நட்புறவுகளுக்கு வணக்கம்.
தலைப்பைப் பார்த்துவிட்டு ஏதோ
வாழ்க்கையில் நடக்கும் வழுக்கல்களைச் சொல்லி தத்துவமாக ஏதோ எழுதி
இருப்பார்களோ..... என்று எண்ணி நீங்கள் படிக்க வந்து இருந்தால்..... அவர்கள்
படித்துவிட்டு ஏமாறாமல் இப்போதே அடுத்த வலைக்குத் தாவி விடுங்கள்.
ஏன் என்றால்...... நான் சொல்ல
வருவது வாழ்க்கையில் ஏற்படும்.... “ஜான் ஏறினால் முழம் வழுக்குகிறது.....“ “எதை
செய்தாலும் சறுக்குகிறதே.....“ என்ற மாதிரியான வழுக்கையைச் சொல்லவில்லை.
நான் சொல்ல வருவது நீங்கள்
நினைப்பது போல் அந்த வழுக்கையைத் தாங்க.
அப்பாடா. புரிந்து கொண்டீர்கள்!!
போன வாரம் என் உறவினர் பெண்ணைப்
பார்க்க மாப்பிள்ளை வருகிறார் என்று என்னையும் அழைத்து இருந்தார்கள். பெண்
பார்ப்பது மட்டுமல்லாமல் கைத்தாம்பூலமும் மாற்றிக் கொள்வதாக இருந்தார்கள்.
அங்கே சென்ற நான்,
மணப்பெண்ணிடம்.... “என்னடி உனக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கா“ என்று கேட்டேன்.
“அம்மா அப்பாவுக்குப்
பிடிச்சிருக்காம். நான் போனில் பேசினேன். நன்றாகத் தான் பேசினார்.“ என்றாள்.
சரி அவளுக்கும் பிடித்திருக்கிறது
என்றதும் நானும் மற்றவர்களுடன் மாப்பிள்ளை வீட்டாருக்காகக் காத்திருந்தேன்.
அவர்களும் வந்தார்கள். மாப்பிள்ளையை அறிமுகப் படுத்திய போது எனக்கு அதிர்ச்சி. முன்
மண்டையில் பாதி அளவிற்கு முடியைக் காணோம். நான் திரும்பி மணமகளைப் பார்த்தேன்.
அவள் அங்கே இல்லை. அவள் அம்மாவைப் பார்த்தேன். அவர் முகத்திலும் அதிர்ச்சி. எனக்கு
ஒரே குழப்பம். பேசாமல் எழுந்து பெண் இருக்கும் அறைக்கு வந்தேன். என் பின்னாலேயே
அவள் அம்மா.
மணமகள் உடுத்திய உடையை கோபமாகக்
கலைந்து கொண்டு இருந்தாள். எனக்கு இதுவும் ஓர் அதிர்ச்ச்சி!
“என்னடி... கைத்தாம்பலம்
மாற்றுவார்கள். அதற்குள் டிரெஸ் மாத்துறியே...“ என்றேன்.
அவள் கோபமாக என்னை
முறைத்துவிட்டு..... “எனக்கு இதில் விருப்பம் இல்லை. அவர்களைப் போகச் சொல்லங்கள்“
என்றாள்.
நான் திரும்பி அவள் அம்மாவைப்
பார்த்தேன். அவர்கள், “கொஞ்ச நேரம் பொறும்மா. அவர்கள் போனதும் எதுவாக இருந்தாலும்
பேசலாம்“ என்றார்கள்.
“அம்மா.... இதுக்கு மேல எப்படி பொறுமையா
இருப்பது....? எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை. நான் தனியா இருக்கனும்.
நீங்க போங்க“ என்று சொல்லிவிட்டு என்னையும் சேர்த்து வெளியில் தள்ளி கதவைச்
சாத்தினாள்.
நான் அவளின் அம்மாவிடம்..... “என்ன
இது? ஏற்கனவே பேசி முடிவானது தானே....?“ என்றேன்.
“ஆமாம் அருணா. நல்ல படிப்பு. நிறைய
சம்பளம். போனில் தான் நிறைய முறை பேசினோம். படம் கூட அனுப்பி இருந்தார்கள். ஆனால் அதில்
மாப்பிள்ளை இப்படி இருக்கவில்லை. இப்போ என்ன செய்யிறது அருணா....?“ என்றார்
பாவமாக.
அவள் அப்பா, மகளை அழைத்து வரச்
சொல்லி சத்தமாகக் கூப்பிட்டார். அந்த அம்மா.... “இவளை எப்படியாவது சமாதானம் சொல்லி
கூப்பிட்டு வா“ என்று என்னிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து போய் விட்டார்கள்.
எனக்கோ என்ன செய்வது என்று
தெரியவில்லை. நான் தான் என்று சொன்னதும் கதவைத் திறந்தாள். மணமகளைப் பார்க்க
எனக்குப் பாவமாக இருந்தாலும்..... அவளிடம்.... “உன் கவலை எனக்கு புரிகிறது. இதே
மாதிரி கல்யாணம் பண்ணியப் பிறகு ஒருசில வருடத்தில் இப்படி ஆகி இருந்தால்..... அதை
நாம ஒத்துக்கொள்கிறோம் இல்லையா.... அது மாதிரி நினைச்சிக்கோயேன்“ என்றேன்.
“இல்லை ஆண்டி. கல்யாணம் ஆனப்பிறகு இப்படியானால்
அந்த நாட்களிலேயே நாமும் பழகிடலாம். ஆனால் தொடக்கத்திலேயே இப்படி என்றால்....
வேண்டாம் ஆண்டி. இந்தக் கல்யாணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்று நீங்கள் போய்
அப்பாவிடம் சொல்லி விடுங்கள்“ என்றாள்.
அதற்குள் அப்பாவே அந்த அறைக்கு
வந்தார். வந்தவர் தன் மகளிடம்.... “ஆண்களுக்கு வழுக்கை ஒரு பெரிய விசயமே
இல்லைம்மா. நல்ல படிப்பு. உயரமா நல்லா அழகாவும் இருக்கிறார். பேசியதை வைத்துப்
பார்க்கும் போதும் நல்ல குணமாகத் தான் தெரிகிறது. பிடிவாதம் பிடிக்காதே. எழுந்து
வா“ என்றார்.
அவள், “வேண்டாம் அப்பா. என்னைக்
கட்டாயப்படுத்தாதிங்க....“ என்று அழுகையின் ஊடே சொல்லவும்.... பேசாமல்
போய்விட்டார். என்ன சொல்லி சமாளித்தார் என்று தெரியாது. ஆனால் காரியம் நின்று போனது.
அன்றிலிருந்து நான் அந்தப் பெண்ணை
நினைத்ததை விட அந்த மாப்பிள்ளையைத் தான் அதிகம் நினைத்துக் கவலைப்பட்டேன்.
இருபத்தொன்பது வயது தான். நல்ல நிறம். உயரம். படிப்பு, நல்ல குடும்பம் என்று எல்லாமே
நன்றாக இருக்க.... ஏன் இப்படியானது.....?
வழுக்கை பரம்பரையாக வருவது தான் என்றாலும்....
இவ்வளவு இளமையிலேயா வரும்? இவர் மட்டும் இல்லை. இப்போது நிறைய ஆண்கள் நடுத்தர
வயதைத் தொடாதவர்களுக்கும் வழுக்கை விழுந்து விடுகிறது.
இது எதனால்.....? தெரிந்தவர்கள்
சொல்லுங்கள்.
அன்புடன்
அருணா செல்வம்
(டிஷ்கி – சிறு வயதில்... எனக்குத் தெரிந்த ஒரு அக்காவைக் காதலித்த ஒருவன்
ஏமாற்றி விட்டான். சில காலம் கழிந்த பிறகு அவனைப் பார்க்க நேர்ந்ததாம். அவனுக்கு
அப்போது லேசான வழுக்கை விழுந்திருந்ததாம். அந்த அக்கா கோபத்தில், “என்னை
ஏமாத்தினதால தான் அவனுக்கு வழுக்கை விழுந்தது. இதே மாதிரி பெண்களை ஏமாத்து
கிறவங்களுக்கு எல்லாம் வழுக்கை விழனும்ன்னு சாபமாகச் சொன்னாள். ஒரு சமயம் அந்தச்
சாபம் தான் பலித்துவிட்டதோ.....!!!!! )
கை கால்களில் ஊனம், கண்பார்வை இல்லாமை, காது கேட்காமல் இருப்பது, பேச்சு வராமல் இருப்பது எல்லாம் பெரிய குறைபாடுகள்.
பதிலளிநீக்குஅதேபோல் திக்குவாய், வழுக்கைத் போன்றவைகளும் ஓரளவுக்கு குறைபாடுகளே.
அதுபோல் குறைபாடுகள் உள்ளவர்கள், என்ன தகுதி உள்ளவர்களாக இருந்தாலும் அரேஞிட் மேரேஜ் செய்யும்போது மணமகளிடம் தன் குறைகளை காட்டி அல்லது சொல்லி தெளிவுபடுத்திவிட்டு, மணமகள்களால் இக்குறைகளை சகித்துக் கொள்ள முடியுமா? என்று அறிந்த பிறகே அவர்கள் அடுத்த "ஸ்டெப்" போகணும்.
அப்படி செய்யாமல் இதுபோல் நிச்சயம் வரை தன் குறைகளை தன்னோடு வாழப்போவளிடம் சொல்லி தெளிவுபடுத்தாமல்ப் போவதால் இது போல் அவர்கள் அவமானங்களை சந்திக்க வேண்டியாகி முடிகின்றன.
இங்கு தவறு, குறைபாடுள்ள மாப்பிள்ளை மேல்தான்.
முடி உதிர்தலுக்கு காரணம் என்ன என்பதெல்லாம் ஆராய்ச்சிமூலம் கண்டுபிடித்து விட்டார்கள்.
ஆண்களுக்கு முடி உதிர்தலுக்கு காரணமான ஹார்மோன்! >
http://timeforsomelove.blogspot.com/2009/07/blog-post_11.html
இருந்தாலும் இக்குறைபாடை சரி செய்வது அவ்வளவு எளிதல்ல. இந்த முடிஉதிர்தலுக்குக் காரணமான ஹார்மோன்களை கட்டுப்படுத்த முயன்றால், அதன் பக்க விளைவுகள் சீரியஸாக இருக்கலாம் என்பது என் புரிதல்.
வணக்கம் வருண் சார்.
நீக்குஉங்களின் விளக்கமான பதிலுக்கு மிக்க நன்றி.
அந்த மாப்பிள்ளை தன்னிடம் இருந்த இந்தக் குறையை ஒரு குறையாகவே எடுத்துக் கொள்ள வில்லையோ...... என்றே எனக்குத் தோன்றுகிறது.
தான் எடுத்தது தவறான முடிவு என்று அந்தப் பெண் பலமுறை வருத்தப்படுவார்கள் என்பது மட்டும் உண்மை....
பதிலளிநீக்குவணக்கம் தனபாலன் அண்ணா.
நீக்குபிறகு வருத்தப்படலாம்..... ஆனால் அவளின் இன்றைய கற்பனை என்னவோ....
தவிர..... அப்பா அம்மா பார்த்து வைத்துக் கல்யாணம் செய்து பல வருடம் வாழ்ந்த பிறகும்..... தனக்கு இப்படி அமைந்ததே என்று வருத்தப்பட்டு அதை வெளிப்படையாக சொல்லும் பெண்கள், ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
எல்லாம் தலையெழுத்து....(
நன்றி தனபாலன் அண்ணா.
சின்ன வயசிலேயே அந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆனவுடனே புருஷன் குடுமி உன் கையில வந்திரனும் என்று சொல்லிக் கொடுத்திருப்பார்கள் அதை நினைச்சே வளர்ந்த குழந்தை இந்த வழுக்கைதலையை பார்த்ததும் பார்த்ததும் குடுமி இல்லாததை கண்டு வேண்டாம் என்று சொல்லி இருக்கனும்.
பதிலளிநீக்குஹ்ஹாஹ்ஹஹ்ஹ்!
நீக்குஅட. இப்படியும் இருக்குமோ......
நீக்குநல்ல தான் யோசிக்கிறீங்க மதுரைத்தமிழரே!
நல்லாவே சிரிக்கிறீங்க துளசிதரன் ஐயா.
என்னங்க நிச்சயம் பண்ணுவதற்கு முன்பு போட்டோவை கூட காண்பிக்கவில்லையா அது யாரு தவறு?
பதிலளிநீக்குமாப்பிள்ளையின் தவறு தான் என்றாலும்...
நீக்குபார்க்க, கேட்க தவறியது பெண் வீட்டாரும் தான்.
தெரிந்த குறை தேவலாம்.முடிந்தால் சகித்துக் கொள்ளலாம
பதிலளிநீக்குதெரியாத குறை பின் தெரிந்தால்
வாழ் நாள் முழுதும் அவதிதான்
முடித்த விதம் பிடித்திருந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தெரிந்த குறையையும் முதலிலேயே சொல்லிவிட்டு இருந்தால் அதை மனத்தில் வாங்கி சற்று தெளிந்திருக்கலாம் அல்லது தொடக்கத்திலேயே வேண்டாம் என்று நகர்ந்திருக்கலாம்....
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்தோட்டத்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.
tha.ma 3
பதிலளிநீக்குநன்றி இரமணி ஐயா.
நீக்குஅந்தப் பெண்ணுக்காக நான் பரிதாபப்படுகிறேன். எங்கள் குடும்பத்தில் இளம் வயதில் வழுக்கை என்பது பரம்பரையாக உள்ளது. நான் அறிந்த மூன்று தலைமுறைகளில் மாப்பிள்ளைகள் அனேகமாக வழுக்கை உள்ளவர்கள் தான் (நான் உள்பட). ஆயினும் இறைவன் அருளால் அவர்களின் திருமணத்திற்கு அது இடைஞ்சலாக இருந்தது இல்லை. அனைவரின் மனைவியரும் அதனை ஒரு குறையாகக் கருதுவதில்லை. இது அவர்களின் ஏனைய நற்பண்புகளின் நிமித்தமே. நமது வாயின் வார்த்தைகளைக் குறித்தும் நாம் உண்ணும் உணவின் முறையைப் பற்றியும் இயேசுபிரான் பேசும் போது “வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்”. (”மத்தேயு 15:11”) எனக் குறிப்பிடுகிறார். அது போன்றே வழுக்கை விஷயத்தில் தலைக்கு வெளியே உள்ளது முக்கியமல்ல, தலைக்கு உள்ளே உள்ளது தான் முக்கியம் ( நற்பண்பு, குடும்ப சூழ்நிலை இன்னும் பிற) என்பது என் கருத்து. அந்தப்பெண்ணின் தந்தையும் இக்கருத்தினையே வலியுறுத்தி இருக்கிறார். வழுக்கை என்பது வெளியில் தெரிவது. ஆனால் ஒரு ஆணிடம் வெளியே தெரியாதவைகள் அனேகம். இவ்வாறு வெளியே தெரியாதது ஏதாவது ஒன்று மணப்பெண்ணிற்குப் பிடிக்காததாக இருக்கும் பட்சத்தில் திருமணத்திற்க்குப்பின் அது வெளிப்படும் போது அந்தப்பெண் என்ன செய்வாள்? அதனைச் சமாளிக்க இந்த வரனை சிபாரிசு செய்த அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் அவள் எவ்வாறு உதவி கேட்பாள்? இவைகள் அந்தப்பெண்ணிற்கு மட்டுமின்றி அவள் நிலையில் இருக்கும் அனைத்துப் பெண்களின் சிந்தனைக்குமே.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் மேலான கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி செல்வ துரை ஐயா.
பொண்ணுதான் தன்னை வேண்டாம் என்று சொல்லிடுச்சு அதனால மாப்பிள்ளை, பொண்ணுக்கு பக்கத்தில் இருக்கும் உங்களுக்கு சம்மதமா என்று கேட்கவில்லையா என்ன?
பதிலளிநீக்குஅந்த மாப்பிள்ளைக்குத் தலைக்கு மேல் முடி தான் இல்லை.
நீக்குதலைக்குள் மூளை இருக்கிறது. அதைவிட பண்பாடு நிறைந்தவர்.....
இது ஒரு குறைபாடென்று என்னால் சொல்ல முடியாது. ஊரிலிருக்கும் போது அழகான முடிகொண்டவர்கள் வெளிநாடுகள் சென்றவுடன் வழுக்கைத் தலையுடன் திரும்பி வருகிறார்கள். வழுக்கை குறைபாடென்றால் ஊரிலிருக்கும் போது அக் குறைபாடு எங்குசென்றது.
பதிலளிநீக்குநான் எந்தப் பென்ணையும் காதலிக்கவுமில்லை ஏமாற்றவுமில்லை அப்போ எனக்கு ஏன் வழுக்கை ஸ்டார்ட் ஆகுது. :)
ஐயோ..... சிட்டு உங்களுக்குமா....?
நீக்குசரி. அதைத் தான் நீங்கள் குறையாக நினைக்கவில்லையே....
குறை என்பது அவரவர் மனத்தைப் பொறுத்தது.
நன்றி ஆத்மா.
அந்த பையனும் சரி இந்த பெண்ணும் சரி _ உண்மையிலேயே பரிதாபப் பட வேண்டியவர்கள். நல்லவேளை கல்யாணத்திற்கு முன்னரே அந்த பெண் தனது விருப்பமின்மையை சொல்லி விட்டார். இதே போன்ற ஒரு அனுபவம் எனக்கும் உண்டு. உங்கள் பதிவைப் படித்ததும், நானும் எழுதினால் என்ன தொன்றுகிறது.
பதிலளிநீக்குத.ம.5
நீங்கள் சொன்னதும் உண்மை தான் ஐயா.
நீக்குஉங்கள் பதிவில் மாப்பிள்ளையின் நேர்மை பிடித்திருந்தது.
நன்றி ஐயா.
வழுக்கைத் தலையை காரணம் காட்டி பெண் மறுத்தாலும் உண்மையை சொல்லாமல் மறைத்த மாப்பிள்ளை மீதும் தவறு இருக்கிறது. நீங்கள் சொல்வது உண்மை இப்போதெல்லாம் இளைஞர்களுக்கு சீக்கிரமே முடி கொட்டிவிடுகிறது. எனக்கும் 30 தொடக்கத்தில் கொட்ட ஆரம்பித்து இப்போது முன்மண்டை சொட்டை ஆகிவிட்டது. ஆனாலும் முடிகொட்ட ஆரம்பித்தபோதுதான் 32 வயதில் என் திருமணம் நடைபெற்றது. அரேஞ்ச்டு மேரேஜ்தான்!
பதிலளிநீக்குஎல்லாம் தலையின எழுத்து.
நீக்குயாரைக் குறை சொல்வது?
கருத்திற்கு நன்றி சுரேஷ்.
இளநீரைக் கூட நல்ல வழுக்கையாய் தேடுபவர்கள் ,ஆண் வழுக்கை என்றால் இப்படி நழுவிப் போவது ஏனோ :)
பதிலளிநீக்குத ம +1
அங்கே சீவ முடியும்.
நீக்குஇங்கே சீவ முடியாது என்பதாலோ.....
நன்றி பகவான் ஜி.
அழகு என்பதும் , வாழ்க்கை என்பதும் எது என்று புரிந்து கொள்ளாத அந்தப் பெண்ணை நினைத்து வருந்துகிறேன்....
பதிலளிநீக்குஎன்ன செய்வது?
நீக்குஉண்மையிலேயே அந்தப் பெண் அவ்வளவு அழகு!
கருத்திற்கு நன்றி தோழி.
சகோதரி அவர்களுக்கு, உங்கள் அனுபவத்தினைப் போன்று எனக்கு கிடைத்த ஒரு அனுபவத்தினை எனது வலைத்தளத்திலும் இப்போது எழுதியுள்ளேன். பதிவை எழுத காரணமாக இருந்த உங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குநல்ல பதிவினைக் கொடுத்தமைக்கு நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் ஐயா.
நீக்குமிக்க நன்றி.
இன்றைய காலகட்டத்தில் வழுக்கை என்பது ஒரு பெரிய விஷயம் இல்லை... அந்தப் பெண் வழுக்கையை நினைத்து நல்ல வாழ்க்கையை இழந்திருக்கிறாளோ என்று தோன்றுகிறது...
பதிலளிநீக்குஅரபு நாடுகளில் இருக்கும் நம்ம நாட்டு ஆளுக பாதிப்பேருக்கு முடி கொட்டி விடுகிறது. அதற்காக வருந்தி என்ன பயன்?
உண்மை தான் குமார்.
நீக்குவர வர பெண்கள் வழுக்கையும் அழகுத்தான் என்று மனத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.
கருத்திற்கு நன்றி குமார்.
ம்ம்ம் நல்ல மிக அருமையான அனுபவப் பகிர்வு!
பதிலளிநீக்குமிக்க நன்றி துளசிதரன் ஐயா.
நீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
அழுகை எதற்கோ? அமுத இளநீா்
வழுக்கை இளமை வடிவு!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
இளநீருக்கு மட்டும் தான் வழுக்கை இளமையின் வடிவு....
நீக்குஇளஞர்களுக்கு இல்லைங்க கவிஞர்.
இருந்தாலும் ரொம்பதான் சப்போட் பண்ணுறீங்க....
நன்றி கவிஞர்.
வணக்கம் சகோதரி.! வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவர்களைவிட, வழுக்கை விழுந்தவர்கள் எவ்வளவோ மேல்..இது ஒரு பெரும் குறையல்ல;என்றாலும், அதை முடிவெடுக்க வேண்டியது அந்தப்பெண் தானே தவிர,அவரின் அப்பவோ அல்லது நாமோ அல்ல.!
பதிலளிநீக்குவழுக்கைஎல்லாம்,மரபு,மனஅழுத்தம் சார்ந்த விடயங்கள்!
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தாங்க சகோ.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி.
கொடிது கொடிது வழுக்கை கொடிது
பதிலளிநீக்குஇளமையில் வழுக்கை அதனினும் கொடிது
என்று பாடத்தோன்றுகிறது.....
ஔவையை மாற்றி அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஸ்கூல் பையன்.