அதிக எடையை அவரைக் கரைக்கும்!
புதிய குருதியுறும்! பொன்னாய் - எதிர்ச்சக்திக்
கூட்டும்! கொழுப்பைக் குறைக்கும்! இருதயநோ
யோட்டும் உணவில் உயர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
31.03.2022
அதிக எடையை அவரைக் கரைக்கும்!
புதிய குருதியுறும்! பொன்னாய் - எதிர்ச்சக்திக்
கூட்டும்! கொழுப்பைக் குறைக்கும்! இருதயநோ
யோட்டும் உணவில் உயர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
31.03.2022
.
வாசமுள்ள மல்லி வகையில் கொகுடியொன்று!
நேசநெஞ்சைத் தன்பால் நெருங்கவைத்துப் பேசவைக்கும்!
பூந்தெனும் வெண்ணிறமும் பூவையரை ஈர்த்திடக்
கூந்தலில் சூடுவார்க் கொய்து!
.
பாவலர் அருணா செல்வம்
30.03.2022
நறுமணம் மிக்க நரந்தம் மலர்கள்
எறும்புகளைத் தன்வசம் ஈர்க்கும்! - உறுதியான
காயை ஊறுகாயாய்க் காரமுடன் உண்டுவந்தால்
தீயையொக்கும் நோயோடுந் தீர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
29.03.2022
(நரந்தை என்பது ஒருவகை புல்லாகும்)
செழிப்பான மண்ணில் செருவிளை பூக்கும்!
வழிபாட்டுக் கேற்றமலர்! வாட்டிப் பிழிந்தநீர்
காதுவலி போக்கிடும்! காய்,இலை,பூ, என்றனைத்தும்
தீதுதரும் நோயோட்டுஞ் சேர்ப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
28.03.2022
வண்ணம் மிகுந்திருக்கும் வானி மலர்களில்
எண்ணும் உயர்வென ஏதுமில்லை! - கண்கவர
மேற்கு தொடர்ச்சிமலை மேலும் விளைந்து,சில
ஆற்றோரம் பூக்க அழகு!
.
பாவலர் அருணா செல்வம்
27.03.2022.
முல்லை மலரை முகர்ந்தால் மனந்தெளியும்!
பல்வேறு நோய்போக்கும்! பற்றிடத் தொல்லையெனும்
பாதப்புண், தோலரிப்பு, பால்கட்டு நீங்கிடும்!
மாதவிடாய்ச் சீராக்கும் மாண்பு!
.
பாவலர் அருணா செல்வம்
25.03.2022
கட்டை மிருதான காஞ்சியில் தீக்குச்சி,
பெட்டிகள் செய்வார் பெருமளவு! - பட்டைநல்ல
உள்மருந்தாம்! ஆற்றோரம் உள்வந்த ழித்திடும்
வெள்ளம் தடுக்கும் விரைந்து!
.
பாவலர் அருணா செல்வம்
24.03.2022
தணக்கம் மலரில் தகவில்லை! மஞ்சள்
மணக்கும் மரக்கட்டை, மக்கள் - வணங்கிடும்
தெய்வசிலை, கட்டில்கால் செய்ய உதவிடும்!
உய்யும் உடலுக் குகந்து!
.
பாவலர் அருணா செல்வம்
23.03.2022
நாகமலர் நல்ல நறுமணம் வீசிடும்!
தேகவலிப் போக்கிடும்! தேர்ந்தஅடி பாகமரம்
திண்மை மிகுந்ததால் தேடிப் பயன்பெறுவர்!
தண்டவாள மாகும் தகவு!
.
(இது நாகலிங்கப்பூ கிடையாது)
.
பாவலர் அருணா செல்வம்
22.03.2022
மலர்கள் அடுக்கிய மாலைபோல் தொங்கும்!
திலக மரச்சாயம் செய்வார்! - திலக…விதை
கைம்மாலை மற்றும் கழுத்தணி யாக்கினர்
பைம்பொன் அழகைப் பொழிந்து!
.
பாவலர் அருணா செல்வம்
21.03.2022
சுள்ளிச் செடிகள் சுனையருகில் பூத்திடும்!
முள்கன காம்பரம் மூலமென்பார்! - கள்ளற்ற
பூவைத் தொடுத்தெடுத்துப் பூவையர் சூடினார்!
தேவையெதும் இல்லையிதில் சீர்!
.
பாவலர் அருணா செல்வம்
18.03.2022
வன்மையிதழ்ப் பூக்கள் வளைந்து கொடுக்காதாம்!
இன்காழ்வை வாசம் இனிமைதரும்! - பொன்னெனக்
கட்டையைப் போற்றுவர்! கல்லீரல் நோயகற்றும்!
கட்டுடலைக் காக்கும் கமழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
08.03.2022
எறுழம் உடைந்த எலும்பினைச் சேர்க்கும்!
இறுகும் தசையை இளக்கும்! - சிறுநீர்ப்பை
கல்லைக் கரைத்திடும்! காமாலை, மூலநோய்த்
தொல்லைகளைப் போக்கும் துணிந்து!
.
பாவலர் அருணா செல்வம்
08.03.2022
சேடல்பூங் காம்புகள் செம்பவழ வண்ணமின்னும்!
ஈடற்ற வாசம் இணைந்திருக்கும்! - வாடலின்றிக்
கொட்டிவிடும் ! பூவும் கொழுந்தும் நலமளிக்கும்!
முட்டிவீக்கம் போக்கும் முனைந்து!
.
பாவலர் அருணா செல்வம்
05.03.2022
மொட்டோ குருவியின் முட்டையைப் போலிருக்கும்!
வெட்டை,சொறி, தோல்நோய் விலகிடும்! - குட்டரோகப்
புண்ணைக் குணமாக்கும் புன்னைமலர்! ஈரமற்ற
மண்ணில் வளரும் மரம்!
.
பாவலர் அருணா செல்வம்
04.03.2022
கொடியில் நறவமலர் கொத்தாகப் பூக்கும்
நெடியமணம், தேனும் நிறைந்து ! - வடிவமோ
கைவிரலுக் கொப்பென்பார்! கார்போல் குளிர்ச்சியாய்
மைவிழியை ஒக்கும் மலர்!
.
பாவலர் அருணா செல்வம்
05.03.2022
பொன்தகடு பாதிரியின் பூக்களோ காய்க்காது!
நன்மணமும் நற்றேனும் நல்கிடும்! - பொன்பூவை
ஒற்றைத் தலைவலிக்குப் பற்றிடலாம்! வேர்,இலையும்
குற்றமின்றிக் காக்குங் குணம்!
.
பாவலர் அருணா செல்வம்
02.03.2022
மணிச்சிகைப் பூக்கள் வருடமெல்லாம் பூக்கும்
மணிபோல் வடிவ மலர்கள்! - மணிபோல்
பலவண்ணம் கொண்ட படருங் கொடிப்பூ!
நலமில்லைச் சொல்ல நயந்து !
.
பாவலர் அருணா செல்வம்
26.02.2022
மணி - காண்டாமணி
மணி - ஆபரணம்
எல்லா உடல்நோய்க்கும் ஏற்றதே ஆவிரைப்பூ!
இல்லாத தில்லை இதனிலே! - பொல்லாத
புற்றையும் போக்கிடும்! பொன்னிறத்தை உண்டாக்கும்!
நற்றவத்தோர் சொன்னதெல்லாம் நன்று!
.
பாவலர் அருணா செல்வம்
01.03.2022