அடைவிரவிப் பொருள் வேறுபட மொழிதல்!
பாடலில் தான் கருதிய பொருளுக்கும், அதனை மறைத்து அதற்கு ஒத்ததாகக் கூறப்படும் பொருளுக்கும் சில அடைமொழிகளை ஒத்ததாகக் கூறியும், சில அடைமொழிகளை ஒன்றிற்கு மட்டும் சிறப்பாகக் கூறியும், தான் கருதிய பொருளைச் சொல்லாமல் அதற்கு ஒப்பான வேறு பொருளைக் கூறுவது “அடைவிரவிப் பொருள் வேறுபட மொழிதல்“ ஆகும்.
உ. ம்
உடல்முழுதும் தந்தும், ஒதுங்கி
அசைந்தும்,
மடத்தில் மடங்காதும் வாழும்! – வடம்சேரத்
தோட்டத்தில் கன்றுடன் துள்ளிடும்! நல்லுணவை
ஈட்டிடும் வாழை இனிது!
பொருள் – உடல் முழுவதையும் நமக்குத்
தந்து உதவும். ஓரிடத்தில் நின்று அசைந்தாடும். கோவில் மற்றம் சுபநிகழ்வுகளில் முன் நிற்கும். மடங்காதது.
இதைக் கயிறு சேர்த்துக் கட்டுவார்கள். தோட்டத்தில்
கன்றுடன் இருந்து நமக்கு நல்ல உணவைத் தரும் வாழை மரம்.
பாடலில்
சொல்லக்கருதிய பொருள் பசு மாடு. பசுவானது பால் மற்றுமல்லாது இறைச்சி,
தோல், சாணம் என்று உடல் முழுவதையும் நமக்குத் தந்து
உதவும். உணவை வாயில் ஒதுக்கிப் பின்பு அசைபோடும். கோவில் மற்றும் சுபநிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்லப்படும். அங்கே அது மடங்கி அமராது. கயிற்றால் கட்டப்படும்.
தோட்டத்தில் அதன் கன்றுடன் இருந்து நமக்கு நல்ல உணவான பாலைக் கொடுத்திடும்.
பாடலில்
சொல்லக்கருதிய பொருள் பசுவும் கன்றும் ஆகும். அதனைப் புலப்படுத்த
அதற்கு ஒத்ததாகக் கூறப்பட்ட பொருள் வாழை மரம். தன் உடல் முழுவதும்
தந்தும், ஒதுங்கி அசைவதும், மடத்தில் மடங்காமல்
நிற்பதும் கயிற்றுடன் இணைக்கப் படுவதும் பசுவுக்கும் வாழைக்கும் பொதுவான அடைமொழிகள்
ஆகும். தோட்டத்தில் துள்ளிடும் கன்றுடன் நல்லுணவைத் தரும் என்னும்
அடைமொழியானது பசுவுக்கு மட்டும் உரிய சிறப்பு அடைமொழியாகும். இப்படி இரண்டிற்கும் அடைமொழிகள் விரவி வந்தும், பசுவிற்கு
மட்டும் சிறப்பான ஒரு அடைமொழியைக் கூறி இருப்பதாலும் இது “அடைவிரவிப்
பொருள் வேறுபட மொழிதல்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
26.06.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக