புதன், 22 பிப்ரவரி, 2012

பெண்ணின் காதல் வெறுப்பு!! (கவிதை)



கட்டி கரும்பே என்றாயே
     கடித்தே கன்னம் சிவந்ததுவே!
கொட்டிக் கிழங்கே என்றாயே
     கொடுத்த இதழை விட்டாயா?
எட்டி போக நினைத்தாலும்
     எட்டிப் பிடித்து விட்டாயே!
தட்டி போக எண்ணவில்லை
     தவியாய்த் தவித்தேன் உன்னிடத்தில்!
  
ஆசை வார்த்தை பேசியென்னை
     அணைத்த உடம்பு துவண்டுவிட
மீசை முள்ளாய்க் குத்திவிட
     முகமும் எல்லாம் சிவந்ததுவே!
ஓசை எழுந்த கால்கொலுசை
     உதறி தள்ளி விட்டாயே!
காசைப் போட்டு வாங்கினேனே
     கடனை உடனே தந்துவிடு!

தீயாய் உடம்பு கொதித்தாலும்
     திட்டம் போட்டே நெருங்கிடுவாய்!
நோயால் மேனி வலித்தாலும்
     நோக்கம் தீர அணைத்திடுவாய்!
சேயாய் இன்றும் இருக்கின்றேன்
     செத்த நேரம் ஓய்வெடுக்க
தாயின் வீடு போகின்றேன்!
     தனிமை எனக்கு வேண்டுமடா!


அருணா செல்வம்

2 கருத்துகள்:

  1. தீயாய் உடம்பு கொதித்தாலும்
    திட்டம் போட்டே நெருங்கிடுவாய்!
    நோயால் மேனி வலித்தாலும்
    நோக்கம் தீர அணைத்திடுவாய்!
    சேயாய் இன்றும் இருக்கின்றேன்
    செத்த நேரம் ஓய்வெடுக்க
    தாயின் வீடு போகின்றேன்!
    தனிமை எனக்கு வேண்டுமடா

    தலைப்பும் அதற்கு அழகிய விளக்கமாக அமைந்த பதிவும்
    மிக மிக அருமை
    இறுதி வரியில் உள்ள " டா " கவிதைக்குக்
    கூடுதல் சிறப்பு
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு