சனி, 23 மே, 2020

மெலி ஒழுகல் துங்கிசை வண்ணம்மஞ்ஞையில் விரைந்த டைந்த பெருமானே!
.
தந்தனந் தனந்த தந்த
தந்தனந் தனந்த தந்த
தந்தனந் தனந்த தந்த தனதானா (அரையடிக்கு)
.
மங்கலம் நிறைந்து சிந்த
   நன்மைகள் புரிந்து மின்ன
   மஞ்ஞையில் விரைந்த டைந்த பெருமானே!
மந்திரஞ் சுமந்த நெஞ்சு
   கண்டிடுஞ் சிறந்த உண்மை
   மண்மனந் ததும்ப வெண்ணு மருளோனே!
.
திங்களிஞ் சுடர்ந்தி ணைந்த
   சந்தனங் கலந்தொ ளிர்ந்த
   தென்னையின் குணங்கு ழைந்த குமரேசா!
தெம்புடன் வணங்கி யுன்னை
   முந்திடுங் கரம்ப ணிந்த
   திண்மனஞ் சிதைந்த தன்மை யறிவாயா!
.
எங்கிலுஞ் சுழன்று வந்து
   நஞ்சிடம் நனைந்து வந்து
   மின்னுடல் நுழைந்த லைந்த கொடுநோயால்
இன்பெனும் மொழிந்த சொந்தம்
   சென்றிடும் மயம்நி றைந்த
   இன்மையின் விழைந்த வெம்மை யறியாயோ!
.
சங்கினம் கடல்ந னைந்து
   வங்கயின் மடல்வி ரிந்து
   சங்கமம் சினம்த ணிந்த மணிவேலா!
சந்தனங் குழைந்து டன்நின்
   வந்தனம் புகழ்ந்து நின்று
   சங்கடங் கடந்தொ ளிர்ந்து நிறைவாயே!
.
பாவலர் அருணா செல்வம்
23.05.2020

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அப்பனே முருகா...

சரணம் ஐயா...!