(இசைப்பாடல்)
.
(எடுப்பு)
இதற்கு
தான் காதலென்று பெயரா? – வாழ்வில்
எதற்கு
தான் இதைவைத்தாய் இறைவா?
.
(தொடுப்பு)
தொட்டிடத்
தொட்டிடச் சுகமென்றான்! – கைப்
பட்டிடப்
பட்டிடச் சுவையென்றான்! - இன்று
எட்டிப்போய்
எட்டிப்போய் நில்லென்றான்! – அவளை
விட்டுப்போய்
தள்ளிநின்று சொல்லென்றான்!
.
உற்றுனைப்
பார்ப்பதே அழகென்றான்! – இதழ்
ஒற்றிட்டும்
மென்மையை மலரென்றான்! - இன்று
பற்றிடும்
நெருப்பெனச் சுடுகின்றான்! - அவளைத்
தொற்றிடும்
நோயென விலகென்றான்!
.
கட்டழகு
மேனியைக் காதலித்தான்! – வெறும்
கட்டிலிடும்
சுகத்திலே பேதலித்தான்! – வேறு
மெட்டழகு
பொட்டழகைக் கண்டுவிட – அவளை
விட்டொழியும்
காலமதைக் குறித்துவிட்டான்!
.
பெண்ணறிவு
பேதையென எண்ணிவிட்டுப் – பெரும்
விண்ணளவு
பழியினைச் சுமத்துகின்றான்! - இதைக்
கண்டறிந்து
கொண்டதனால் அழுகின்றாள்! – இந்த
மண்ணளவு
வேதனையைச் சுமக்கின்றாள்!
.
அஞ்சியஞ்சி
இருந்தவளை ஆசையூட்டித் – தினம்
கொஞ்சிவந்து
கெஞ்சிவந்து மோகமூட்டி – அவள்
நெஞ்சமதில்
அழியாமல் நிறைந்துவிட்டு – இன்று
வஞ்சகமாய்
வலைப்பின்னி மறைந்துகொண்டான்!
.
கற்றவனாய்
இருந்திருந்தால் உயர்ந்திருப்பான்! – நட்பை
உற்றவனாய்
இருந்திருந்தால் நினைத்திருப்பான்! – அன்பு
அற்றவனை
நெஞ்சத்துள் நிரப்பியதால் - அதைக்
குற்றமென
மௌனமாய் அழுகின்றாள்!
.
பாவலர்
அருணா செல்வம்
18.04.2020
அருமை...
பதிலளிநீக்கு