தைப்பிறந்து
வந்து விட்டாள் - இனி
தழைப்பாகும் உலக மெல்லாம் !
கைப்பிடித்த
துணைவ ருடனே - உயர்
காதலுடன் இணைந்தி ருப்பார் !
மெய்ப்பிடித்த
நோய்க ளெல்லாம் - உடன்
மிரட்சியுடன் விலகி யோடும் !
மைப்பிடித்த
வார்த்தை யெல்லாம் - நல்ல
மங்கலமாய் வாழ்த்திப் பாடும் !
.
உண்ணுகின்ற
பொருள்க ளெல்லாம் - ஓர்
உழவனவன் உழைப்பே ஆகும் !
மண்ணோடு
மனத்தை ஊன்றி - உயர்
மனிதவுயிர் வாழ வேண்டி
கண்ணினிமைப் போன்றே காத்து - வயிறு
காயாமல் காக்கும் தெய்வம் !
பெண்ணென்னும்
அன்னை போன்று - நிற்கும்
பெருமையுள்ள உழவர் வாழ்க !
..
ஓரிடத்தில்
நின்று கொண்டே - இந்த
உலகத்தை ஒளிர வைக்கும் !
காரிடரும்
காலை யாகும் - கனல்
கதிரென்ற பொழிலைச் சேர்க்கும் !
மாரியுடன்
மண்ணின் ஊடே - சேர்ந்து
மகத்தான மகசூல் தாரும் !
சூரியனின்
தன்மை கண்டு - போற்றித்
தொழுதிடுவோம் நாளும் நன்றாய் !
.
நன்றாக
வாழ வேண்டும் - மனம்
நலமாக உயர வேண்டும் !
ஒன்றாகச் சேர வேண்டும் - பெயர்
உயர்கின்ற நோக்கம் வேண்டும் !
பொன்னாக
மின்ன வேண்டும் - நிறை
பொதுவுடமை எண்ணம் வேண்டும் !
அன்பாக
இருக்க வேண்டும் - அதில்
ஆண்டவனே அடங்க வேண்டும் !
.
பச்சரிசி
வெல்லம் சேர்த்துச் - நல்ல
பசுநெய்யில் பொங்கல் செய்து
இச்சையுடன்
கரும்பு மஞ்சள் - துண்டு
இஞ்சியுடன் கோல மிட்டும்
கச்சிதமாய்
படைத்தெ டுத்தே - உயர்
கதிரோனை வணங்கி என்றும்
அச்சமின்றி
வாழ்க வென்று - நானும்
அன்புடனே வாழ்த்து கின்றேன் !
தோழ தோழியருக்குத்
தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.
.
பாவலர்
அருணா செல்வம்
15.01.2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக