திங்கள், 7 ஏப்ரல், 2014

மண்ணிற்குள் ஓர்விதையை மறைத்துவைத்தால்.....


 


நிலமகள் சொல்கிறாள்.....!!

மண்ணிற்குள் ஓர்விதையை
   மறைத்துவைத்துக் காத்திருந்தால்
விண்ணிற்கும் வியப்பாக
   விதைமுளைத்து வெளிதெரியும்!
கண்ணிற்கு பசுமையெனும்
   கருத்திழுக்கும் காட்சிபோல
பெண்ணிற்குள் நடந்திடவோ
   பேருதவி ஆண்வேண்டும்!!

தங்கமென்ன? வைரமென்ன?
   தகரமென்ன? இரும்பென்ன?
அங்கமெல்லாம் அலங்கரிக்கும்
   அற்புதங்கள் என்னிலுண்டு!
சங்ககாலம் என்பதுவும்
   சரித்திரங்கள் பேசுவதும்
மங்கலமாய் வாழுமென்தன்
   மடிபிறந்த பிள்ளைகளே!

வானழுவும் நீரையெல்லாம்
   வளம்கொடுக்க வாங்கிவைப்பேன்!
ஊனழுகிப் போனதையும்
   உள்வாங்கி மக்கவைப்பேன்!
தானழுதும் ஆறாகித்
   தாகத்தைத் தணிக்கவைப்பேன்!
கான்வாழும் உயிர்களுக்கும்
   கவித்துவமாய் இடம்கொடுப்பேன்!

அசையாத சொத்தென்றே
   ஆசையுடன் வாங்கிவைப்பார்!
இசைபோன்ற வாழ்வினிலே
   இன்னுமின்னும் சேர்த்துவைப்பார்!
பசையுள்ள ஆளென்பார்
   படுக்கையிலே விழும்பொழுது
திசைபுள்ளி ஏதென்று
   தெரியாமல் தேடிடுவார்!

துடிக்கின்ற இதயமது
   துடிப்பின்றி நின்றுபோனால்
அடிகணக்கில் வாங்கிவைத்த
   ஆறடியும் உதவாது!
படிக்கணக்குப் பார்த்துவைத்தால்
   பசித்தவுடன் சாப்பிடலாம்!
நொடிகணக்கே உன்வாழ்க்கை
   நுரைபோன்று மறைந்திடுமே!

அன்றுதொட்டு இன்றுவரை
   ஆராய்ந்துப் பார்த்திட்டால்
தொன்றுதொட்டு என்னுடனே
   தொடராக வருவதெல்லாம்
குன்றின்மேல் விளக்காக
   குறைவின்றி ஒளிர்கின்ற
நன்றுதவும் என்றுதந்த
   நல்லறிஞர் எழுத்தாகும்!!
 
அன்றிருந்தார் இன்றில்லை!
   அவரெல்லாம் எங்குசென்றார்?
இன்றிருப்போம் நாளையில்லை!
   இதுதானே மனிதவாழ்க்கை!
நன்றென்று நன்மைசெய்து
   நல்லவராய் வாழ்ந்துவந்தால்
என்றென்றும் வாழுகின்ற
   என்னைப்போல் உயர்வீரே!!

(நேற்று பாரீஸ் – பாண்டிச்சேரி தமிழ்ச்சங்கத்தில் வாசித்தக் கவிதை)

அருணா செல்வம்.
04.04.2014

18 கருத்துகள்:

  1. சகோதரிக்கு வணக்கம்
    தங்களின் கவிதை வாசிக்க வாசிக்க ஆர்வத்தைத் தூண்டுகிறது. அழகான சந்த நயம்.
    ”குயவனின் கைவண்ணம் பானையிலே புலவனின் கைவண்ணம் மோனையிலே”
    எனும் மொழிக்கேற்ப அற்புதமான நடை. நிலத்தின் வாய் மொழியையும், நிலையாமையின் உண்மையையும் ஒருங்கே காட்டும் கவிதை வரிகள் மிகவும் ரசிக்க வைக்கிறது. பகிர்வுக்கு நன்றி சகோதரி
    ------------
    ஏழு கவிதைப் புத்தகங்கள் வெளியிட்டு உள்ளீர்களா! சகோதரி? தங்களின் தமிழ்ப்பணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தொடருங்கள் உங்கள் பணியை, தொடருங்கள் சிகரத்தை. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாண்டியன் ஐயா.
      தங்களின் முதல் வருகைக்கு நன்றி.

      முதலில் நான்கு நாவல்கள். பிறகு இரண்டு கவிதை நுால்கள். இப்பொழுதும் கவிதை நுர்ல் தான்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி .

      நீக்கு
  2. /// நொடிகணக்கே உன்வாழ்க்கை
    நுரைபோன்று மறைந்திடுமே! ///

    அப்படிச் சொல்லுங்க சகோதரி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்வது? இது தானே உண்மை.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி குமார்.

      நீக்கு

  4. வணக்கம்!

    தமிழ்மணம் 4

    நிலமகள் சொன்ன நெடுந்தமிழ் கண்டேன்
    கலைமகள் வாழும் கவி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கவிதைக்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  5. அருமை... மிக மிக அருமை...
    நெக்ஸ்ட் தபா... "அறு சீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்த" த்தில் ஒரு பாட்டு சொல்லுங்க டீச்சர்... பிளீசு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... துர்ங்குகிறவனை எழுப்பிடலாம். ஆனால்...
      துர்ங்குவது போல் நடப்பவனை எழுப்ப முடியாது.

      நாளிக்கே எளுதிட்றன் நைனா.
      ஆமா.... நைனா.. நீ எப்ப பாத்தாலும் கடிசில ஒரு வார்த்த எளுதுவீயே... ஏன் இன்னைக்கி எளுதல?

      நீக்கு
    2. அடடே மறந்துக்கினேன் டீச்சர்... :-(

      நீக்கு
  6. ///நன்றென்று நன்மைசெய்து
    நல்லவராய் வாழ்ந்துவந்தால்
    என்றென்றும் வாழுகின்ற
    என்னைப்போல் உயர்வீரே!!///
    அருமை சகோதரியாரே
    அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      (“அருமை சகோதரியாரே“

      வர வர என்னை பாட்டியாக்கிடுவீங்கன்னு நினைக்கிறேன். இனியும் இப்படியெல்லாம் எழுதினால் நான் அழுதிடுவேன்.)

      நீக்கு
  7. மிகச் சிறப்பான கவிதை.

    // நொடிகணக்கே உன்வாழ்க்கை
    நுரைபோன்று மறைந்திடுமே!//

    இது புரிந்து கொண்டாலும் புரியாத மாதிரியே இருக்கிறோம்...

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கம் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு