செவ்வாய், 26 மே, 2020

குறில் வல்லிசைத் தூங்கிசை வண்ணம்.வித்தகத் தொளிருங் கற்கபத் தழகே!
.
தத்தனத் தனனந் தத்தனத் தனன
தத்தனத் தனனந் தனதானா!
.
வித்தகத் தொளிருங் கற்பகத் தழகு
   வெற்றியைத் தழுவும் பெருமானே!
   வெட்டியக் கிளையும் சட்டெனத் துளிர
   வித்தையைத் தெளியுஞ் செயலோனே!
.
சொத்தெனச் சுடரும் வெப்பெனக் கொடிது
   சுட்டிடத் தழியுங் கதிர்போலே
   சுற்றிடத் தொடரும் பற்றிடப் பெருக
   சுக்கெனச் சுருலும் நிலையானோம்!
.
எத்திறத் தவருங் கற்றவர்க் கிடையி
   லெட்டிடத் துவளும் நிலைபோலே
   எத்துணைச் செயலுந் தொற்றிடத் தொடரு
   மெட்டியத் துயரங் களைவாயே!
.
முத்தமிழ்க் கவியில் வித்தகப் பொருளை
   முத்தெனப் பொளிருங் கருபோலே
   முற்றியப் பிணியுள் முற்படத் தொழிய
   முக்கியப் பணியில் மகிழ்வாயே!
.
பாவலர் அருணா செல்வம்
26.05.2020