செவ்வாய், 28 நவம்பர், 2023

கம்போடியாவில் “உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு 2023“

 


    கடந்த 22.11.2023 அன்று கம்போடிய கலை மற்றும் பண்பாட்டுத் துறையும் ஆங்கோர் தமிழ்ச் சங்கமும் இணைந்து சியாம் ரிப் என்ற நகரத்தில் “உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு“ நடத்தினார்கள். அதற்கு நானும்  பங்கேற்பளாராகச் சென்றிருந்தேன்.

    விழா அவர்கள் சொன்னது போல் சரியாக ஏழு முப்பதுக்குத் துவங்கியது. விழா அரங்க வாசலில் இருந்து கம்போடிய நாட்டு முறைப்படி நடன வாத்திய இசையுடன் பெண்களும் ஆண்களும் நடனமாடியபடி அரங்கிற்கு அழைத்துச் சென்றார்கள். அழகான அரங்கம். பெரிய பேனருடன் மேடை இருந்தது.

    நம் நாட்டு முறைப்படி விளக்கேற்றி விட்டுக் கம்போடிய தேசிய கீதம் பாடினார்கள். அதன் பிறகு நம் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது.  இதன் பிறகு அந்நாட்டு வழக்கமான வரவேற்பு நடனம் நடத்தப்பட்டது. அழகிய பெண்கள் அவர்களின் பாரம்பரிய உடையணிந்து பூக்களைத் தூவி நடனம் ஆடியது மிகவும் அழகாக இருந்தது, அவர்களுக்குப் பக்க வாத்தியமும் பாடலும் மேடையிலேயே நேரடியாகப் பாடப்பட்டது மேலும் சிறப்பாக இருந்தது. அதன் பிறகு இலங்கையில் இருந்து வந்த டாக்டர் அபிராமி அவர்களின் பரத நாட்டியம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து கம்போடிய கலை மற்றும் பண்பாட்டுத் துறை துணை இயக்குநர் ஆங்கிலத்தில் சிறப்புரை ஆற்றினார். ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்த கவிஞர் ரவிச்சந்திரன் அவர்கள் அரங்கிற்கு தலைவராக அமர்ந்து ஒவ்வொரு கவிஞர்களாக மேடைக்கு அழைக்க,

    கவிஞர் மனுநீதி சோழன் ஆஸ்திரேலியா, கவிஞர் நந்திவர்மன் ஆஸ்திரேலியா, கவிஞர் வாசுகி ஆஸ்திரேலியா, பாவலர் அருணா செல்வம் பிரான்ஸ், பாவலர்மணி கவிப்பாவை பிரான்ஸ், பாவலர் பத்ரீசியா பிரான்ஸ், கவிஞர் மனோன்மணி தமிழ்நாடு, கவிஞர் ராணி சிவபிரகாசம் தமிழ்நாடு, கவிஞர் தாட்சாயணி இலங்கை ஆகியோர் தங்கள் கவிதைகளை வாசித்தார்கள். கடைசியாக கவிஞர் ரவிச்சந்திரன் அவர்கள் தங்களின் கவிதையுடன் கவிநிகழ்வை முடித்தார்.

     மதிய உணவுக்குப் பின் சரியாக இரண்டு முப்பது மணிக்கு நிகழ்வு துவங்கியது. துவக்க நிகழ்வாக கம்போடிய நாட்டுக் கவிஞர் தாமரை அவர்கள் எழுதிய பாடலைத் திரையிட்டார்கள். அதனுடன் விழாவிற்கு வருகை தந்த நடிகர் விஜய் விஷ்வா அவர்கள் நடித்த தமிழிசைப் பாடல்கள் இரண்டும் ஒளிபரப்பப் பட்டது. தமிழின் சிறப்பை எடுத்துரைத்த பாடல்கள் காதுக்கும் மனத்திற்கும் மகிழ்வளித்தது.

    இறுதியாக பாடல் வாசித்த எட்டுக் கவிஞர்கள் அனைவருக்கும் அவர்களின் தகுதிக்குத் தக்கவாறு விருது அளித்துச் சிறப்பித்தார்கள். பார்வையாளர்களாகக் கலந்து கொண்ட பதிமூன்று பேருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கினார்கள். பின்பு வந்திருந்தவர்களுடன் கலந்து பேசுவதுடன் நான்கு மணியளவில் விழா முடிந்தது. இரண்டு நாள் விழா இந்த ஒரு நாளுடன் முடிந்தது.

    தமிழ் தெரிந்த முப்பதுக்கும் குறைவானவர்களே விழாவில் கலந்து கொண்டார்கள். பார்வையாளர்களாக ஏறக்குறைய நாற்பது கல்லுரி மாணவ மாணவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்குத் தமிழ் தெரியாது என்றாலும் அமைதியாக அவர்களின் கையில் இருந்த செல்போனில் மூழ்கி இருந்தார்கள்.

    விழாவின் ஏற்பாட்டாளர் திரு சீனுவாச ராவ் அவர்களிடம் “வெறும் இருபது பேர்களை வைத்து “உலகத்தமிழ்க் கவிஞர்கள் மாநாடு நடத்துவது சரியா ?“ என்ற எங்களின் ஆதங்கத்தைக் கேட்ட போது அவர், “ஐந்து பேர் மட்டும் வந்தாலும் நாங்கள் மாநாடு நடத்துவோம்“ என்று பெருமிதமாகக் கூறினார்.

   இப்படி இருப்பினும் கடைசியா, திரு சீனிவாசராவ், திரு ஞானசேகரன், திருமதி தாமரை சீனிவாசராவ் ஆகிய மூன்று தமிழர்களே உள்ள கம்போடிய நாட்டில் தமிழுக்காகத் துணிந்து இப்படிப்பட்ட விழாவைச் செய்வது ஆச்சர்யத்தைக் கொடுத்தாலும் உண்மையில் வரவேற்கத்தக்கது.

வாழ்க தமிழ் !
.
அன்புடன்
பாவலர் அருணா செல்வம்
28.11.2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக