தைமகளே வா வா !
-
தமிழின் பெருமைப் பாடிநின்றோம்!
தலையை நிமிர்த்தி
உயந்திருந்தோம்!
அமிழ்தே என்றே அறிந்திருந்தும்
அதனை வளர்க்கும் நிலைமறந்தோம்!
உமியை உண்டு மனமகிழ்ந்தே
உரிய அரிசி பயன்மறந்து
தமிழன் என்றே மார்த்தட்டும்
தாழ்வைக் காண்பாய்த் தைமகளே!
குப்பைத் தொட்டி அரசியலில்
குவிந்தே இருக்கும்
நாற்றங்கள்!
தப்பைக் கூடச் சரியென்றே
தலையை ஆட்டும் கூட்டங்கள்!
சப்பை மாட்டு முதுகினிலே
சபையைக் கூட்டும்
முண்டங்கள்!
உப்புக் குதவா ஆட்சியதன்
ஒலியைக் கேட்பாய்த்
தைமகளே!
உழவன் என்னும் உயர்வுள்ளம்
உழைப்பைக் கொடுத்தே
உடலிளைத்துக்
கழனி காடு நலஞ்சேர்த்துக்
களையை எடுத்துப் பயிர்செய்து
சுழலும் வாழ்வில் சுகம்சேர்த்தார்!
சூழ்ச்சி கொண்ட தரகரினால்
இழந்த வளத்தில் கண்கலங்கும்
இழிவைப் பார்ப்பாய்த்
தைமகளே!
உன்னை வாழ்த்தித் தமிழ்மரபால்
உயர்த்தி அன்று வரவேற்றேன்!
பொன்னாம் பண்ணைச் சூடியநான்
புகழும் தமிழால் சொல்கின்றேன்!
நன்மை என்று எந்நாட்டில்
நவில ஒருசொல் இன்றில்லை!
இன்பம் இனிமேல் வருமென்றால்
இனிதாய் இன்று வந்துவிடு!
துன்பம் கண்ட நிலைபோக்கித்
துணிவை நீயே தந்துவிடு!
மென்மை நெஞ்சம் வளமேந்தி
மேலும் சிறக்க வைத்துவிடு!
அன்பில் நாளும் ஆடுகின்ற
அகத்தை நாளும் கொடுத்துவிடு!
பொன்னாம் தமிழன் தைமகளே
புதுமைப் பெண்ணாய்ப்
பொலிந்துவிடு!
-
அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!
-
அன்புடன்
பாவலர் அருணா செல்வம்
14.01.2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக