மகிழ்வில் உழல்வாயே !
.
தனனதன தனதந்த தனனதன தன தந்த
தனன தனன தனந்த தனதானா (ஒரு கலைக்கு)
பெருமலையி லுரைகின்ற அழகுரு வளர நின்ற
பிரண வமரு ளிணைந்த ஒலிநாதா!
பெருமுயர்வு தொடர்கின்ற வழிவகை
நிறைய வந்து
பிணைய வெனது மகிழ்வி லுழல்வாயே!
இருகரமு முனையெண்ணி இணைகிற பொழுது முந்து
இமையி னருகி லொளிந்த கதிர்வேலா!
இளமையொடு வளமென்று மியைகிற நிறைவு
மின்ன
இயலு மிசையு மறிந்த வரம்தாயே!
திருவுருவ அழகெண்ண ஒளிமிகு பழநி குன்று
தெரியு முயர்வு நிறைந்து நெடுநாளாய்!
தெளிவுடைய பதிலொன்ற திருவடி நிழலில்
நின்று
தினமு னதருள் விருந்தை அடைவேனே!
முருகனுனை மனமெண்ண முதிர்நிலை அறிவு வந்து
முயலு றுவினை முடிந்த மகிழ்வாழ்வே!
முழுமனதை இசைமின்ன அமுதெனுந்
தமிழ்பொ ழிந்து
முதுமை வரையு னையெண்ணி மகிழ்வேனே!
.
பாவலர் அருணா செல்வம்
15.05.2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக