குறிப்பு நுட்பம்!
ஒரு செயலின் நுட்பமானத் தன்மையைக் குறிப்பால் வெளிப்படுத்துவது “குறிப்பு நுட்பம்“ எனப்படும்.
உ. ம்
பகலவனால் நீரைப் பருகியோர் ஓய்வாய்
அகலாமல் அங்கிருக்க, மேலே
- முகம்காட்டும்
தாமரையின் தண்டெனத் தண்ணீருள் நின்றிருந்தாள்
கோமகள் நெஞ்சுள் குறித்து!
பொருள் – வெயிலின்
தாக்கத்தால் குளத்து நீரைப் பருகியவர்கள் ஓய்வுக்காக அவ்விடத்தை விட்டு அகலாமல் நின்றிருந்ததால்,
நீரின் மேல் பகுதியில் முகத்தைக் காட்டும் தாமரையின் தண்டுபோல் நீருக்குள்ளேயே
உடலை மறைத்து அழகான அந்தப் பெண் நின்றிருந்தாள்.
பாடலில்,
குளத்தில் தாமரை மலரானது தண்ணீருக்கு மேலே முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கும்.
அதன் தண்டானது நீருக்குள் மறைந்து இருக்கும். குளத்து
நீரைப்பருகிய அயலோர் அங்கிருந்து செல்லும் வரையில் அந்தப் பெண் தண்ணீருக்குள் நின்றிருந்தாள்
என்பதால் அவள் தன்னுடலை மற்றவர்களுக்குக் காட்டவிரும்ப வில்லை என்ற எண்ணக்கருத்து நுட்பமாக
உள்ளதாலும், தன்னவனுக்கு மட்டுமே தன் அழகு சொந்தமானது என்ற குறிப்பும்
உணர்த்தப் படுவதால் இது “குறிப்பு நுட்பவணி“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
08.07.2019