புதன், 4 மே, 2016

நிலம் பேசினால்…… !



மண்ணிற்குள் ஓர்விதையை
   மறைத்துவைத்துக் காத்திருந்தால்
விண்ணிற்கும் வியப்பாக
   விதைமுளைத்து வெளிதெரியும்!
கண்ணிற்கு பசுமையெனும்
   கருத்திழுக்கும் காட்சிபோல
பெண்ணிற்குள் நடந்திடவோ
   பேருதவி ஆண்வேண்டும்!!

தங்கமென்ன? வைரமென்ன?
   தகரமென்ன? இரும்பென்ன?
அங்கமெல்லாம் அலங்கரிக்கும்
   அற்புதங்கள் என்னிலுண்டு!
சங்ககாலம் என்பதுவும்
   சரித்திரங்கள் பேசுவதும்
மங்கலமாய் வாழுமென்தன்
   மடிபிறந்த பிள்ளைகளே!

வானழுவும் நீரையெல்லாம்
   வளம்கொடுக்க வாங்கிவைப்பேன்!
ஊனழுகிப் போனதையும்
   உள்வாங்கி மக்கவைப்பேன்!
தானழுதும் ஆறாகித்
   தாகத்தைத் தணிக்கவைப்பேன்!
கான்வாழும் உயிர்களுக்கும்
   கவித்துவமாய் இடம்கொடுப்பேன்!

அசையாத சொத்தென்றே
   ஆசையுடன் வாங்கிவைப்பார்!
இசைபோன்ற வாழ்வினிலே
   இன்னுமின்னும் சேர்த்துவைப்பார்!
பசையுள்ள ஆளென்பார்
   படுக்கையிலே விழும்பொழுது
திசைபுள்ளி ஏதென்று
   தெரியாமல் தேடிடுவார்!

துடிக்கின்ற இதயமது
   துடிப்பின்றி நின்றுபோனால்
அடிகணக்கில் வாங்கிவைத்த
   ஆறடியும் உதவிடாது.
படிக்கணக்குப் பார்த்துவைத்தால்
   பசித்தவுடன் சாப்பிடலாம்!
நொடிகணக்கு உன்வாழ்க்கை
   நுரைபோன்று மறைந்திடுமே!

அன்றுதொட்டு இன்றுவரை
   ஆராய்ந்துப் பார்த்திட்டால்
தொன்றுதொட்டு என்னுடனே
   தொடராக வருவதெல்லாம்
குன்றின்மேல் விளக்காக
   குறைவின்றி ஒளிர்கின்ற
நன்றுதவும் என்றுதந்த
   நல்லறிஞர் எழுத்தாகும்!!
 
அன்றிருந்தார் இன்றில்லை!
   அவரெல்லாம் எங்குசென்றார்?
இன்றிருப்போம் நாளையில்லை!
   இதுதானே மனிதவாழ்க்கை!
நன்றென்று நன்மைசெய்து
   நல்லவராய் வாழ்ந்துவந்தால்
என்றென்றும் வாழுகின்ற
   என்னைப்போல் உயர்ந்திடுவீர்!


அருணா செல்வம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக