(எண்சீர்
விருத்தம்)
.
ஐந்திணையை வகுத்துவிட்ட நம்மின் முன்னோர்
……..ஆராய்ந்து
காட்டிவிட்டார் தமிழர் வாழ்வை!
பைந்தமிழின் பெருமையினைக் குறிஞ்சி, முல்லை,
……..பாலையுடன்
மருதநெய்தல் நிலமாய்ச் சொன்னார்!
பைந்தொடிகள் மனம்கண்டு அறிய வைத்த
……..பழம்பெரும்
புலவர்களை என்ன சொல்வோம்!
ஐந்திலக்கின் ஆழறிவைப் படித்துப் பார்த்து
……..அகத்திணையும்
புறத்திணையும் அறிவோம் என்றும்!
குறிஞ்சியெனும் மலைசார்ந்த இடத்தில் எல்லாம்
……..குறிசொல்லும்
குறவனுடன் குறத்தி வாழ்வை
நெறியான முறையினிலே சொல்லிச் சென்றார்!
……..நிறைவான
புணர்தலுக்குக் கூதீர் காலம்,
செறிவான முன்பனியும், பொழுதாம் யாமம்!
……..சிறப்பான
முருகனையே வணங்கி நின்றார்!
வெறியாடல் வெகுசிறக்க அருவி நீரும்,
……..விளைவித்த
திணையரிசி உண்டு வாழ்ந்தார்!
முல்லையெனும் காடுடைய ஆயர் எல்லாம்
……..முறையான
பிரிவுகளைப் பொறுத்தி ருந்தார்!
நல்லழகு திருமாலே அவரின் தெய்வம்!
……..நல்லிசையாம்
குழலூதல், மாடு மேய்த்தல்,
மல்லுகட்டி ஏறுதழுவி இன்பம் கொண்டார்!
…..…மழைக்காலம்
மாலைநேரம் பொழுதாய்க் கண்டு
நல்வரகு திணைமாவு உணவாய்க் கொண்டு
……..நாயகனின்
வரவுக்காய்க் காத்து வாழ்ந்தார்!
மருதநில மக்களுக்கோ வயலே செல்வம்!
……..மற்றொருத்தி
வருவதனால் நிமித்தம் ஊடல்!
பெரும்பொழுது வைகறையும், காலம் எல்லாம்!
……..பிரிக்கின்ற
இந்திரனே இங்கே தெய்வம்!
எருமையினை ஏர்பூட்டி உழுது வந்து
……..ஏற்றமிகு
நெல்லரிசி உண்டு வாழ்ந்தார்!
விரும்பாத வேலையினைத் தலைவன் செய்ய
……..விரும்பியவள்
என்றென்றும் ஊடல் கொள்வாள்!
நெய்தநில மக்களுக்கோ கடலே எல்லாம்!
……..நெஞ்சுருகும்
இரங்கல்தான் இவர்கள் வாழ்வு!
பெய்கின்ற மழைபகவான் இங்கே தெய்வம்!
……..பிற்பகலும்
கார்காலம் பொழுதாம் இங்கு!
செய்தொழிலோ கடல்காணும் மீனும் உப்பும்
……..சேர்ந்திருக்கும் பரதவர்கள்
விற்றே உண்பார்!
மெய்யில்லா தொழிலாலே துன்பம் கொண்டு
……..மீண்டுவர
தலைவியர்கள் விடுவார் கண்ணீர்!
பாலைக்கோ நிலமில்லை! குறிஞ்சி, முல்லை,
……..பசுமையற்ற
நிலத்தினையே முன்னோர் சொன்னார்!
வேலையென மறவரிவர் குற்றம் செய்து,
……..வெண்பகலில்
கொற்றவையை வணங்கி வாழ்ந்தார்!
சோலையற்ற வாழ்வினிலே பிரிதல் சோகம்
……..சுமையான
வாழ்வாகும் நிலமோ பாலை!
ஓலையதன் வடிவினிலே தொன்னூல் சொன்ன
……..உயர்வான
ஐந்திணையும் தமிழர் வாழ்வே!
.
பாவலர் அருணா செல்வம்
11.01.2021
சிறப்பு...
பதிலளிநீக்கு