நேற்று !
-
நேற்று
முடிந்த நிகழ்வே பழமையெனச்
சாற்றிடும்
காலத்தின் சால்பு!
.
பழமைகள்
என்றுமே பாழாவ தில்லை
பழத்தின்
விதையாகும்! பற்று!
.
நல்வினை
செய்திருந்தால் நாளெல்லாம் தேடிவரும்
பல்புகழ்
மேலோங்கும் பார்!
.
கடந்துவிட்ட
நாளின் கவலைகள் நேற்றே
கடந்ததெனப்
பாடு கவி!
.
முடிந்ததாய்
நம்பும் முடிந்திடாத் தோல்வி
கொடிதாகும்
நெஞ்சுள் கொழித்து!
.
ஒருநாள்
பயணம் ஒழுங்காய் முடிந்தால்
திரும்ப
நினைக்காது ! தீர்ப்பு!
.
கற்றநற்
கல்வி கலையாய் வளர்ந்திடும்
மற்றதெல்லாம்
போகும் மறந்து!
.
நினைத்ததும்
ஏங்கும் நிகழ்வோ இருந்தால்
அனைத்துலகின்
மேலாம் அது!
.
கொடிய
செயல்கள் கொடுத்திடும் தீர்வு
நெடிதாய்
நெருக்கிடும்நன் னெஞ்சு!
.
காலத்தின்
கோலத்தைக் கண்டுவிட்டோம் வாழ்விலே
ஞாலத்தின்
ஓட்டம் நயம்!
.
இன்று!
.
இன்று
நடக்கின்ற இன்ப நிகழ்வுகள்
என்றும்
கிடைக்காதாம் எண்ணு!
.
நல்லதோ
அல்லதோ நன்றாய் நடத்திடும்
வல்லமைக்
காலமே வாழ்வு!
.
இன்றும்
இருக்கின்றோம் என்று மகிழ்ந்தாலே
நன்றே
நடக்கும் நமக்கு!
.
இன்றுநாம்
செய்யும் இனிமையிடும் நன்மைகள்
என்றும்
நிலைக்கும் இருந்து!
.
அன்பான
வார்த்தை அகிலத்தை ஈர்த்திடும்
அன்னைபோல்
என்றும் இயம்பு!
.
கற்றதை
இன்றேநீ கற்பித்தால் என்றென்றும்
பெற்றிடுவாய்
நல்லுயர்ந்த பேறு!
.
கருணைமிகு
உள்ளங்கள் காலம் கடந்தும்
இருந்திடும்
என்றும் இசைத்து!
.
கவலைகள்
வந்தால் கலக்கட்டும் காற்றில்
தவணைமுறை
வேண்டாம் தவிர்!
.
பொன்நகை
வேண்டாமே! புன்னகை போதுமென்று
நன்மனம்
கொள்வீர் நகைத்து!
.
இன்றே
கொடுத்துதவ என்றும்நம் வாழ்விலே
நன்றே
நடக்குமென நம்பு!
.
நாளை !
-
வரும்நாட்கள்
நன்மைத் தருமென நெஞ்சே
திருநாளாய்
எண்ணி இரு!
-
உனக்காய்
வருவதே ஒவ்வொரு நாளும்
மனமகிழ்ந்து
துன்பம் மற!
-
நினைத்ததைச்
செய்ய நிலைவருங் காலம்
உனக்கென
உண்டே! உணர்!
-
எண்ணிய
தெல்லாம் எதிர்வரும் நாட்களிலே
உண்மை
நிகழ்வாய் உறும்!
-
நல்லதை
எண்ணிட நாளை வளர்ந்திடும்
வல்லமை
கொண்டநல் வாழ்வு!
-
எதிர்காலம்
உண்டெ னயிருந்தால் நம்மின்
புதிர்வாழ்வைக்
கண்போம் புரிந்து!
-
காலம்
மருந்தெனக் காத்திருந்தால் துன்பத்தின்
கோலமும்
மாறும் குளிர்ந்து!
-
எதிர்நோக்குப்
பார்வை எழுத்தில் அமைந்தால்
நதிபோன்று
நன்மைதரும் நாள்!
-
நல்வினைச்
செய்தாலே நாளை யெனும்நாளில்
தொல்லை
வருமோ தொடர்ந்து!
-
செந்தமிழைப்
பாடிச் சிறப்பாய் எழுதிடும்
எந்நாளும்
பொன்னாள் எனக்கு!
-
பாவலர்
அருணா செல்வம்
20.01.2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக