திங்கள், 11 மே, 2020

குறில் அகவல் தூங்கிசை வண்ணம்!

முழுமையும் எழுதிட அருள்வாயே!
(குறில் அகவல் தூங்கிசை வண்ணம்)
.
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதானா  …. (அரையடிக்கு)
.
பொழிகிற மழையென வளம்தரும் அருளொடு
   பொலிகிற சுடரென ஒளிர்வோனே!
   புவிதனி லுறைகிற உயிரினி லுழல்கிற
   புகலிட மருளிடு மெழிலோனே!

விழிதனில் மறைவென வழியினில் வருவது
   விளங்குத லரிதெனும் கொடும்நோயால்
   விளைகிற கொடுமைக ளழிவுறு முயிர்களும்
   வெறுமையி லழுகிற நிலையேனோ?

உழிதலு முணவிடும் தொழிகளு மடங்கிட
   உறைகிற இடமதி லடைந்தோமே!
   உலகினி லருமுயி ரழிகிற பிணியினை
   ஒழியுறும் அருளினை அருள்வாயே!

மொழிதனி லழகிய கருவினை மலர்ந்திட
   மொழிமையி லெழுதிட முனைவேனே!
   முருகனு னருளினை யுலகுயி ரறிந்திட
   முழமையு மெழுதிட வருள்வாயே!
.
பாவலர் அருணா செல்வம்
11.05.2020

கருத்துகள் இல்லை: