செம்மொழிச் சிலேடை!
பாடலில் வந்திருக்கும் ஒவ்வொரு சொல்லும் பல பொருளைக் குறித்துப் பாடுவது “செம்மொழிச் சிலேடை“ எனப்படும்.
சொற்கள் ஒவ்வொரு பொருள் படும் பொழுதும் பிரிவதில் மாறுபாடு இல்லாமல் ஒரே நிலையில் நின்று வேறு வேறு பொருளைத் தருவது செம்மையான மொழி ஆகும்.
உ. ம்
துடியிடைக் கச்சிட்டுத் துள்ளிடும் போது
முடியடியும் ஆடவைத்த மோக – வடிவழகே!
கண்ணரும்மை போகவெனைக் காதலுடன் பார்க்குமுனை
எண்ணிடவே நெஞ்சேங்கும் இங்கு!
பாடலில் கொண்டுள்ள சொற்கள் நடனமாடும் பெண்ணைக்
குறிப்பது போல் திருவண்ணா மலை இறைவனைச் சிலேடையாக குறிக்கப்பட்டுள்ளது.
பெண்ணைக் குறிப்பிடும்
பொழுது - உடுக்கை போன்ற இடையுடன் ஆடையை இறுக்கக் கட்டிக்கொண்டு துள்ளி
ஆடிடும் பொழுது பார்ப்பவனை முடிமுதல் அடிவரையும் ஆடவைத்த மோகத்தைத் தரும் வடிவம் கொண்ட
அழகே. உன்றன் கண்ணில் அரும்பி வழியும் மையானது அலைந்து போக என்னை
அன்புடன் பார்க்கும் உன்னை நினைப்பதற்கே என் நெஞ்சானது ஏங்கும் இங்கு.
திருவண்ணாமலையாரைக்
குறிப்பிடும் பொழுது – உடுக்கையுடன் இடையில் புலிக்கச்சையும் அணிந்து
தாண்டவம் ஆடும் பொழுதும், பிரமனுக்காகவும் திருமாலுக்காகவும்
நீண்டு வளர்ந்து அடிமுடியைக் காணாது ஆடவைத்த பஞ்சமாயையில் ஒன்றான
நெரும்பின் வடிவழகே, முக்கண் கொண்டருளும் அருணாசலனே, தீவினைப் பொங்கிவரும் வாழ்வில் அதனைப் போக்கும் அன்புடன் பார்க்கும் உன்னை
நினைத்தாலே என் நெஞ்சமானது ஏங்கும் இங்கு.
திருவண்ணாமலை
அருணாசலத்தை நினைத்தாலே முக்தி பெறலாம் என்பது உலக வழக்கு.
துடி – உடுக்கை, பெண்ணின் உடுக்கைப் போன்ற இடை,
கச்சு – மார்புத்துணி,
இடையில் கட்டுதல்
துள்ளல் – ஆடல்,
குதித்தல்
முடி – தலைமயிர், தலை (குடுமி)
அடி – காலடி, ஆதி
ஆடல் – நடனம், வெற்றி
மோகம் – காம மயக்கம்,
பஞ்சமாயையில் ஒன்றான நெருப்பு
கண் – விழி, ஞானம் உணர்த்துவது (முன்றாவது கண்)
அரும் – முகைத்தல், முளைத்தல்
மை - , கண்மை, தீவினை
பொருள் – இப்பாடலில் உள்ள தொடர்கள்
நடனமாடும் பெண், திருவண்ணாமலையில் உறையும் ஈசன் ஆகிய இருவருக்கும்
பொருந்துவதாக இருப்பதால் இது “சிலேடை அணி“ ஆகியது. இத்தொடரில் இருவருக்கும் சொற்களின் பொருள் ஒரே
நிலையில் இருந்து பொருள் படுவதால் இது “செம்மொழிச் சிலேடை“
ஆகியது.
செம்மொழி
என்பது, சொற்களைப் பிரித்தாலும் இரு பொருளுக்கும் பொருந்தும்
வகையில் சொற்களின் தன்மை ஒரே நிலையில் மாறுபடாமல் இருப்பது ஆகும்.
.
பாவலர் அருணா செல்வம்
26.11.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக