ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

வள்ளலார் காட்டும் வழி!





மேடான நிலத்தின்மேல் வீழும் நீரோ
   மேல்தெளித்துக் கீழ்விழுந்தே ஓடும் என்றும்!
நாடாத மனத்துடனே நாலும் கற்க
   நன்மையினை அறிவதற்கே கேள்வி தோன்றும்!
கேடான மனமுடைய கீழோர் கூட
   கேட்டறிந்து வள்ளலாரைக் கற்று வந்தால்
டாக இவ்வுலகில் ஏது முண்டோ?
   என்றுநன்றே பலக்கேள்வி கேட்டு நிற்பார்!

கோடான கோடியினைச் சோதி யாக்கிக்
   கொடுப்பதுவும் அழிப்பதுவும் அதுவே என்றார்!
வீடான பெரும்பேறு என்ப தெல்லாம்
   வெறும்வயிற்றுக் குணவிட்டால் கிடைக்கும் என்றார்!
தேடாமல் கிடைக்கின்ற செல்வ மென்றால்
   தெரிந்துதவும் போதுவரும் இன்பம் என்றார்!
சூடான வார்த்தைகளால் நெறியைக் கூட்டிச்
   சொற்றொடரில் மனுதர்ம உரையில் தந்தார்!

வாடாத பசும்பயிரைக் கண்டு விட்டால்
   வறுமையதன் நிலையாமை ஓடும் என்றார்!
கூடாத மனங்களையும் அன்பில் கூட்டிக்
   கொல்லாமை நன்னெறியை நாடச் செய்தார்!   
ஓடாத சாதியெனும் பேயைக் கூட
   ஓட்டிவிட்டார் சன்மார்க்க நெறியை ஊட்டி!
சாடாத பெண்ணடிமைத் தனத்தைச் சாடி
   சரிசெய்யத் துணிந்தவர்தாம் வள்ள லாரே!

ஆடாத மனம்கூட அசைந்தே ஆடும்
   அவர்த்தமிழின் அர்த்தமதை ஆழ்ந்து கற்றால்!
பாடாத மயில்கூட பாடி யாடும்!
   பைந்தமிழின் சுவையதனை அறிந்து கொண்டால்!
காடாக இருண்டிருந்த உள்ளம் மின்னும்
   கவியவரின் கற்பனையைக் புரிந்து கொண்டால்!
மூடாத இறையருளைப் பெற்ற தாலே
   முடிவின்றி வாழ்பவர்தாம் வள்ள லாரே!

அருணா செல்வம்.

6 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஆடாத மனம் கூடஅசைந்தே ஆடும்
    அவர்த்மிழின் அர்த்தமதை ஆழ்ந்து கற்றால்
    பாடாத மயில் கூட பாடியாடும்
    பதிவு அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. இன்தமிழ் வரிகளால்
    வள்ளலாருக்கு சூட்டப்பட்ட
    பாமாலை
    என் நெஞ்சம் நிறைத்தது சகோதரி...

    பதிலளிநீக்கு
  3. அருமை... அருமை.. வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  4. ஆடாத மனம்கூட அசைந்தே ஆடும்
    அவர்த்தமிழின் அர்த்தமதை ஆழ்ந்து கற்றால்!
    பாடாத மயில்கூட பாடி யாடும்!
    பைந்தமிழின் சுவையதனை அறிந்து கொண்டால்!
    காடாக இருண்டிருந்த உள்ளம் மின்னும்
    கவியவரின் கற்பனையைக் புரிந்து கொண்டால்!
    மூடாத இறையருளைப் பெற்ற தாலே
    முடிவின்றி வாழ்பவர்தாம் வள்ள லாரே!

    ----------

    அருமை... அருமை...
    வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  5. "வீடான பெரும்பேறு என்ப தெல்லாம்
    வெறும்வயிற்றுக் குணவிட்டால் கிடைக்கும் என்றார்!"
    வெறும் வயிற்றுக்கு உணவிட்டால் வீட்டுப் பேறு கிடைக்கும் என்பதை புரிந்துகொண்டு செயல்படவேண்டும் என உணர்த்தும் வரிகள் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு