மெல்லிடை
இல்லையென்னும் ! மெல்லிதழ் ஆமென்னும் !
சொல்லிடை
வைப்பாள் சுவையுள்ளம் ! – நல்லதையே
நாளும்
நினைத்திடும் நங்கை ! அவள்சிரிப்பால்
நீளும்என்
ஆயுள் நிறைந்து !
செல்லச்
சிரிப்பும், சிணுங்கும் மொழியழகும்
வெல்லச்
சுவையையும் விஞ்சுமந்தப் – பொல்லாத
பார்வைக் கணையென்னைப் பாடாய்ப் படுத்திடினும்
சோர்வை
அகற்றும் சுடர்ந்து !
தண்ணீர்க் குடமெடுத்துத் தாமரை வந்துநின்றால்
விண்ணில்
இருந்துவந்த வெண்ணிலா – மண்ணில்
இறங்கியதோ
என்றே இமைக்காது பார்ப்பார் !
உறங்காது
கண்கள் உணர்ந்து !
மைவரைந்த
கண்கள் மதுவூட்டும் ! மங்கையவள்
கைவரையும் ! என்நினைவால் கால்வரையும் !
– தைவரும்நாள்
பார்த்துத்
தவமிருக்கும் ! பாவைமனம் எண்ணத்தைக்
கோர்த்திடும்
நெஞ்சில் குவித்து !
மாங்கொழுந்து
மேனி ! மனமயக்கும் செந்நிறம் !
வாங்கிவந்த
வாழ்வின் வரமழகு ! – தேங்கி
ஒளிந்திருக்கும்
சங்கின் ஒளிப்போல மேனி
பளிங்கையும்
விஞ்சும் பழித்து !
பால்போன்ற
பற்கள் ! பளிங்கை உடைத்திடுத்து
நூல்பிடித்த
நல்வரிசை ! நோயற்ற – ஆல்விழுதோ !
சிப்பி
கொடுக்காத செம்மையான முத்துதானோ !
ஒப்பேதும்
இல்லா ஒழுங்கு !
செவ்வரளிப் பூவிதழோ? செங்கமலம் வண்ணமோ?
கொவ்வை
கனிநிறமோ? கோதையவள் – செவ்விதழை
எவ்வண்ணம்
கொண்டு எழுதுவேன்? நானெழுதும்
இவ்வண்ணம்
கூட இகழ்வு!
சாந்தம்தான்
உள்ளதோ சார்ந்திடா ஞானிபோல்!
காந்தம்தான்
உள்ளதோ கண்களில்? – நீந்தியோடும்
மீன்வடிவோ ! மாவிலையோ ! மென்னழகு மான்விழியே!
தேன்குடிக்கும்
வண்டுதான் தேர்வு !
சிற்பி
செதுக்கிதான் செய்தானா மூக்கழகை !
கற்சிலையும்
நாணிக் கவிழ்ந்துவிடும் ! – பொற்பதமே
பச்சைக்
கிளியுமுனைப் பார்த்து மயங்கிடும்
இச்சைமனம்
ஏங்கிடுதே இங்கு !
பாலாடைக் கன்னங்கள் ! பஞ்சின் மிருதெனத்
தாலாட்டும்
நெஞ்சில் தவழ்ந்தது ! – சேலாட்டம்
காட்டிடும் கண்ணருகில் காமன் வரைந்தநல்
தோட்டமென
ஈர்க்கும் தொடர்ந்து !
பாவலர்
அருணா செல்வம்
25.10.2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக