கன்னி
மரியாள் வயிற்றினிலே
கருவாய் உருவாய் ஆகிவந்தே
மண்ணில்
போற்றும் மாமணியாய்
மாலைப் பொழுதில் உதிப்பாயே!
விண்ணில்
வாழும் தெய்வம்நீ
மண்ணில் வந்து பிறப்பதைநான்
கன்னித்
தமிழில் பாட்டெழுதிக்
கவிதை படைத்து மகிழ்கின்றேன்!
நெஞ்சம்
காய்ந்த தலைவரெல்லாம்
நீதி எதையும் மறந்துவிட்டார்!
கொஞ்சம்
கூட இரக்கமின்றிக்
கொள்கை மறந்து திரிகின்றார்!
பஞ்சம்
இன்றிப் பணமிருந்தும்
பாதை மறந்து போகின்றார்!
நஞ்சை
மனத்தில் மறைத்துவிட்டு
நன்றாய்ப் பேசி மகிழ்கின்றார்!
என்னே
வாழ்க்கை இதுவென்றே
ஏங்கித் தவிக்கும் நல்லவர்க்கு
முன்னே
உள்ள நல்வழிகள்
முள்ளால் மூடி உள்ளதென்று
கண்ணை
நன்றாய்த் திறந்துவைத்துக்
கருணை மனத்தில் கண்டுநட
என்றே
சொல்லி வழிநடத்த
இறையே வந்து பிறப்பாயே!
துன்பம்
எல்லாம் அகன்றுவிடத்
தூய்மை மனத்தில் பதிந்துவிட
இன்பம்
இல்லில் நிறைந்துவிட
இனிமை பொங்கி ஒளிபரப்ப
வண்ண
வாழ்க்கை வாழ்ந்தாலும்
உண்மை வழியைக் காட்டிடவே
சின்னக்
குடிலில் சூரியனாய்ச்
சிந்தை மகிழப் பிறப்பாயே!
அனைவருக்கும்
என் இனிய
கிருஸ்துமஸ்
வாழ்த்துக்கள்.
பாவலர்
அருணா செல்வம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக