1.
காய்என்று
சொல்லாதே கண்ணே! பழமென்று
வாய்நிறைய
சொல்லடி! வானிலவே – அய்வின்றி
வாதாடி
என்னை வதைக்காதே! என்னுயிர்க்
காதலியே
நீயென் கனி!
2.
காய்ச்சிய
பால்செம்பைக் கையிலேந்தி வந்துநிற்க
சாய்ந்ததடி
என்மனது ! சாகசம் – வாய்த்தவளே !
உண்பதுபோல்
பார்க்கின்றாய் ! உள்ளணர்வைத் தீண்டும்உன்
கண்ணெழில்
காந்தக் கனி !
3.
காய்போல்
தெரிந்திடும் கன்னச் செழுமையில்
வாய்ஊறும்
நல்ல வளமையில் ! – தேய்ந்திடும்
என்னுயிர்ப்
பெண்ணின் இளநகையில் ! கைதொடக்
கன்னியுடல்
உண்ணும் கனி !
4.
காய்வடுகண் ! மூக்கழகைக் கஞ்சமலர் மொட்டெனலாம்!
தேய்ந்த
பிறைநெற்றி ! தேடியதில் – ஆய்ந்திழுத்து
இன்புறும்
பார்வை ! எனக்காக ஏங்குமந்தக்
கன்னி
முகம்தான் கனி !
5.
காய்ச்சல்
உடம்பில் ! கவலையோ உள்ளத்தில் !
பாய்கூடக்
சூட்டினால் பாழாகும் ! – நோய்தன்
வசமிருந்து
வாட்டி வதங்கியவன் வாய்க்குக்
கசக்கும்
பழுத்த கனி !
6.
காய்ந்த
நிலமோ கவலை கொடுத்தது !
தாய்க்கும்
உணவு தரவில்லை ! – சேய்தன்
பசியால்
வதங்கியது ! பார்த்தழுவும் கண்ணில்
கசிந்திடும்
அன்பே கனி !
7.
காய்த்த
மரமென்றும் கல்லடி பெற்றாலும்
வாய்க்குண
வாக வழியுண்டு ! – மேய்ந்திடா
முள்ளினை
ஒப்பது! மூடர்தம் வாய்தரும்சொல்
கள்ளியில்
காய்த்த கனி !
8.
காய்ந்த
நிலவும் கடல்தாண்டிப் போனது !
தேய்ந்த
மனத்தில் தெளிவில்லை ! – ஆய்ந்தாள்
உலகிலே
உண்மையான காதலுண்டோ வென்றே
கலங்கினாள்
அந்தக் கனி !
9.
காய்ந்த
இலையாய்க் கடலின்மேல் ஆடியாடிப்
பாய்ந்த
அலைபோல் பரிதவித்தாள் ! – போய்வருவேன்
என்றுசொல்லிப்
போனவன் இன்றும் வரவில்லை
கன்னிமனம்
காய்ந்த கனி !
10.
காய்ந்துவிட்ட
மீன்தான் கருவாடு ! நல்உரமோ
காய்ந்த
சருகு ! கரந்தபால் - காய்ச்சிட
வாய்இனிக்கும்!
வாழ்வில் எதுவும் முடிவில்லை,
காய்த்திடும்
முற்றல் கனி !
அருணா
செல்வம்
17.02.2016
17.02.2016
நட்புறவுகளுக்கு
வணக்கம்.
பாட்டரசர் கி. பாரதிதாசன் அவர்கள், முகநூலில் ‘‘பாவலர்
பயிலரங்கம்‘‘ என்ற தலைப்பில் ஒரு குழுமத்தை அமைத்துள்ளார். அதில் தலைப்புகள் கொடுத்து
மரபுக்கவிதைகளை எழுதத் தருகின்றார். அங்குக் கவிஞர்கள் பங்கேற்றுச் சிறப்புடன் கவிதைகளை
எழுதுகிறார்கள்.
அதில் ஒரு தலைப்பு ‘‘காய் கனி‘‘. அதாவது காய்
என்ற சொல்லில் பாடலைத் துவங்கி கனி என்ற சொல்லுடன் வெண்பாவை முடிக்க வேண்டும்.
நான் அந்த முறையில் பத்து வெண்பா எழுதினேன். அதை
உங்களுக்கு இங்குப் பதிவதில் மகிழ்கிறேன்.
நட்புடன்
அருணா
செல்வம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக