வியாழன், 14 மே, 2020

வலி அகவல் தூங்கிசை வண்ணம்துணைக்கென நடப்பது விதிதானே!
(வலி அகவல் தூங்கிசை வண்ணம்)
.
தனத்தன தனத்தன
தனத்தன தனத்தன
தனத்தன தனத்தன தனதானா (அரையடிக்கு)
.
பிறப்பினில் தவிப்புட
  னணைத்திட வளர்த்தவள்
  பிணைத்திடு மனத்தினி லிறைதாயே!
பிரித்திடுங் கரத்தினை
  உரைத்திடும் வழித்தடம்
  பிதற்றினை ஒழித்திடுங் குருசேவை!

சிறப்பினில் வளர்த்திடும்
  செயற்கையை விருப்புடன்
  செதுக்கிட உயர்த்திடும் படிப்பாலே!
செருக்கிட வசைத்திடும்
  நகைத்திடும் முகத்தவள்
  சிரிப்பினில் மயக்கிடும் வயதாலே!

மறப்பவர் விலக்கிட
  இறப்பவர் நிலைத்திட
  மலைத்திட வளிப்பது மியல்பாமே!
மனத்தினில் ஒருத்தரை
  இடத்தினில் ஒருத்தரை
  மறைத்திட நடத்திடும் செயல்வாழ்வே!

துறத்திடும் வெறுப்புடன்
  நினைத்ததை நிறைப்பதும்
  தொழிற்பட நடிப்பது முறைதானே!
தொகுத்திட வழக்கினி
  லினிப்புடன் கசப்புடன்
  துணைக்கென நடப்பது விதிதானே!
.
பாவலர் அருணா செல்வம்
14.05.2020

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சொல்லாடலை மிகவும் ரசித்தேன்...