செவ்வாய், 19 மே, 2020

வலி ஒழுகல் தூங்கிசை வண்ணம்.ஒப்பி இணையெதும் அறியோமே!
.
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன தனதான (அரையடிக்கு)
.
கற்றிடு மழகெனும் நற்றமிழ் மொழியுடங்
   கற்பனை வளமிடுங் குமரேசா!
   கற்றவன் மனதிலு முற்றவன் மனதிலுங்
   கட்டுட னுரையும் மதுபாலா!

வெற்றியின் பெருமையை முட்டிய சினமுடன்
   வெட்டின மரமதி லறிந்தோமே!
   வித்தையின் விடையெனும் சுப்பிர மணியுனை
   விட்டுடன் விலகிட விழைவோமா?

முற்றிய உடலிலுந் தொற்றிய கிருமியில்
   மொத்தமு முலகமு மழுதோமே!
   முட்டிய கொடியுடஞ் சுட்டிடு பிணியினை
   முத்தென ஒளியிடுங் கதிர்வேலா!

உற்றிய நினைவொடு பெற்றவ னெனவுனை
   ஒட்டிய கரமுட மிருந்தோமே!
   உத்தியி லொளிவிடும் வித்தைய னுனதரு
   ளொப்பிட யிணையெது மறியோமே!
.
பாவலர் அருணா செல்வம்
19.05.2020