தொதல் இலங்கையில், குறிப்பாக சிங்களவர்களின் முக்கியமான இனிப்பு பலகாரம். நீங்கள் கூறுவதைப் பார்த்தால் இது தமிழ்நாட்டு அல்வாவுக்கும் இலங்கைத் தொதலுக்கும் இடையிலுள்ள ஒருவகை இனிப்பு பண்டம் போலிருக்கிறது ஏனென்றால் தொதல் சவ்வு மாதிரி கையில் ஒட்டாது, இலங்கையில் உணவு வகைகளில் நெய் அல்லது பசுப்பாலை உபயோகிப்பது மிகவும் குறைவு. தொதலுக்கு நாங்கள் நெய் சேர்ப்பதில்லை. முழுக்க, முழுக்க செறிவு நிறைந்த தேங்காய்ப்பாலில் மட்டும் செய்யப்படுவது தான் தொதல். கறுப்பு அரிசி தேவையில்லை, சாதாரண சிவப்பரிசி மாவையும் (மிகவும் குறைந்தளவு மா சேர்க்க வேண்டும் அல்லது தொதல் வராது களி தான் வரும்). தேங்காய்ப்பாலையும், சர்க்கரையையும், முந்திரிப்பருப்பையும் (cashew nuts) சேர்த்து அடுப்பில் வைத்து, தேங்காய்ப் பாலிலிருந்து தேங்காய் எண்ணெய் பிரியும் வரை கிண்டிக் கொண்டிருந்தால், தொதல் ரெடி (இது இலங்கைத் தொதல் ). :-)
ஓ.... அப்படியா....?
நீக்குஎனக்குச் சொல்லிக் கொடுத்தவர் மேலே உள்ள முறையில் தான் சொல்லிக் கொடுத்தார். அதன் படி செய்ததில் அது கேசரி போல் துண்டாக போட முடியாதபடி தான் வந்தது.
நீங்கள் சொல்லும் விதத்தில் செய்து பார்க்கிறேன். இங்கே செறிவு சிறைந்த தேங்காய் கிடைப்பது தான் கஷ்டம். (பத்து தேங்காய் வாங்கினால் இரண்டு தான் அழுகல் இல்லாமல் இருக்கும்) இருப்பினும் முயற்சிக்கிறேன்.
தங்களின் முதல் வருகைக்கும் மிகவும் இலகுவாக தொதோல் செய்முறையைச் சொன்னதற்கும்
மிக்க நன்றி சகோ.
mouthwatering.my mom will make this.tempting thanks for the receipe
பதிலளிநீக்கு