வெள்ளி, 19 மே, 2023

வலி வல்லிசை அடுக்கிசை வண்ணம் ! 73

 


ஒளியளித்துத் தொடர்வாயே !
.
தனத்தன தனத்தத் தனத்தன தனத்தத்
தனத்தனன தத்தத் தனதானா (ஒரு கலைக்கு)
 .
தழைத்திடு முழைப்பைக் கொடுத்திட எனக்குத்
    தனத்திணைய சக்தித் தருவாயே !
  தமிழ்க்கவி இயற்றித் தனிப்பெரு நலத்தைத்
    தகைத்தொளிர முக்திக் கொடுப்பாயே !
 
பிழைத்திட அழைத்துக் கரத்தொடு மனத்தைப்
    பிணைத்திடவொ லிக்கத் தொளிர்வாயே !
  பெருக்கிடு மிழப்பைத் தடுக்கிற விதத்தைப்
    பிறப்புடன மைத்துத் தருவாயே !
 
கிழக்கினி லுதித்துக் கருத்தொடு மறைத்துக்
    கிளர்ச்சியொடொ ளித்துச் சுழல்வோனே !
  கெடுப்பதை மயக்கிச் சுடர்த்துய ரொளிப்புக்
    கிடைத்துதவி பெற்றுத் திகழ்வேனே !
 
குழைத்திடு மணைப்பைக் குணத்தொடு மதித்துக்
    கொடுத்துயர வுற்றுத் துணையோடே
  குலைத்திடு மனத்தைத் தடுத்துயர் வழிக்குக்
    குவித்தொளிய ளித்துக் தொடர்வாயே !
.
பாவலர் அருணா செல்வம்
20.05.2023

கருத்துகள் இல்லை: