செவ்வாய், 17 மார்ச், 2020

போகாதே துள்ளி!(ஆனந்தக் களிப்பு)
.
(எடுப்பு)

அன்பெனும் காதலைச் சொல்லிப்பெண்ணை
ஆக்குவான் பேதையாய்ப் போகாதே துள்ளி!
.
(தொடுப்பு)

நன்றாகக் கேளடி தோழி! – பருவ
     நங்கையர் காண்பது கற்பனை ஆழி!
வன்மொழி கேட்டிடும் நாழி!முகம்
     வாடியே போய்விடும் போகாமல் வாழி!

பேச்சினில் பூசுவான் தேனை! – நீளப்
     பெண்விழி அங்கெனக் காட்டுவான் மீனை!
சாச்சிடச் சீறுவான் வானை! – வார்த்தை
     சாலமாய் உன்னிடம் காட்டுவான் பூனை!

விந்தையாய் நெஞ்சினை வாட்டும்! – செய்
     வேலையின் போதினில் இன்முகம் காட்டும்!
சொந்தமாய்ப் பாடிடும் பாட்டும்அவன்
     சொல்லிடும் சொல்லெலாம் சொர்க்கமாய்க் கூட்டும்!

பெண்ணெனும் மேனியோ வண்ணம்! – அதைப்
     பெற்றிடத் தொட்டிட உள்ளமோ எண்ணும்!
கண்ணெனும் போதையால் உண்ணும்! – காமம்
     காட்டிடும் ஆசையால் மாறிடும் பெண்ணும்!

என்னிணை என்றுனைச் சொல்வான்! – நீ
    ஏறிடும் உச்சியைக் கண்டதை மெல்வான்!
தன்கலை எண்ணிட வெல்வான்! – பிறர்
    ன்னலம் கேட்டிடக் கீழ்நிலை செல்வான்!

அன்புடன் போடுவான் வட்டம்! – உள்ளே
     ஆணையாய் நின்றிடச் சொல்லிடும் சட்டம்!
இன்பமாய்த் தீட்டுவான் திட்டம்! – திறனை
     எட்டாமல் செய்திடும் நூலிலாப் பட்டம்!

கற்றதைத் தீட்டினேன் பெண்ணே! – களவு
     காதலில் மூழ்குதல் காலத்தின் கண்ணே!
கற்பெனும் திண்மையோ விண்ணே! – அதைக்
     காத்திட நன்மைகள் பூத்திடும் மண்ணே!
.
பாவலர் அருணா செல்வம்
17.03.2020

3 கருத்துகள்:

Yarlpavanan சொன்னது…

சிறப்பான பாவிது
நல்வழிகாட்டலும் கூட

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆலோசனை சிறப்பு...

Yarlpavanan சொன்னது…

சிறப்பான பா வரிகள்
சிந்திப்போம்