▼
திங்கள், 11 ஜூலை, 2011
அறிந்தும் அறியாமலும் (சிறுகதை)
‘டேய் முரளி... உன் சித்தி போன் பண்ணினாடா... அவளோட வண்டி நடக்கலையாம். உன்னை கொஞ்சம் அனுப்ப சொன்னா... நானும் சரியின்னிட்டேன். போய் கொஞ்சம் பார்த்துட்டு வாடா....” இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கும் மகனைத் தொந்தரவு படுத்தினால் கமலம்.
“ஏம்மா.. அந்த சுடுமூஞ்சி சித்திய பாத்தாலே எனக்கு புடிக்காதுன்னு தெரியுமில்ல? நான் வீட்டுல இல்லன்னு சொல்ல வேண்டியது தானே..? நா போவமாட்டேன் போ....’
போர்வையை மேலும் இழுத்துப் போர்த்திக்கொண்டான் முரளி.
‘டேய் முரளி... அவள பத்தித் தெரியுமில்ல? நீ வெளிய போயிருக்கேன்னானா... புள்ளைங்கள வளக்கிற லட்சணமா? காலையில எங்க ஊர்சுத்த போயிட்டான்னு எங்கிட்ட கத்துவாடா... நீ போயி என்ன தான்னு பாத்துட்டு வந்திடுடா.... என் தங்கமில்ல....”
போர்வையை உருவி மகனிடம் கெஞ்சினாள் கமலம்.
‘இதுங்களுக்கு வேற வேலையே இல்ல... வண்டி ஓடலன்னா ஆட்டோவுல போவ வேண்டியது தானே.... எல்லாத்துக்கும் நான் போவனும்.... அதுவும் அந்த சித்திய பாத்தாலே எனக்கு புடிக்கல! எல்லாரையும் எதையாவது கொறை சொல்லிக்கினே திரியும். இருவத்தொன்னாம் நூற்றாண்டுல பொறந்துவந்த பட்டிக்காடு. எந்த பொண்ணும் எந்த ஆம்பளையோடையும் பேசக்கூடாது. பாத்தாக்கூட அந்த பொண்ணு அவங்க கண்ணுக்கு அவ தப்பான பொண்ணன்னு முடிவே பண்ணிடரது.... அவங்கக் கூட நான் போன... தவறிப்போய் என் பிரெண்டுங்க யாராவது ஒரு அலோ... சொல்லிடட்டுமே... அவ்வளவு தான். என் தலையும் அந்த பொண்ணோடத் தலையும் ஒண்ணா சேர்த்து உருட்டப் படும். அது மட்டுமா..? அன்றைக்கு முழுதும் எனக்கு அறம் பாடப்படும். சரியான பட்டிக்காடு... சந்தேக பிராணி.... பாவம் சித்தப்பா... இந்த சித்தி கொடுமையால குனிஞ்ச தல நிமிராத பொண்ணு மாதிறி ஆகிவிட்டார்... அவருக்காகத் தான் எல்லாத்தையும் பொறுத்துக்கிறேன்....
அவன் பாட்டுக்குத் தன் சித்தியைத் திட்டிக்கொண்டே கிளம்பினான்.
‘வா முரளி.... காலையில ஒன்பது மணிக்கு போன் பண்ணினேன். நாளு தெரு தள்ளியிருக்கிற வீட்டிலிருந்து வார ஒனக்கு ஒருமணிநேரம் ஆகுதில்ல... என்னோட வண்டிய மெக்கானிக் வந்து எடுத்துக்கினு போயிட்டான். இன்னைக்கு சண்டே! நாலான்னைக்கு சௌமியாவுக்கு பிறந்த நாள்;. அவளுக்குத் துணியெடுக்கனும். கிப்ட் ஏதாவது வாங்கனும். பத்து வயதாகிறதா..? அவ பிரெண்iடெயல்லாம் கூப்பிடணுமாம். வாரத்துல ஒரு நாள் தான் கிடைக்கிறது. உன் சித்தப்பா அவர் தங்கச்சி வீட்டுக்குப் போயிருக்கார். ஏதோ பிரச்சனையாம்! காலையிலேயே போன் பண்ணிட்டா. நிறைய வேலையிருக்குது. வா.. உன் வண்டியிலே போயிடலாம்...”
வண்டியில் ஏறி அமர்ந்தாள். முரளி வாய்திறக்காமல் வண்டியைக் கிளப்பினான். நாலய்ந்து கடை ஏறியிறங்கி குழந்தைக்குத் துணியெடுத்தாள். மளிகை பொருட்கள் வாங்கினாள்.
வெயில் கொளுத்தியது. ‘வா.. முரளி.. ஏதாவது ஜுசு குடிக்கலாம்..’ ஒரு ஓட்டலுக்குள் நுழைந்து அமர்ந்த பிறகுத் தான் பார்த்தாள். எதிர் வரிசையில் அவள் ஆபீசில் வேலைசெய்யும் கோகுலன். ஒரு பெண்ணுடன் சிரித்துப் பேசிக் கொண்டு ஐஸ் கிரீம் சாப்பிடுவதை....
அந்தப் பெண்ணை உற்று நோக்கினாள். அந்த பெண் அவன் மனைவி கிடையாது. அவனின் மனைவியைவிட இவள் இளமையாக அழகாகத் தெரிந்தாள். அந்தப் பெண் பேசி சிரித்தது இவள் காதினில் இயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது.
அதைப் பொருக்க முடியாமல் சட்டென்று எழுந்து ‘வா முரளி... நாம இளநீர் ஏதாவது குடிக்கலாம்...” அவன் பதிலை எதிர்பார்க்காமல் எழுந்து நடந்தாள்.
முரளி கோபத்துடன் அவளைப் பின்தொடர்ந்தான். அவனும் தன் சித்தி எதிர் வரிசையிலிந்தவர்களைப் பார்த்து முகம் சுறுக்கியதைக் கவனித்திருந்தான். இன்றைக்கு சித்தியின் வாயிக்கு அவலாக இவர்கள் கிடைத்து விட்டார்கள் என்று அவனுக்கு அப்பவே புரிந்து போயிற்று.
அவன் நினைத்தது போலவே கையில் இளநீரை வைத்து கொண்டு குடிக்காமல் அவர்களைத் திட்டித் தீர்த்தாள். ஏன் இப்படி நாடு கெட்டு போய்விட்டது..? பெண்கள் ஏன் அடுத்தவன் புருசனின் மேல் ஆசைப்படுகிறார்கள்..? ஆண்களின் புத்தி அரைபுத்தி என்று தெரிந்திருந்தும் அவர்களைக் கெடுப்பதே இந்த பெண்கள் தான்... பெண்ணுக்கு பெண் தான் எதிரியே... ஆண்கள் நல்லவர்களாக வாழ நினைத்தாலும் பெண்கள் தான் அவர்களை மயக்கி விடுகிறார்கள்....
அவள் அவர்களைத் திட்டத்திட்ட இளநீரே சூடாகி போய் இருக்கும். முரளி எதுவும் பேசாமல் குடித்தான். எப்படியோ அவர்களைத் திட்டித் தீர்த்துவிட்டு வண்டியில் ஏறி அமர்ந்தாள். கையில் துணிக்கடை பைகள். மளிகை சாமான் பைகள்... காய்கறி பை என்று ஏகபட்டது இருந்தது.
எல்லாவற்றையும் கையில் பிடித்து கொண்டு கட்டியிருந்த சிபான் புடைவை வழுக்கிவிடாத வாறு யமகா வண்டியில் ஏறியதும் எது எங்கே விழுந்து விடுமோ என்று பார்த்துப் பார்த்து பிடித்துக் கொண்டு வீடு வந்து சேர போதும் போதும் என்றாகி விட்டது மஞ்சுளாவிற்கு.
வீடு வந்ததும் முரளிக்கு வாங்கிய டீசர்ட்டை கொடுத்ததும் அவன் விட்டது போதுமடா சாமி என்று அவன் வீட்டிற்கு ஓடினான்.
அன்று நாள் முழுவதும் தன் கணவனிடம் இதே பேச்சு! காலையில் அந்தாளைப் பார்த்தல் கூட வணக்கம் சொல்லக் கூடாது.. அவன் நம்மை எப்படி பார்க்கிறானே.... அழகான பெண்கள் கிடைத்தால்.... உடனே கட்டிய மனைவியை மறந்துவிட எப்படித்தான் இந்த ஆண்களுக்கு எண்ணம் வருகிறதோ... இந்த பொம்பளைங்களையும் சும்மா சொல்ல கூடாது. ஆண்களிடம் எப்படி பழக வேண்டும் எப்படி பேச வேண்டும் என்ற அக்கரையே இல்லாமல்.... சே.. என்ன சென்மங்களோ....
மறுநாள் அலுவலகத்தில்...
“ குட்மானிங் மேடம்...’ என்ற கோகுலனுக்கு பதில் வணக்கத்தைச் சொல்ல மனம் வரவில்லை. பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றாள். இவளின் குணம் ஓரளவுக்குத் தெரிந்ததால் அவன் யோசனையுடன் நகர்ந்தான்.
‘குட்மார்னிங் மஞ்சு.. எப்படி இருக்கிறீங்க? நேத்து ஸாப்பிங் வந்தீங்களா? நான் உங்களைப் பார்த்தேன். ஆனால் நீங்கள் என்னை கவனிக்கலை....”
தன்னுடன் வேலைசெய்யும் மேனகா சினேகிதமாய் சிரித்தபடி சொன்னாள். ‘ம்...” என்று தலையை மட்டும் ஆட்டிவிட்டு தன் வேலையை கவனித்தாள் மஞ்சுளா. அவளுக்கு எல்லோரிடமும் சிரித்து கலகலப்பாக பேசும் மேனகாவைக் கண்டாலே பிடிக்காது. சிரிப்பைக் காட்டி எத்தனைப் பேரை வளைத்துப் போட்டாளோ.... இவளிடம் என்ன பேச்சு வேண்டி இருக்கிறது? தன் வேலையைக் கவனித்தாள்.
‘ என்ன மேனகா... உங்களுக்கும் அவள் குட்மானிங் சொல்லவில்லையா? ரொம்ப களைப்பாக இருக்கும். நேற்று பூரா அந்த சின்ன பையன் கூட ஓட்டம் இல்லையா...? “ கோகிலன் சொல்லவும் “வாயை மூடுங்கள் சார். என்ன பேச்சு பேசுறீங்க?” என்றாள் கோபத்துடன் மேனகா.
‘ஏன்... நான் உண்மையைத் தான் சொல்லுறேன். நேத்து என்னோட திருமணநாள். என் மனைவி என் தங்கைகள் என்று குடும்பத்தோட ஓட்டலுக்குப் போயிருந்தோம். அப்போ அவங்களும் அந்த பையனும் ஓட்டலுக்கு வந்தார்கள். என்னைப் பார்த்ததும் அச்சப் பட்டுக் கொண்டு போய்விட்டார்கள். தவிர அந்த பையனோட வண்டியில என்னமா ஒட்டி ஒரசிக்கினு... சேசே. என் மனைவி பார்த்துட்டு இனிமே அவக்கூட பேச்சே வச்சிக்காதீங்கன்னு சொன்னா... இவ இன்னமோ பத்தினி வெசம் போடுறா....”
“ கோகுலன் வாயை மூடுங்கள். அந்த பையன் அவங்களோட அக்கா பையன். அவனோடவா சேர்த்து வச்சி பேசுவீங்க? ஒருத்தரைச் சந்தேகப் பட ஒரு வரைமுறை இல்லையா..?” மெனகா வார்த்தையில் கோபம் கொப்பளித்தது.
“ஏன் அவங்க எல்லாரையும் வரைமுறை பார்த்தா சந்தேப் படுறாங்க? அந்த பையன் அவங்களோட அக்கா பையன் என்று நீங்க சொன்னதால தெரியுது. மத்தபடி எல்லாருக்கும் தெரியுமா...? அவங்க யாரையும் பார்க்கும் பொழுதும் விசம் கலந்து பார்க்கும் பொழுது அவங்க செய்யறதை மட்டும் எல்லோரும் நல்ல கண்ணோட்டத் தோடே பார்ப்பாங்களா...?”
பைலை எடுத்துக்கொண்டு நகர்ந்தார். அங்கே நின்று கொண்டிருந்த மஞ்சுளாவைப் பார்த்தும் பார்க்காதவர் மாதிறி. மேனகா மஞ்சுளாவை அங்கே கண்டதும் என்ன செய்வதென்று தெரியாமல் அசட்டுச் சிரிப்புடன் நெளிந்தாள். அவளைப் பார்த்து மஞ்சுளா சினேகிதமாய் புன்முறுவள் பூத்தாள்.
அறிந்து செய்தாலும் அறியாமல் செய்தாலும் தவறென்பது தவறு தானே! எதுவுமே தனக்கென்று வரும் பொழுதுதான் நன்மையிலிருக்கும் தீமைகளும் தீமையிலிருக்கும் நன்மைகளும் விளங்கும்.
அருணா செல்வம் 16.03.2011
மிக அருமை
பதிலளிநீக்குதன் வினை தன்னைச் சுடும். நல்ல கருத்துள்ள கதை அருணா.
பதிலளிநீக்கு“மிக அருமை“
பதிலளிநீக்குகுறளரங்கக் குழுவிற்கு மிக்க நன்றி!
“தன் வினை தன்னைச் சுடும். நல்ல கருத்துள்ள கதை அருணா.“
பதிலளிநீக்குகீதமஞ்சரி..
உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க!