(சந்த கலிவிருத்தம்)
.
உணவே மருந்தாய்! உழவே தொழிலாய்!
உணர்வே கலையாய்! உடலே மலராய்!
குணமே உயர்வாய்! குவிந்தே தலைமேல்
பணமே இருந்தால் பயமே வருமே!
.
மலையாய் விரைந்தே மலிவாய் பொருளால்,
அலையாய் விழுமே அறியா தெதுமே!
நிலையாய் அமர்ந்தே நெடிதாய் வரைவே
கலையாய் எழுமே கவியாய் வருமே!
.
மனமே அதைநாம் மதியா திருந்தால்
கனமாய் அதுவே கடிதா கிடுமே!
கனவே எனநாம் கனிந்தே இருந்தால்
தினமே வருமே திறனோ டிடுமே!
.
முதிரா வயதோ முளையாப் பயிராம்!
கதிராய் வளர்ந்தால் கடிதோ இலையாம்!
விதியால் நடந்தால் வியந்தே அறிவோம்!
மதியால் புரிந்தால் மகிழ்ந்தே பயில்வோம்!
.
பாவலர் அருணா செல்வம்
14.12.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக