திங்கள், 28 செப்டம்பர், 2020

இராவணின் உண்மைக்காதல்!



கவிகள் சொல்லும் காதலெல்லாம்
   கருத்தில் மிதக்கும் கற்பனைதான்!
தவிக்கும் இதயத் துடிப்புகளைத்
   தணிவாய்ச் சொல்ல முடியாமல்
செவிக்குள் விழுந்த செய்திகளைச்
   சிறந்த தமிழில் எழுதுவதால்
புவியில் பெறுவார் நற்பெயரே
   புதுமை  கவிகள்  படைப்பாரே!
 
அன்பின் பேரில் ஆசைகொண்ட
   அயோத்தி பெண்கள் காதலையும்
மன்னன் இடத்தில் பாசமுடை
   மக்கள் கொண்ட காதலையும்
கன்னி மாடப் பார்வையினால்
   கனிந்த சீதை காதலையும்
நன்றே அறிந்தோம் உண்மையென
   நவின்ற கதையின் மேன்மையென!
 
இம்மண் போற்ற நின்றிருக்கும்
   என்றும் அழியா தொன்மையையும்
வம்பாய் வந்த ஆசையினால்
   வளர்ந்த காதல் வன்மையையும்
நம்பி மீது நங்கையவள்
   நயந்த காதல் மென்மையையும்
கம்பன் சொன்ன காதலெல்லாம்
    கருத்தை மயக்கும் இன்பம்தான்!
 
உண்மைக் காதல் எதுவென்றால்
    உணர்வு குள்ளே விதையாக்கிக்
கண்ணுக் குள்ளே அதைவிதைத்துக்
    கருத்துக் குள்ளே நீர்தெளித்து
விண்ணின் அளவில் வளரவிட்டு
    விரும்பும் வகையில் வளம்அமைத்து
மண்ணில் இருக்கும் நாள்வரையில்
    மறவா திருக்கும் உணர்வன்றோ!
  
உள்ளம் இரண்டும் ஒன்றாகி
    உருவில் அழகு மெருகேறிக்
கள்ளம் கண்ணுள் உருவாகிக்
    கவிதை நடையில் உறவாடித்
துள்ளும் இன்பம் கனவாகித்
    துயிலை மறந்த நிலையேந்திக்
கள்போல் மயக்கும் காதலினைச்
    கதையாய்ச் சொல்லல் இன்பம்தான்!
 
கண்ணும் கண்ணும் கவ்வியப்பின்
   கரத்தைப் பிடித்த பின்னாலே
எண்ணச் சிறகை விரிக்கின்ற
   இன்ப காதல் கடமைதானே!
மண்ணில் கண்ட மங்கையினை
   மனத்துள் ஆழச் சுமந்துகொண்டு
வண்ண வாழ்வின் சுகமிழந்தும்
   மாண்ட காதல் நெகிழ்வன்றோ!
 
கடமை சேர்ந்த காதலுடன்
   கணவன் சேர்ந்தான் சீதையுடன்!
மடமை யான காதலினால்
   மதியை இழந்தாள் சூர்ப்பணகை!
உடமை என்றே தனையிழந்தும்
   ஊரும் உயிரும் போனாலும்
திடமாய் இருந்த இராவணனின்
   திளைத்த காதல் உண்மையன்றோ!
 
தவறு என்றே தெரிந்திருந்தும்
   தன்னுள் நிலைத்த காதலினால்
கவர்ந்து வந்த சீதையவள்
   காலில் விழுந்தான் ஏக்கத்தில்!
அவளின் ஏச்சு பேச்சுகளில்
   அசையா திருந்தான் ஆணவமாய்!
கவனம் முழுதும் சிதறாத
   கயமைக் காதல் உண்மையன்றோ!
 
கன்னித் தமிழில் சொல்லெடுத்துக்
   கருத்துச் செறிவில் அதைத்தொடுத்துப்
பொன்னின் அழகைப் பிணையவிட்டுப்
   பூவின் அழகில் நனையவிட்டு
அன்பும் பண்பும் உயர்ந்தோங்கும்
   அகிலம் போற்றும் காதலினைக்
கம்பன் காட்டிச் சென்றவிதம்
   கனிந்த உண்மைக் காதலடி!
 
உண்மை பொய்மை என்பதெல்லாம்
   உழலும் காதல் தனிலில்லை!
நன்மை தீமை பார்க்காமல்
   நன்றே இதயம் தொட்டபின்பே
மென்மை யாக அரும்புவிட்டு
   வன்மை யாக வளரவிட்டுத்
தொன்மை யாக்கி நலஞ்சேர்க்கும்
   துணிந்த காதல் உண்மையடி!

.
பாவலர் அருணா செல்வம்
.
(பிரான்சு கம்பன் கழகத்தில் 19.09.2017 அன்று நடந்த, “கம்பனில் எத்தனை காதலடி“ என்ற கவியரங்கத்தில் “இராவணன்“ என்ற தலைப்பில் நான் வாசித்த கவிதை)

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

என்னென்று பாடுவேன் ?

 


ஏழிசை நாதத்தை
இதயத்துள் உருக்கியதை
வாயிசை உணர்வாக
வற்றாமல் அளித்தஉன்னை   
என்னென்று பாடுவேன் ?
ஏதென்று எழுதுவேன் ?
.
துள்ளித் திரியும் பருவத்தில்
தூக்க மில்லா இரவுகளில்
அள்ளி யணைக்கும் நேரத்தில்
அமைதி கொஞ்சும் உள்ளத்தில்
 
சொல்லில் சொக்கும் உயிரிருக்கும்
சொட்டும் தேனின் சுவையிருக்கும்
நல்ல மொழியின் நயமிருக்கும்
நடன மாட விருப்பமிடும்
ஏழிசை நாதத்தை….
.
காற்றில் நம்மைப் பறக்கவிடும்
காந்தம் போலே இழுத்துவிடும் !
ஊற்றின் குளிரில் நனையவிடும்
ஊஞ்சல் கட்டி ஆடவிடும்
 
ஏற்றும் துன்ப நினைவினையும்
இசையின் அழகால் மறக்கவிடும்
ஆற்றின் நடையின் அழகான
ஆற்றல் உடலில் ஊறிவிடும்
ஏழிசை நாதத்தை….
.
ஏக்கம் கொண்ட இறைவனவன்
ஏங்கி உன்னை அழைத்தானோ
ஆக்கம் போதும் என்றேநீ
அங்கே செல்ல விழைந்தாயோ
 
நோக்கம் எதுவோ இருந்தாலும்
நொந்த எங்கள் மனத்திற்கு
ஊக்கம் கொடுக்க உன்குரலே
உந்தி மறைய வைத்தாலும்
ஏழிசை நாதத்தை…..
.

பாவலர் அருணா செல்வம்
28.09.2020

புதன், 23 செப்டம்பர், 2020

கருப்புத் துணியைக் கழற்றி எறி!

 


வாய்மை வெல்லும் எனச்சொல்லி
………வழக்கு மன்ற நடுவினிலே
தாய்மை கொள்ளும் பெண்ணிடத்தில்
………தராசைக் கையில் கொடுத்துவிட்டுத்
தூய்மை நீதி தேவதையாய்த்
………துணிவாய் உன்னை நிற்கவைத்தார்!
வாயைத் திறக்க வழியில்லை
………வாய்..மெய் பேசும் நிலையில்லை!
.
பெண்மை என்றும் மென்மையெனப்
……...பெருமை பேசி சிலைவடித்தே
வெண்மை நிறத்தில் உடைகொடுத்தே
………வெள்ளை மனமாய் ஆக்கிவிட்டார்!
உண்மை, நன்மை, தீமைகளை
………உணர்ந்து பயந்தி டுவாயென்று
கண்ணைக் கறுப்புத் துணியிட்டுக்
………கட்டி நடுவாய் நிற்கவைத்தார்!
.
குருடன் கண்ட யானைபோலோ
………குறுக்குப் பேச்சைக் கேட்டுநின்றாய்!
உருவில் உணர்த்தும் உண்மைகளை
………ஒளித்து வைக்க முடியாது!
திருட்டுப் பார்வை காட்டிவிடும்!
………தீர்ப்பைச் சரியாய்ச் சொல்வதற்குக்
கருட பார்வை வேண்டுமென்றால்
……...கண்ணைத் திறந்து நாலும்பார்!
.
பெண்ணே! உன்கண் கட்டியதால்
………பேச்சை மட்டும் கேட்டுநின்றாய்!
மண்ணை இழந்து கலங்குபவர்,
……...மானம் இழந்த பேதையர்கள்,
உண்மை மறைத்து நடிப்பவர்கள்
……...உன்றன் கண்ணால் அறிந்திடவே
கண்ணைக் கட்டி வைத்திருக்கும்
……...கருப்புத் துணியைக் கழற்றியெறி!
.
பாவலர் அருணா செல்வம்

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

அழுகை !

 



 

அடித்தாலும் அழுகைவரும்! சொல்லும் வார்த்தை
    தடித்தாலும் அழுகைவரும்! பாசம் பொங்க
நடித்தாலும் அழுகைவரும்! தவற்றைக் காட்டி
    இடித்தாலும் அழுகைவரும்! மேனி நோயால்
துடித்தாலும் அழுகைவரும்! துன்பம் தாங்க
    முடியாமல் அழுகைவரும்! கதையில் மூழ்கிப்
படித்தாலும் அழுகைவரும்! கண்ணீர்ப் பொங்கி
   வடிக்கின்ற அழுகையாவும் விதியே செய்யும்!
.
பாவலர் அருணா செல்வம்

காதல் கவிதை!

 


எழுதி வாசித்தது
பாவலர் அருணா செல்வம்
15.09.2020

திங்கள், 14 செப்டம்பர், 2020

செந்தமிழே வருக!

 


செந்தமிழே வருக!
-
(எடுப்பு)
செந்தமிழே வருக! – நாளும்
சிந்தையிலே அமர்ந்து
சொந்தமெனச் சொல்க!
-

(தொடுப்பு)
எந்தமிழே வருக! – எழுதும்
சந்தமதில் அமர்ந்து
விந்தையெலாம் தருக!
-
(முடிப்பு)
தோன்றிய காலமுன்தன் தொடக்கமும் தெரியவில்லை
தொடர்ந்திடும் உன்பெயரை மறக்கவும் முடியவில்லை
மூன்று காலமதில் மூத்தவளாய் இருந்து (2)
முன்னைத் தெய்வமென மூச்சினிலே கலந்த….. 
                           (செந்தமிழே வருக!)
-
கன்னித் தமிழென்று கவிஞர்கள் கவிபடைத்தார்!
கனிந்தநற் சுவையென்று கனித்தமிழ் எனவுரைத்தார்
பொன்னின் மேலேனப் புகழெலாம் கொண்டு (2)
பொலிந்திடும் அழகாய்ப் புதுமைகள் புணைந்த….
                       (எந்தமிழே வருக!)
-
துள்ளும் ஓசையுடன் சுவையெனக் கலந்திருந்தாய்
துாங்க லிசையாகத் தொடையுடன் நடந்திருந்தாய்!
அள்ளும் செப்பலிலும் அழகுடனே நிறைந்து (2)
ஆனந்தம் பொங்கிட அணியெலாம் அணிந்த-----
            (செந்தமிழே வருக!)                        
-
எந்தம் இதயத்தில் இன்னொளி ஏற்றிவைத்தாய்
இயற்றும் பாடலிலே இறையென நிறைந்திருந்தாய்!
சிந்து வண்ணமெனச் சீர்க்கவிகள் தந்து (2)
சிந்தையில் அமர்ந்த செழித்தயெம் உயிரே……
                  (எந்தமிழே வருக!)
- 
பாவலர் அருணா செல்வம்                          

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

வண்ண நிலவு!


எழுசீர் விருத்தம்..

.

வண்ணம் எதுவென வஞ்சி வியந்திட
         வட்ட வடிவினில் பூத்ததைக்
கண்கள் விரிந்திடக் கன்னம் சிவந்திடக்
         கட்டுக் களிப்புடன் நோக்கினாள்!
எண்ணம் விரும்பிய இன்பம் புரிந்ததை
        எட்டிப் பிடித்திடப் பார்த்திட
விண்ணில் வலம்வரும் விந்தை நிலவது
        விட்டு முகிலினுள் பாய்ந்ததே!
.
பாவலர் அருணா செல்வம்
09.09.2020