.
தேனாற்றின் கரையினிலே
தென்னைமரச் சூழலிலே
கானாறு கவிபடைக்க
காணிநிலம் வேண்டுமம்மா!
நீரோடி நிலமிளக
நேராக வரப்பமைத்து
ஏரோட்டித் தினமுழைத்து
இன்னிசைக்க வேண்டுமம்மா!
பாத்திகட்டி விதைவிதைத்துப்
பருவமுடன் நாத்துநட்டுக்
காத்திருந்து களைபறித்துக்
கண்நிறைய வேண்டுமம்மா!
பாட்டுப்பாடி நீரிரைக்க
பருவமங்கை அருகிருந்து
காட்டுகின்ற கண்ணசைவால்
களைப்பாற வேண்டுமம்மா!
கதிர்சாயும் வேளையிலே
காவலுடன் காத்திருந்து
குதிர்மூழ்க பயிர்சேர்ந்து
குதுகலிக்க வேண்டுமம்மா!
விற்றுவிட்டு மீதியுள்ள
விதைநெல்லைத் தனிவைத்து
மற்றவர்க்குப் பகிர்ந்தளித்து
மறுவிளைச்சல் காணவேண்டும்!
மாடுகன்றும் உணவருந்தி
காடுகழனி காக்கவேண்டும்!
வீடுமனைப் பிள்ளையுடன்
நாடுகாத்து வாழவேண்டும்!
மனம்மகிழ்ந்து தினம்வாழ
மண்மகளை வேண்டுகிறேன்!
கனவுகளை நினைவாக்க
காணிநிலம் வேண்டுமம்மா!
.
பாவலர் அருணா செல்வம்
ஆகா...! ஒவ்வொரு வரியும் அழகு...!
பதிலளிநீக்கு