திங்கள், 27 ஏப்ரல், 2020

இசையூட்டி யென்றும் பணிவேனே!(வண்ணம்)
.
தனதாத்த தன்ன தனதாத்த தன்ன
   தனதாத்த தன்ன தனதானா (அரையடிக்கு)
.
மயலேற்கும் வண்ண உயிரோட்ட மின்ன
   மனமேற்க விஞ்சும் தமிழ்போலே!
   மறையூட்டி நல்ல வழிகாட்டி வல்ல
   மதியூட்டும் கந்த பெருமானே!
.
அயல்நாட்டில் வந்து தமதாக்க வெண்ணி
   அனலூட்ட நின்ற கொரொனாவோ!
   அடைகாத்து நெஞ்சுள் சளியேத்தி மிஞ்சி
   அழிவூட்டும் நுண்கி ருமிதானே!
.
கயலூட்டும் கண்கள் பயமூட்டும் வண்ணம்
   கனலூட்டி யுண்ணும் பிணியாலே!
   கடைநீக்கங் கொண்டு பணவீக்கங் கண்டு
   கழிவேற்ற மின்றி யழிந்தோமே!
.
இயைபாக்கி யெங்க ளுயிர்காத்து மந்த
   இடரோட்டி யின்ப மருள்வாயே!
   இதையேற்று மின்னல் கவிதீட்டி வண்ண
   விசையூட்டி யென்றும் பணிவேனே!
.
பாவலர் அருணா செல்வம்
27.04.2020

கருத்துகள் இல்லை: