(கலிவிருத்தம்)
.
அன்பாய் பேசிய அன்றைய
நினைவெல்லாம்
இன்றும் நெஞ்சினுள்
இருந்தே இனித்திருக்கும்!
துன்பப் பொழுது தோழியர்ச்
சூழ்ந்துவர
நின்று போயிடும் நெகிழ்ந்த கனவலைகள்!
.
சொல்லச் சொக்கிடும்
சுவையாய்க் கவிகளையும்
மெல்லப் பேசிடும்
மென்மொழி இனிமையையும்
நல்ல நேரமும் நிறைந்து
கிடைத்தாலும்
மல்லுக் கட்டிடும்
மனத்தைக் குழப்பிவிடும்!
.
கற்றோர் காட்டிய
காலமெ னும்நிகழ்வோ
உற்றுக் கடக்கும்
ஊழ்வினை என்றரிந்து
பற்று வைத்தலே படைப்பின்
நிறைவென்றே
முற்றும் அன்பினால்
முயன்று நெகிழ்ந்துவிடும்!
.
பெண்ணின் உள்மனப்
பேற்றினைக் கண்டவளின்
கண்கள் நோக்கிடக்
கவிகள் பிறந்துவிடும்!
வண்ணங் கூட்டிடும்
வடிவில் கலந்துவிட்டால்
எண்ணந் தீட்டிடும்
இதயம் இனிதுறுமே!
.
பாவலர் அருணா செல்வம்
15.11.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக